Monday, November 7, 2011

பிரணய கலஹம்:மட்டையடி

பிரணய கலஹம்:மட்டையடி:
_______________________________

Panguni Utharam Festival/Mattaiyadi/Pranaya Kalaham Part I

i
Rate This
Quantcast
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:
ப்ரணய கலகமும், பங்குனி உத்தர சேர்த்தியும்
1) எட்டாம் திருநாள்-நம்பெருமாள் காலையில் திருவீதிகளில் எழுந்தருளுவதில்லை.
2) தெற்கு வாசல் வழியாகக் கிழக்கே போய், அச்வத்தத் தீர்த்தத்தில் தீர்த்தம் ஸாதித்து, வேலேந்தி தா-ஸருக்கு ஆனையேற்றம் அனுக்ரஹித்து வந்தார். (வேலேந்தி தாஸருடைய ஸந்ததிகள் இல்லாததால் தற்போது இது நடைபெறுவதில்லை. இந்த வேலேந்தி தாஸர் 15ஆம் நூற்றாண்டில் நம்பெருமாள் எல்லைக்கரை மண்டபத்திற்கு எழுந்தருளும்போது ஏற்பட்ட கலகத்தில் நம்பெருமாளை நோக்கி எறியப்பட்ட கூர்மையான வேலைத் தம் மார்பிலே ஏந்திக் கொண்டார். நம்பெருமாளுக்கு ஆபத்து ஏற்படாதவண்ணம் தன் இன்னுயிரை ஈந்தார். அந்தத் தியாகத்திற்காக அவருடைய ஸந்ததியினர் யானையேற்றமாகிய மிகச் சிறந்த மரியாதையைப் பெற்று வந்தனர்.)
3) பிறகு பில்வ தீர்த்தத்தில் தீர்த்தம் ஸாதித்து எல்லைக்கரை மண்டபம் போய், எல்லைக்கரை ராமாநுஜனுக்கு மரியாதைகள் நடைபெற்று வந்தன. (கந்தாடை ராமாநுசமுனி ஜீவித தசையில் இருக்கும்போதே இளைய பட்டமாக எல்லைக்கரை இராமாநுச முனி பட்டமும் உண்டு. இப்போது கந்தாடை இராமாநுசமுனி பட்டத்தில் யாரும் எழுந்தருளியில்லாததால் எல்லைக்கரை இராமாநுச முனியாக பட்டத்தில் யாரும் இல்லை.)
4) எல்லைக்கரை மண்டபத்தில் ஸ்ரீரங்கநாராயணஜீயருக்கு மரியாதைகள் செய்விக்கப்படும்.
5) ஸ்ரீரங்கநாராயணஜீயராக முதல் பட்டத்தில் எழுந்தருளியிருந்தவர் கூரநாராயணஜீயர், நம்பெருமாளுக்குப் பல கைங்கர்யங்களை மேற்கொண்டதோடு, ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றியவர்.
6) மாலை குதிரை வாஹனத்தில் புறப்பட்டுக் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி வடக்கு வாசல் வழியாக ஊருக்குள் பிரவேசித்து, கோரதத்தின் அண்மையில் வையாளி ஆகி உள்ளே எழுந்தருளுவார்.
7) 9ஆம் திருநாள் பங்குனி உத்தரம்: நம்பெருமாள் காலையில் பல்லக்கில் புறப்பட்டு சித்திரை வீதி (மாட மாளிகை சூழ் திருவீதி என்றும் கலியுக ராமன் திருவீதி என்றும் இதற்குப் பெயர்கள் உண்டு) 1296-97 ஆம் ஆண்டு முடி சூடிய சடையவர்மன் வீரபாண்டியனுக்கு கலியுகராமன், எம்மண்டலம் கொண்ட பெருமாள் என்ற சிறப்புப் பெயர்கள் அமைந்திருந்தன. இவன் சித்திரைத் தேரை கட்டுவித்து சித்திரைத் திருநாள் நடத்தியதால் இந்த வீதி சித்திரை வீதியாயிற்று. பிறகு கி.பி. 1383ஆம் ஆண்டு விருப்பண்ண உடையார் தம் பெயரில் இந்தத் திருநாளை மீண்டும் நடத்தி வந்தார்.
8) ஆண்டின் இரண்டே நாட்களில் நம்பெருமாள் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பெற்ற பல்லக்கில் எழுந்தருளுவார். ஒன்று, பங்குனி ஆறாம் உத்ஸவத்தன்று உறையூருக்கு எழுந்தருளுவது, மற்றொன்று, பங்குனி உத்ஸவத்தின் ஒன்பதாம் நாளன்று. இந்தப் பல்லக்கில் 4-11-1813 ஆம் தேதியிடப்பட்ட வாசகங்கள் தெலுங்கில் பொறிக்கப்பட்டுள்ளன. “விஜயரங்க சொக்கநாத நாயக்கரால் ஸமர்ப்பிக்கப் பட்ட இந்தத் தங்கத் தோளுக்கினியான் பல ஆண்டு உபயோகத்தினால் பழுது அடைந்திருந்த நிலையில் கி.பி.1813-ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியாளரான திரு. ஜார்ஜ் ஃபிரான்சிஸ் டிராவர்ஸ் என்பவரால் பழுது பார்க்கப்பட்டு, உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டது. அப்போது 39.75 சேர் தங்கமும், 70.5 சேர் வெள்ளியும் இதில் சேர்க்கப்பட்டு மீண்டும் உபயோகத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
9)நம்பெருமாள் சித்திரை வீதி மற்றும் உத்தர வீதிகளில் அரையர் இசையுடன் வலம் வந்தபிறகு, ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதிக்குள் போகையில் கதவுகள் சாற்றப்பட்டு புஷ்பங்களையும் பழங்களையும் எறிந்து நம்பெருமாளைத் தடுத்துவெளியே நிறுத்தி வைப்பார்கள். கதவுகள் திறக்கப்படும்போது பெருமாள் உள்ளே போவதும், கதவுகள் சாற்றப்படும்போது பெருமாள் பின்னால் ஒதுங்குவது மாயிருக்கும்.
10) நம்பெருமாளுக்கும் ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் ஸமாதானம் பண்ணி வைப்பதற்காக மணியகாரர் நியமனத்தின் பேரில் கோயில் மஹாஜனம் நம்மாழ்வாரையும் அரையர்களையும் சமயம் சொல்லி எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வருவார். பரமபத வாசலிலிருந்து ஆழ்வாரும் அரையர்களும் சேர்ந்து தாயார் ஸந்நிதிக்கு எழுந்தருளுவர்.
11) நம்பெருமாளும் ஸமாதானத்திற்கு அருளப்பாடு ஸாதித்து நம்பெருமாள் சொல்ல வேண்டியவைகளை அரையர்கள் தாள இசையில் இசைப்பர்.
12) நம்பெருமாளுக்கும் தாயாருக்கும் இடையே நிகழும் சொற்றொடர் பரிமாற்றத்தை தம்பிரான்படி பாசுரங்கள் கொண்டு ஸேவிப்பர்கள்.
13)அரையர்கள் நம்பெருமாள் வார்த்தையை நம்பெருமாளிடம் விண்ணப்பித்து, தாயாரிடமும் விண்ணபிப்பார்கள்.
14) பண்டாரிகள் சொல்லிய தாயார் வார்த்தையை அரையர்கள் நம்பெருமாளிடம் விண்ணப்பிப்பார்கள். (நம்பெருமாள் அஞ்சு வார்த்தை, தாயார் வார்த்தையானது இரட்டிப்பாகிறபடியால் அரையர்கள் 15 தடவையும் பண்டாரிகள் 5 தடவையும் நம்பெருமாள் மற்றும் ஸ்ரீரங்கநாச்சியார் வார்த்தைகளாகச் சொல்லுவர். (1) பாசுரம் வ்யாக்யானம் நம்பெருமாள் அருளிச் செய்வதாகச் சொல்வது 5, (2) பாசுரம் வ்யாக்யானம் நம்பெருமாள் அருளிச் செய்ததாகத் தாயாரிடம் சொல்வது 5, (3 ) தாயார் அருளிச் செய்வதாக பண்டாரி சொல்வது 5 (4) தாயார் அருளிச் செய்வதை நம்பெருமாளிடம் அரையர்கள் விண்ணப்பிப்பது 5 ஆக அரையர்கள் விண்ணப்பிப்பது 15 பாட்டு அரையர்களிடம் உள்ள ஸ்ரீகோசங்களில் எழுதப்பட்டுள்ளது.
15) வார்த்தைகள் மட்டும் ப்ரணயகலகம் என்ற பெயரில் அச்சிடப்பட்டுள்ளது.
16) நம்பெருமாளுக்கும் பெரியபிராட்டியாருக்கும் ஏற்பட்ட ப்ரணயகலகம் (ஊடல்) முடிந்து, நம்பெருமாள் மணியகாரரை நியமித்து மாலை, கஸ்தூரித் திருமண், சந்தனம் இவைகளைக் களைந்து நட்டு முட்டு காப்பந்தம் தாஸநம்பி பந்தம் இவற்றுடன் ஸ்ரீரங்கநாச்சியாருக்கு ஸமர்ப்பித்திடுவார்.
17) தாயார் மூலஸ்தானத்தில், அரையர்கள் திருப்பல்லாண்டு வாழி, மங்களம் இவைகளை ஸேவித்து இரண்டு பட்டப் பெயர் அருளப்பாடுகளுடன் அரையர் சாதரா மரியாதை நடைபெறும்.
18) நம்பெருமாளிடம் பண்டாரிகளுக்கு சாதரா மரியாதை நடைபெறும்.
19)ஸ்ரீரங்கநாச்சியாரால் அனுமதிக்கப்பட்ட பிறகு நம்பெருமாள் ஸந்நிதி வாசலில், எழுந்தருளி ஆழ்வாருக்கு மரியாதை செய்து அனுப்புவார்.
20)உடனே முதல் ஏகாந்தம் நடக்கும். தளிகை நிவேதனம் நடந்து பங்குனி உத்தர மண்டபத்திற்கு நம்பெருமாள் எழுந்தருளுவார், பிறகு இரவு 10 மணி வரை பொதுஜனஸேவை நடைபெறும்.
21) இரண்டாம் ஏகாந்தம்-தீர்த்தபேரர் பெரியகோயிலிலிருந்து புறப்பட்டு வடதிருக்காவிரியில் தீர்த்தவாரி கண்டருளி, நம்பெருமாளிடம் வந்ததும் கத்யத்ரயம் ஸேவிக்கப்படும்.
22) இராமாநுசர் அருளிச் செய்த கத்யத்ரயம் என்னும் க்ரந்தம் இன்றைய தினம்தான் அவதரித்தது. கத்யத்ரய சாற்றுமுறைக்காக இரண்டாம் ஏகாந்தத்தளிகை நிவேதனம் ஆனதும் தீர்த்தபேரர் பெரியகோயிலுக்கு எழுந்தருளுவார்.
23)மூன்றாம் ஏகாந்தம் நம்பெருமாள் நாச்சியார் இருவருக்கும் பதினெட்டு ஆவர்த்தி திருமஞ்சனம் ஆகும். (எம்பெருமானார் திருக் கோட்டியூர் நம்பிகளிடம் பதினெட்டு ஆவ்ருத்தி நடந்த சிரமத்தை எம்பெருமானார்க்கு தீர்த்தருளுவதற்காக பதினெட்டு தடவை கைலி ஸமர்ப்பித்துத் திருமஞ்சனம் நடைபெறுகிறது)
24) திருமஞ்சன திருவாராதனத்தில் அரையர்களுக்கு “வசந்தனுக்கு அருளப்பாடு” என்று ஸாதித்து இசையில் தம்பிரான்கள் இயற்றிய வசந்தன் பாட்டு (கூடின காலத்தின் வர்ணனை) ஸேவிக்க இருவரும் கேட்டு மகிழ்ந்தருளுவர்.
25) மூன்றாம் ஏகாந்தத் தளிகை நிவேதனம் ஆனதும், ஸ்ரீரங்கநாச்சியார் உள்ளே எழுந்தருளுவார். நம்பெருமாள் பங்குனி உத்தர மண்டபத்திலிருந்து புறப்பட்டுத் தாயார் ஸந்நிதிக்கு முன் ஸ்ரீரங்கநாச்சியாரைப் பார்த்து திரும்பிக் கொண்டு, பிரியமனம் இல்லாமல் ஒரு ஒரு அடியாக வைத்து வைத்து மெல்ல எழுந்தருளுவார்.
26) வாசல் மண்டபம் தாண்டியதும் ஒரே ஓட்டமாக கோ ரதத்திற்கு ஏழுந்தருளுவார்.
27) கோரதத்தில் திருவீதி எழுந்தருளி உள்ளே போய் கண்ணாடி அறையில் புஷ்பகவிமான திருமஞ்சனம் செய்து கொள்வார். (புஷ்பயாகம்)
28) 10ஆம் திருநாள்: திருமஞ்சனம் செய்து கொண்டு ஸாயங்காலம் மேளமில்லாமல் இராமாநுச நூற்றந்தாதி கேட்டுக் கொண்டே வீதி எழுந்தருளி உடையவர் ஸந்நிதி வாசலில் உடையவரை அனுக்ரஹித்து, அவர் ஸமர்ப்பித்திடும் இளநீர் உபசாரத்தைப் பெற்றுக் கொண்டு த்வஜஸ்தம்பத்தின் அடியில் படிப்பு தீர்த்தம் கோஷ்டியானதும் ஸந்நிதிக்குள் எழுந்தருளுவார்.
29) பிறகு ரக்ஷா விஸர்ஜனமும் துவஜ அவரோஹணமும் ஆகும்.
30) நம்பெருமாள் பங்குனி உத்தரத்தன்று நாச்சியார் ஸந்நிதிக்கு எழுந்தருளக் காரணம் என்ன? ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்தரம் என்பது ஒரு தந்த்ரோத்ஸவம். அதாவது இரண்டு உத்ஸவகளுடைய சேர்த்தி. அவரவர்களுடைய நக்ஷத்திரத்தில் உத்ஸவம் ஆரம்பமாக வேண்டும் அல்லது முடிய வேண்டும்.
31) நம்பெருமாளுக்கு ரோஹிணி நக்ஷத்திரமாகையால் அன்று இந்த உத்ஸவம் ஆரம்பமாகி உத்தரத்தில் முடிகிறது.
32) நாச்சியாருக்கும் ரோஹிணியில் ஆரம்பமாகி அவளுடைய அவதார திருநக்ஷத்திரமான உத்தரத்தில் முடிகிறது.
33) நம்பெருமாளுக்குக் காலையிலும் இரவிலும் உத்ஸவம் நடக்க வேண்டியிருப்பதால் நாச்சியார் உத்ஸவம் தனியாக நடக்க முடியாமல் பாவனையாக நடக்கிறது.
34) உத்தரம் இவருடைய உத்ஸவத்துக்கும் கடைசி நாளாகையால் நாச்சியாருடைய சேர்த்தியில் இருப்பதற்காகப் நம்பெருமாள் இன்று ஸ்ரீரங்கசாச்சியார் ஸந்நிதிக்குச் செல்கிறார்.
ஸ்ரீரங்கம் கோயில் தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணமாசார்யர்.

(நன்றி: Sri Vaishnava Sri Krishnamachari Swamy, Editor : Paanchajanyam) 

No comments: