Thursday, November 10, 2011

அஹோபில மடம் 44ஆவது பட்டம் ஸ்ரீமத்அழகியசிங்கரின் ராஜகோபுரத் திருப்பணி

நன்றி: பாஞ்சஜன்யம் ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார்
______________________________

 

Srirangam NamperumaL Oonjal Utsavam

 
 
 
 
 
 
i
 
2 Votes
Quantcast
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

நம்பெருமாள் கண்டருளும் ஊஞ்சல் திருநாள் (25-10-2010 தொடங்கி 2-11-2010 ஈறாக)
1. முதல் திருநாள் :  இது ஒன்பது நாள் உத்ஸவம்.  ஐப்பசி மாதம் கிருஷ்ணபக்ஷ ஏகாதசியன்று இந்த உத்ஸவம் பூர்த்தியாக வேண்டியதால், த்ருதீயை அன்று இது ஆரம்பிக்கப்படும்.
2.  த்ருதீயை அன்று நம்பெருமாள் நித்தியப்படிபோலே பெரிய அவசரத் திருவாராதனமாகித் தளிகை அமுது செய்தபிறகு, உத்ஸவத்துக்காக ரக்ஷா பந்தனம் செய்து கொள்வார்.
3. இந்த உத்ஸவத்துக்கு ம்ருத் ஸங்ரஹணம் (திருமுளைக்காக மண் எடுத்தல்) கிடையாது.  இது மத்தியானத்துக்குமேல் நடக்க வேண்டிய உத்ஸவம் ஆதலால், பெரிய அவசரம் அமுது செய்த பிறகுதான் நம்பெருமாள் புறப்படுவார்.
4. ரக்ஷாபந்தனமானதும், ஸந்நிதி வாசலில் திருச்சிவிகை என்ற பெரிய ஆஸனத்தில் நம்பெருமாளும் உபயநாய்ச்சி மார்களும் ஏராளமான திருவாபரணங்கள் அணிந்துகொண்டு எழுந்தருளுவார்கள்.
5. தினந்தோறும் சட்டைப்பாளம், கபாய் என்ற உடைகளில் ஏதேனும் ஒன்று தரித்துக்கொண்டு அதன்மேல் திருவாபரணங்களை அணிந்து கொள்வார்.
6. அத்யயனோத்ஸவம், பவித்ரோத்ஸவம், கோடைத் திருநாள் நீங்கலாக மற்றைய எல்லா உத்ஸவங்களிலும் முதல் திருநாளில் நம்பெருமாள் உபயநாய்ச்சிமார்களோடுதான் எழுந்தருள்வது வழக்கம்.
7. இந்தத் திருநாள் முழுவதும் நம்பெருமாள் புறப்பாட்டுத் தளிகை அமுது செய்து புறப்படுவார்.
8. நம்பெருமாள் புறப்பட்டு த்வஜஸ்தம்பத்துக்கு அருகே ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக் காப்புக் கண்டருளி, கந்தாடை இராமானுசனுக்கு ஸேவை ஸாதித்த பிறகு (தற்போது இந்தப் பட்டத்தில் யாரும் எழுந்தருளவில்லை), மண்டபம் போய் திரை ஸமர்ப்பித்து, ஏகாந்தமாய் ஊஞ்சலில் எழுந்தருளியதும், அலங்காரம் என்னும் தோசை வடை, ப்ரஸாதம், அமுது செய்வித்து திரை வாங்கப்படும்.
9. ஊஞ்சல் மண்டபத்தில் கந்தாடை இராமானுச முனி முழு திருவுருவச்சிலை தூணில் அமைந்துள்ளது.
10. பிறகு ஸ்தாநீகருடைய  அருளப்பாடுகளுடன் திருவாராதனம் வெகு விமரிசையாக நடைபெறும்.
11. அதன்பிறகு திரை ஸமர்ப்பித்து வெள்ளிச் சம்பா அமுது செய்வித்ததும், திரைவாங்குகையில், நம்பெருமாள் ஊஞ்சலாடிக் கொண்டே மங்களாரத்தி கண்டருள்வார்.
12. திருவாராதனத்தின்போது ஸேவிக்கப்படும் திருப்பாவையோடு “மாணிக்கங்கட்டி” (பெரியதிருமொழி-1.3), “மன்னுபுகழ்” (பெருமாள் திருமொழி 8ஆம் திருமொழி) ஆகிய பதிகப் பாசுரங்கள் அரையர்களால் ஸேவிக்கப்படும்.
13. ஊஞ்சலுக்கு இருபுறத்திலும் கைங்கர்ய பரர்களால் தங்கச்சாமரம் வீசப்படும். கீழே ஊஞ்சல் மண்டபம் படிக்கட்டிலிருந்து தென்புறத்தில் ஸ்தலத்தார்கள், தீர்த்த மரியாதைக்குரியவர்கள், அத்தியாபகர், மணியகாரர் முதலானோர் வரிசையாய் எழுந்தருளியிருப்பார்கள்.
14. அர்ச்சகர் ஊஞ்சலை ஆட்டிக் கொண்டே வெற்றிலையை அடிக்கடி நம்பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணி கீழே உள்ளூரார் ஊழியக்காரர் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் காளாஞ்சியில் சேர்ப்பார்.
15. ஒருமணி நேரத்துக்குக் குறையாமல் இந்த ஊஞ்சல் வைபவம் நடக்கையில் தாம்பூலம் முழுவதும் நம்பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணிய பிறகு, அர்ச்சகர் அந்த தாம்பூலங்களைக் கீழே கொண்டுபோய் மணியகாரரிடம் ஸாதிப்பார்.
16. பிறகு ஸ்தானீகர் ஊஞ்சல் மண்டபம் முன்புறத்திலிருந்து “சாரீயோம்” என்று வெகு கம்பீரமாய் உரக்க அருளப்பாடு ஸாதித்திடுவார்.
17. அதன்பிறகு தீர்த்தம், மற்றும் திருப்பணியார வினியோகம் ஆனபிறகு நம்பெருமாள் புறப்பட்டு அரையர் தாளத்துடன்  உள்ளே போய் மேலப்படியில் படியேற்றம் கண்டருளி கருவறைக்கு எழுந்தருள்வார்.
18. ஒன்றான கந்தாடை இராமானுசமுனி ஊஞ்சல் மண்டபம் கட்டி இந்த உத்ஸவத்தையும் ஏற்படுத்தியதால், தினந்தோறும் அவருடைய மடத்துக்கு விட்டவன் விழுக்காடு ப்ரஸாதம் வீரவண்டி சேமக்கல கோஷங்களோடு அனுப்பி வைக்கப்படும்.
19. இரண்டாம் திருநாள் : நம்பெருமாள் காயத்ரி மண்டபத்தில்அமுது பாறையின்மேல் தோளுக்கினியானில் எழுந்தருளி, புறப் பாட்டுத் தளிகை அமுது செய்து புறப்பட்டு, ஊஞ்சல் மண்டபத்தைச் சென்றடைந்து  எல்லா வைபவங்களையும் கண்டருள்வார்.
20. ஆறாம் திருநாள் வரையிலும், எட்டாம் திருநாளன்றும் இதே மாதிரி நடைபெறும்.
21. ஏழாந்திருநாள் : நம்பெருமாள் ஸந்நிதி வாசலில் உபயநாய்ச்சிமார்களோடு எழுந்தருளி பஹிரங்கமாக சூர்ணாபிஷேகம் செய்துகொண்டு புறப்பட்டு, மற்றைய நாட்கள் போல நேராக மண்டபம் போகாமல், ஆர்யபட்டாள் வாசலுக்கு வெளியே வந்து, கொட்டார வாசலில் நெல் அளவு கண்டருளி, நாய்ச்சியார் ஸந்நிதி முன் மண்டபத்தில் ஸ்ரீரங்கநாய்ச்சியார் செய்துவைக்கும் திருவந்திக்காப்பையும் பெற்றுக் கொண்டு திரும்பி வந்து மண்டபம் எழுந்தருள்வார். மற்றைய காரியங்கள் மற்றைய நாட்களில் நடைபெறுவது போலவே நடைபெறும்.
22. மதுரகவி நந்தவன உபயம் : இந்த ஏழாந்திருநாள் உத்ஸவம் மதுரகவி நந்தவனத்தாரால் நடத்தி வைக்கப் படுகிறது.
23. இன்றைய தினம் தளிகை முதலிய ப்ரஸாதங்களை ஏராளமாகப் பண்ணி நம்பெருமாளுக்குக் கண்டருளப் பண்ணுவது தவிர, இந்த நந்தவனத்தார் மண்டபத்தை வெகு நேர்த்தியாக அலங்கரித்திடுவர்.
24. கருட மண்டபத்திலிருந்து ஊஞ்சல் மண்டபம் வரைக்கும் மேலே மலர்களாலும் ஓலைகளாலும் தடுக்குகள் கட்டி இடைவிடாமல் தென்கலைத் திருமண், சங்கு, சக்கரம் இவைகளால் அலங்கரிக்கப்படும்.
25. ஏழாந்திருநாளன்று செய்யப்பட்ட இந்த அலங்காரம் உத்ஸவம் முழுவதும் பாதுகாப்புடன் வைக்கப்படும்.
26. எட்டாம் திருநாள்: இரவு நம்பெருமாள் உள்ளே எழுந்தருளியதும் சயனமூர்த்திக்கு சயனம் ஸமர்ப்பிக்கப் படும்.
27. ஒன்பதாம் திருநாள் – சாற்றுமுறை :  நம்பெருமாள் காலையில் முதல்காலத் திருவாராதனம் கண்டருளி, பொங்கல் அமுது செய்து, காத்திருக்கும் ஸ்நானபேரரோடு, சந்திர புஷ்கரிணியில் தீர்த்தவாரி நடத்தி மண்டபம் எழுந்தருள்வார்.
28. மண்டபத்தில் ஊஞ்சலுக்குக்கீழ் திருமஞ்சன வேதியில் திருமஞ்சனம் ஆனபிறகு, நம்பெருமாளை ஏகாந்தமாய் ஊஞ்சலில் எழுந்தருளப்பண்ணித் திருவாபரணங்கள் ஸமர்ப்பிக்கப்படும்.
29. அலங்காரம் அமுது செய்தபிறகு திரைவாங்கி வேத விண்ணப்பமும், கடதீபத்தினால் கும்பஹாரத்தியும்  நடந்து, வெள்ளிச் சம்பாத் தளிகை அமுது செய்விக்கப்படும்.
30. இவ்வளவு நாளாக நடந்ததைவிட இன்று ஊஞ்சலாட்டம் அதிக நேரம் நடை பெறும்.
31. தீர்த்த வினியோகம் முதலியவை ஆனபிறகு நம்பெருமாள் புறப்பட்டு  உள்ளே எழுந்தருள்வார்.
32. ரக்ஷாபந்தனம் களைந்த பிறகு, செலவு சம்பாவும் அரவணையும் அமுது செய்விக்கப்படும்.    ***

Vijayadasami in Srirangam Thayar Sannidhi

 
 
 
 
 
 
i
 
1 Votes
Quantcast
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

புரட்டாசி நவராத்ரி நவமி, மற்றும் தசமி ஆகிய நாட்களில் நடைபெறும் வைபவங்கள்
(16, மற்றும் 17-10-2010)
ஐ.நவமி அன்று நடைபெறும் வைபவங்கள்
1. பெரியபெருமாள் பெரிய அவசரம் அமுது செய்ததும், கருகூல நாய்ச்சியார், நாயகர் அறை நாய்ச்சியார், சுக்ரவார நாய்ச்சியார், (இவர் பரிமள அறையில் எழுந்தருளியுள்ளார். இது யாகசாலைக்கு அருகில் உள்ளது.) அரவிந்த நாய்ச்சியார், (அன்னமூர்த்தி ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.) ஹயக்ரீவர், ஸரஸ்வதி, செங்கமல நாய்ச்சியார், குருகூர் நாய்ச்சியார், (இவர் கோசாலையில் எழுந்தருளியுள்ளார்.)  ஆகியோர்களுக்கும், மேளம் முதலிய வாத்தியங்கள், துவாரங்கள் முதலியவற்றுக்கும் திருவாராதனம், கடதீபம், அமுதுபடிகள் ஸமர்ப்பித்தல் ஆகியவை நடைபெறும்.
2. ஸ்ரீரங்கநாய்ச்சியாருக்குப் பெருமாள் மாலை அனுப்புதல்: ஸ்ரீரங்கநாய்ச்சியார் தினந்தோறும் போலப் புறப்பட்டு மண்டபம் எழுந்தருளுவார்.
3. கொலுமண்டபத்தில் நாய்ச்சியாருக்கு பஹிரங்கமாகத் திருமஞ்சனமாகி தளிகை அமுது செய்வித்ததும், பெரியபெருமாளிடமிருந்து மாலை வரும்.
4. நம்பெருமாள் அர்த்தஜாம பூஜையான செலவுசம்பா, திருவாராதனமும், தளிகையும், அரவணைப் பிரஸாதமும் கண்டருளிய பிறகு, நட்டுமுட்டு வாத்திய கோஷத்தோடு நம்பெருமாளுடைய கஸ்தூரித் திருமண் காப்பு, வஸ்திரம், சாற்றுபடி, மாலை ஆகியவற்றைக் களைந்து அர்ச்சகர்  ஸஹஸ்ர தாரைத்தட்டில் வைப்பார்.
5. பெரிய கோயில் ஸ்தாநீகர் மாலையை சிரஸா வஹித்து தாஸநம்பி பந்தத்துடனும், காப்பந்தத்துடனும் வாத்திய கோஷத்துடனும் வெளியே கொண்டு வருவார்.
6. அப்பொழுது குதிரையும் காவேரியில் தீர்த்தமாடிப் பெருமாளுடைய மாலையைப் பின் தொடர்ந்தே நாய்ச்சியார் ஸந்நிதிக்கு எழுந்தருளப்பண்ணப்படும்.
7. மாலையை ஸ்தாநீகர் தம் சிரஸ்ஸினின்று இறக்கி அர்ச்சகரிடம் கொடுத்தவுடன், அர்ச்சகர் அதை நாய்ச்சியாருக்குச் சாற்றி, நாய்ச்சியார் சாற்றிக்கொண்டிருக்கும் மாலையைக் களைந்து, ஸ்தாநீகருக்கு ஸாதித்து ஸேவை மரியாதை செய்து வைப்பார்.
8. நாய்ச்சியாருக்கு எதிரில் நிற்கும் குதிரை நம்பிரானுக்கும் திருவாராதனம் நடந்து, பிரஸாதமும், மொச்சைச் சுண்டலும் நிவேதனம் செய்யப்படும்.
9. உத்ஸவபூர்த்தி: பிறகு, நாய்ச்சியார் தீர்த்த விநியோகம் முதலியவை ஆனபிறகு, புறப்பட்டுக் கண்ணாடியறை வாசல் சேர்ந்ததும், திருத்தாழ்வரை தாஸர் எழுந்தருளி, படிப்பு ஸேவிப்பது ஒருகாலத்தில்  நடந்து வந்தது. இது இப்போது நடைபெறுவ தில்லை.
10. ரக்ஷாபந்தன விஸர்ஜனம்: நாய்ச்சியார் உள்ளே எழுந்தருளியதும் ரக்ஷாபந்தனம் களையப்படும். நாய்ச்சியாருக்குத் திருவாராதனமாகி ரக்ஷா பந்தனத்தைக் களைந்து, செலவுசம்பா தளிகையும், அரவணையும் அமுது செய்வித்து, வெளியே நாய்ச்சியாருக்கு எதிரிலிருக்கும் குதிரை நம்பிரானுக்கும் திருவாராதனமாகி, ரக்ஷாபந்தனம் களைந்து, மொச்சைச்சுண்டலும், பிரஸாதமும் நிவேதனமாகும்.
11. பிறகு, குதிரை நேராகப் பெரியபெருமாள் ஸந்நிதிக்குப்போய் பெரிய பெருமாளுக்கெதிரே நிற்க, அங்கே குதிரைக்கு மறுபடியும் ரக்ஷாபந்தனம் முதலியவை நடக்கும்.
12. குதிரைக்கு ரக்ஷாபந்தனமானதும் பெரியபெருமாள் பால் அமுது செய்வார்.
13. விஜயதசமி:  உதயத்திலேயே நம்பெருமாள் பொங்கல், பெரிய அவசரம் திருவாராதனமும், தளிகையும் கண்டருளிப் பல்லக்கில் புறப்பட்டு, கீழைக்கோட்டை வாசல் மார்க்கமாய் புறப்பாடு கண்டருளி, பலவிடங்களில் வழிநடை உபயங்கள் அமுது செய்து, காட்டழகியசிங்கர்  ஸந்நிதியிலுள்ள வெளிமண்ட பம் எழுந்தருளுவார்.
14. மண்டபத்தில் திருவாராதனமாகித், தளிகை அமுது செய்வித்து, தீர்த்த விநியோகம், பிரஸாத விநியோகம் முதலியவை நடந்த பிறகு, மாலையில் குதிரை வாஹனத்தில் எழுந்தருள்வார்.
15. வில்லும் அம்பும் வந்தபிறகு நம் பெருமாள் புறப்பட்டு வெளியே வந்து, சிங்கர் ஸந்நிதி வாசலிலுள்ள நாலுகால் மண்டபம் எழுந்தருளுவார்.
16. நம் பெருமாள் அம்பு போடுதல்: அர்ச்சகரும் கோயில் புரோஹிதரான புள்ளச்சி வாத்தியார் ஆகிய இருவரும் எதிரி லுள்ள வன்னிமரத்தடியில் போய் மரத்துக்குத் திருவாராதனம் செய்வார்கள்.
17. மரத்துக்குத் தளிகை அமுது செய்வித்ததும், அர்ச்சகர் நம்பெருமாளிடம் வந்து கையில் வில்லைப்பிடித்து நாலு திக்குக்கும் நாலு அம்புபோடுவார். புள்ளச்சி வாத்தியார் கையில் சித்தமாய் வைத்திருக்கும் வன்னித்தழை கோஷ்டிக்கு விநியோகம் செய்யப்படும்.
18. பிறகு நம்பெருமாள் புறப்பட்டு கீழை அடைய வளஞ்சான் தென்பாதி வழியாகவே சாத்தாரவீதி யெழுந் தருளித் தெற்கு வாசலில் தெற்கு முகமாய்த் திரும்பி, அதிவேகமாய் ராயகோபுரம் வரைக்கும் வேட்டையாடிக் கொண்டு போய்த் திரும்புவார்.
19. நம்பெருமாள் வடக்கு முகமாய்த் திரும்பி பானகம், வடைப்பருப்பு அமுது செய்து, நேராக ஸந்நிதிக்குள் போய், கருகூல நாலுகால் மண்டபத்தில் (மீனாக்ஷி மண்டபம்) திருவந்திக்காப்பு செய்து கொண்டு சந்தன மண்டபம் எழுந்தருளியதும், திரை ஸமர்ப்பிக்கப்படும். பிறகு திருமஞ்சனம் நடைபெறும்.

 
 
 
 
 
 
i
 
Rate This
Quantcast
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

நவராத்ரி உத்ஸவம்
(8-10-2010 முதல் 16-10-2010 ஈறாக)
1. நவராத்ரி முதல்நாள் வேதவிண்ணப்பம்: ஸ்ரீரங்கநாய்ச்சியார் நித்தியப்படிபோல காலையில் திருவாராதனமாகி பொங்கல் அமுதுசெய்ததும், வேதவ்யாஸ பட்டர் எழுந்தருளி வேதவிண்ணப்பம் நடைபெறும்.
2. சென்ற வருடம் மார்கழி அத்யயனோத்ஸவ ஏகாதசி அன்று பெரிய பெருமாள் திருமுன்பே வேதம் தொடங்கின வேதவ்யாஸ பட்டர் தான் மறுவருடம் நவராத்திரி முதல் திருநாளன்று ஸ்ரீரங்கநாய்ச்சியார்  ஸந்நிதியிலும் வேதம் தொடங்கும் முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.
3.  ஸ்ரீரங்கநாய்ச்சியார் பொங்கல் அமுது செய்ததும் வேதவ்யாஸ பட்டரைத் திருமாளிகையிலிருந்து எழுந்தருளப் பண்ணி வருவர்.
4. அவர் கொலு மண்டபம் வந்து அங்கே எழுந்தருளியிருப்பார்.
5. ஸ்தானீகர் உள்ளே யிருந்தவாறே வேதவ்யாஸ பட்டருக்கு அருளப்பாடிட்டதும், வேதவ்யாஸ பட்டர் உள்ளே வந்து ஸ்தாநீகரிடம் தேங்காயைக் கொடுத்துவிட்டு, தண்டன் ஸமர்ப்பித்து கர்பக்ருஹத்துக்குள் சென்று எழுந்தருளி                    “இஷே த்வோர்ஜே த்வா”  என்ற  யஜுர்வேதம் முதல் பஞ்சாதியைச் சொல்வார்.
6. ஸ்தாநீகர் வேதவ்யாஸ பட்டருக்குத் தீர்த்தம், சந்தனம் ஸாதித்ததும், நாய்ச்சியார் ஸந்நிதி பண்டாரி, பட்டருக்குத் தொங்கு பரியட்டம் கட்டி, ஸ்ரீரங்கநாய்ச்சியார் சாற்றிக் கொண்டிருக்கும் மாலையைக் களைந்து ஸாதித்து ஸ்ரீசடகோபமும் ஸாதிப்பார்.
7.  பிறகு ருக், யுஜுஸ், ஸாம, சந்தஸ்ஸாம, அதர்வண முதலான வேதங்களுக்கும் தனித் தனியாய் அருளப்பாடாகும்.
8. அந்தந்த வேதங்களுக்கு பாத்தியப்பட்டவர்கள் வந்து ஸ்தாநீகரிடம் தேங்காய் கொடுத்து, தண்டம் ஸமர்ப்பித்து கர்பக்ருஹத்துக்கு வெளியிலிருந்தபடியே தத்தமக்கு உரித்தான வேதத்தைச் சொல்லி, தீர்த்தம், சந்தனம் மட்டும் பெற்றுக்கொண்டு போவார்கள்.
9. பிறகு ரக்ஷாபந்தனம். நாச்சியாரை அமுது பாறைக்கும் கர்ப்க்ருஹத்வாரத்துக்கும் மத்தியில் எழுந் தருளப்பண்ணி, அமுது பாறையில் கலசம் ஸ்தாபித்து, நாய்ச்சியாருக்குத் திருமஞ்சனம் நடக்கும்.
10. திருமஞ்சனமானதும், நாய்ச்சியார் உள்ளே எழுந்தருளுவார். திருவாராதனம் ஆகி பெரிய அவசரமும் அமுது செய்தருள்வார்.
11. உடனே யாகசாலையில் ஹோமம் நடந்து உத்ஸவத்துக்காக ரக்ஷாபந்தனம் செய்யப்படும்.
12. அப்பொழுது குதிரை வாஹனம் வடதிருக்காவேரியில் தீர்த்தமாடி நாய்ச்சியார் ஸந்நிதி வந்து கொலு மண்டபத்தில் நாய்ச்சியாருக்கெதிரே எழுந்தருளப் பண்ணப்படும்.
13. முதலில் நாய்ச்சியாருக்குத் திருவாராதனமும் ரக்ஷாபந்தனமும் ஆனபிறகு, குதிரைக்குத் திருவாராதனமும் ரக்ஷாபந்தனமும் நடைபெறும்.
14. மொச்சைச் சுண்டலும் பிரஸாதமும் நிவேதனமாகும்.
15. நாய்ச்சியார் கொலு: நாய்ச்சியார் தோளுக்கினியானில் எழுந்தருளி, வலம் வந்து, தென்புறத்தில் அமைந்துள்ள நாலுகால் மண்டபத்தில் திருவடி விளக்கிப் பானகம், வடைபருப்பு (விடாய் பருப்பு) அமுது செய்தருள்வார்.
16. ஸ்தலத்தார் ஆசார்ய புருஷர்கள் கோஷ்டிக்குத் தீர்த்த விநியோகமானதும் படியேற்றமாகிக் கொலு மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளி மண்டபமெழுந்தருளுவார்.
17. பிறகு, அலங்காரம் அமுது செய்தருள்வார்.
18. ஆர்யபட்டாள் வாசலிலிருந்து (ஸ்ரீரங்கநாய்ச்சியார் ஸந்நிதியின் முகப்பு வாசலுக்கு ஆர்யபட்டாள் வாசல் என்று பெயர்) கோயில் அதிகாரியை காப்பந்தத்துடன் பிரதக்ஷிணமாய் அழைத்து வர, அவர் நாய்ச்சியாரிடம் ஸேவை மரியாதை பெற்றுக் கொண்டு மணியகாரரோடு வெளியே போவார்.
19. ஆரியபட்டாள் வாசலுக்கருகில் கம்பத்தோரமாய் மணியகாரரும், வடபுறம் மண்டபத்தில் கோயில் அதிகாரியும், தேவஸ்தான ஊழியர்களும் அமர்ந்திருப்பார்கள்.
20. நாய்ச்சியாருக்குத் திருவாராதனம் ஆரம்பித்தவுடன் யானை நொண்டியடித்துக் கொண்டு மௌத்ஆர்கன் இசைத்தும், சாமரம் வீசியும் அதிகாரிகள் இருக்குமிடம் நோக்கிச் செல்லும்.
21. நாதஸ்வரக் கச்சேரி நடைபெறும்; இடைவிடாமல் நிலவரிசையும் மத்தாப்பும் கொளுத்தப்பட்டு அதிர்வெடியும் வெடிக்கும்.
22. ஒரு மணி நேரத்துக்கு மேலாகவே வெளியில் இந்த வைபவம் நடந்து கொண்டிருக்கையில், நாய்ச்சியாருக்குத் திருவாராதன மாகி, பட்டர் எழுந்தருளி ஆராதனாங்கமான வேதவிண்ணப்பமும் நடைபெறும்.
23. வெளியே நடக்கும் கொலுக் கச்சேரியும் முடிவு பெறும்.
24. நாய்ச்சியாருக்குக் கும்பஹாரத்தியானதும், வெள்ளிச் சம்பா நிவேதனம், தீர்த்த விநியோகம், பாவாடை போட்டு பிரஸாத விநியோகம் முதலியவை நடந்து திரை ஸமர்ப்பிக்கப்படும்.
25. நாய்ச்சியார் தோளுக்கினியானில் எழுந்தருளிப் புறப்பட்டு, எதிரிலுள்ள யானைப்படிக்கட்டு வழியாய் இறங்கி, அரையர் தாளத்துடன் ஸேவிக்கும் இசையோடு கண்ணாடியறைக்கு எதிரிலுள்ள படிக்கட்டில் படியேற்றம் கண்டருளி உள்ளே எழுந்தருளுவார்.
26. நவராத்ரி முதல் எட்டு திருநாட்களிலும் இதேமாதிரிதான் உத்ஸவம் நடைபெறும்.
26. ஸரஸ்வதி பூஜையன்று வெளியே வாத்தியக் கச்சேரி முதலியவை நடைபெறாது.                              ***


 
அஹோபில மடம் 44ஆவது பட்டம்   ஸ்ரீமத்அழகியசிங்கரின்
                                    ராஜகோபுரத் திருப்பணி

                                    ___________________________
1. ஆவணி ஹஸ்த நக்ஷத்ரத்தில் தோன்றியவர் ஸ்ரீஅஹோபில மடம் 44ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஜீயர் ஸ்வாமி.
2. ஸ்ரீரங்கஸ்ரீயை வளர்த்த பெரியோர்களில் குறிப்பிடத்தக்கவர் முக்கூர் அழகியசிங்கர் என்று ப்ரஸித்தி பெற்ற 44ஆவது பட்டம் அழகியசிங்கர் ஸ்வாமியாவார். இவருடைய திருநக்ஷத்ர உத்ஸவம் 10-9-2010 அன்று நடைபெறவுள்ளது.
3. 236அடி உயரமும், 13 நிலைகளும் கொண்ட தென்கிழக்கு ஆசியாவிலேயே மிக உயர்ந்த கோபுரமான ஸ்ரீரங்கம் தெற்கு ராயகோபுரத்தைக் கட்டி முடித்தவர் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்வாமி.
4.  ஸ்ரீமதழகியசிங்கரின் அயராத உழைப்பினால் இக்கோபுரம் இனிதே கட்டி முடிக்கப்பட்டது.
5. பதின்மூன்று நிலைகள் கொண்ட இந்தக் கோபுரத்தைக் கட்டப் பல தார்கமீகர்களின் உதவிகொண்டு சில நிலைகளைக் கட்டுவித்து, வேலை செய்பவர்களை உத்ஸாஹப்படுத்தி, கோபுரத்தைக் கட்டி முடித்தார்.
6. அழகியசிங்கரின் உழைப்பு பல கோடி ரூபாய்க்கு நிகராகும்.
7.ஸ்ரீமத் அழகியசிங்கர் 25-3-1987ஆம் தேதியிட்ட ஸ்ரீநரஸிம்ஹப்ரியாவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். “அத்ய  மே  ஸபலம்  ஜந்ம  ஜீவிதம்  ச  ஸுஜீவிதம் ஐ கோபுரம்  ரங்கநாதஸ்ய  ஸம்பூர்ணம்  பƒயதோ  மம ஐஐ” (‘எப்பொழுதும் செய்யக்கூடிய கைங்கர்ய ஸாம்ராஜ்ய பட்டாபிஷேகமானது முக்த தசையில்தான் கிடைக்கும்.  பரமபதம்போய் நான் நிரந்தரமாகச் செய்யக்கூடிய கைங்கர்யத்தை இந்த தசையிலேயே பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கக்ஷேத்திரத்தில் ஸ்ரீரங்கநாதன் எனக்கு அநுக்ரஹித்தருளினான்.  இங்கு எனக்கு இந்த ராஜகோபுர கைங்கர்யத்திற்காகத்தான் ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ஸ்ரீரங்கவிமானத்தில் ஸ்ரீமந்நாராயணன் எழுந்தருளினானோ என்று நினைப்பதுண்டு”.
8. “இந்த உயர்ந்த ராஜகோபுர கைங்கர்யத்தை அன்று அவனே ஆரம்பித்தான்.  இன்று அவனே பூர்த்தி செய்து கொண்டான்” அதாவது இந்த கோபுரநிர்மாண கைங்கர்யத்தை ஸ்ரீரங்கநாதன் தன் ப்ரீதிக்காகத் தானே செய்து முடித்து விட்டான்.
9. 1980ஆம் ஆண்டு ஒருநாள் ஸ்ரீமதழகியசிங்கர் கனவில் திவ்யதம்பதிகள் தோன்றி,  ‘நம்முடைய ஸந்நிதிக்கு முன்புள்ள மொட்டை ராயகோபுரத்தை மிகப் பெரிய கோபுரமாகக் கட்டி முடிக்கக் கடவீர்’ என்று நியமித்ததாகவும், அதற்கு ஸ்ரீமதழகிய சிங்கர் ‘எனக்கு வயதாகி விட்டதே! கிழவனான என்னால் இவ்வளவுபெரிய கைங்கர்யத்தைச் செய்து முடிக்க முடியுமா?’ என்று கேட்க, ‘அதனால் என்ன? இந்தக் கிழவனுக்குக் கிழவனான நீர்தான் கைங்கர்யம் பண்ண வேண்டும்’ என்று நியமிக்க, ‘இதைக் கட்டுவதற்கு வேண்டிய பணத்திற்கு என்ன செய்வேன்?’ என்று கேட்க, ‘நாம் கடாக்ஷிக்கிறோம்’ என்று பிராட்டி அநுக்ரஹிக்க, ‘திவ்ய தம்பதிகள் நியமனப்படி செய்கிறேன்’ என்று விண்ணப்பித்துக்கொண்டார் ஜீயர் ஸ்வாமி.
10. “இந்த ராஜகோபுர கைங்கர்யத்தைச் செய்ய ஆரம்பித்தபோது அந்தரங்கர்களாக இருந்தவர்களும், சில ஸ்ரீரங்கக்ஷேத்திர வாஸிகளும் கோபுரத்தைக் கட்டக்கூடாது என்று தடுத்தார்கள்”.
11. நாலாவது, ஐந்தாவது நிலைகள் கட்டும்போது தாராளமாகப் பணம் கிடைக்கவில்லை.
12. “இவ்விதம் பல இடையூறுகள் நேர்ந்தபோதும் ஸ்ரீரங்கநாதன் நியமனத்தால் ஆரம்பிக்கப் பட்டதாகையால் அவனே இந்தக் கைங்கர்யத்தை குறைவின்றி நடத்தி முடித்துக்கொண்டான்” என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்
13. அன்று கலியன் இந்தத் திருக்கோயிலில் பல திருப்பணிகளைச் செய்ததாக வரலாறு கூறுகிறது.
14. தாம் விட்டுச் சென்ற இன்னும் சில கோபுரங்களைக் கட்டுவதற்காகக் கலியனே ஸ்ரீமதழகியசிங்கர்மேல் ஆவேசித்து இந்தத் திருப்பணியைப் பூர்த்தி செய்துகொண்டார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
15. எண்பத்தைந்து வயதிற்குமேல் கோபுரத்தைக் கட்ட ஆரம்பித்துத் தொண்ணூ<ற்றிரண்டாவது வயதில் பெரியதொரு ராஜ கோபுரத்தைக் கட்டி முடித்தார் என்ற விஷயம் பொன்னெழுத்தால் பொறிக்கத் தக்கதாகும்.
16. ஸ்ரீரங்கநாதனின் நியமனப்படி கோபுரத்தைக் கட்டுவது தான் எனக்கு முக்கியமே தவிர, கோயில் ஸம்ப்ரதாயத்திற்கு விரோதமாக யாதொரு கார்யமும் செய்கிறதில்லை என்று ஸ்ரீமதழகியசிங்கர் வாக்களித்ததோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறையிலும் நிறைவேற்றிக் காட்டினார்.
17. இந்தத் தெற்கு ராஜகோபுர திருப்பணி 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1986ஆம் ஆண்டு பூர்த்தி செய்யப்பட்டது.
18. திருவரங்க ராஜகோபுரத் திருப்பணிக்குப் பல மதத்தவரும், பல இனத்தவரும், பல்வேறு வகைப்பட்ட தொழில் செய்வோரும், செல்வர்களும், வறியவர்களும்கூட தங்கள் பங்காக நன்கொடைகளை இயன்ற அளவு வழங்கினர்.
19. ராஜகோபுரத்தைக் கட்ட சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவாகியுள்ளது.
20. மஹாஸம்ப்ரோக்ஷண வைபவத்தில் (25.03.1987) அந்நாளைய தமிழக முதலமைச்சர்  திரு.எம்.ஜி. ராமச்சந்திரன், துணை ஜனாதிபதி திரு.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  சிறப்புத் தபால் தலையும், தபால் உறையும் அன்றையதினம் வெளியிடப்பட்டது.
21. கல்காரம் பலப்படுத்துதல், முதல்நிலை ஆகிய பணிகளை ஸ்ரீஅஹோபிலமடம்ஜீயர் ஸ்வாமி, 2ஆம் நிலை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமி, 3ஆம் நிலை காஞ்சி சங்கராசார்யர் ஸ்வாமி, 4ஆம் நிலை ஆந்திர அரசு, 5ஆம் நிலை கர்நாடக அரசு, 6ஆம்நிலை புகழ்பெற்ற இசையமைப்பாளரான இளையராஜா, 7ஆம் நிலை திருச்சி, ஸ்ரீரங்கம் பொது மக்கள், 8ஆம் நிலை உதவி ஜனாதிபதி திரு.ஆர் வெங்கட்ராமன், 9ஆம் நிலை சேஷம்மாள் சாரிடீஸ், 10ஆம் நிலை காஞ்சி காமகோடி சிஷ்யசபை, 11ஆம் நிலை ஸ்ரீமஹாலக்ஷ்மி டிரஸ்ட், 12ஆம் நிலை ஸ்ரீரங்கநாதாசார்யர், 13ஆம் நிலை தமிழக அரசு, கலசங்கள் திரு. எஸ். ஆர்.ஜி. ஆகியோர் அளித்த நிதி கொண்டு இந்த ராஜகோபுரம் எழுப்பப்பட்டது.

No comments: