Friday, April 13, 2012

பங்குனி உத்திரம்-சேர்த்தி-ஏலகிரி

பங்குனி உத்திரம்-சேர்த்தி-ஏலகிரி:
Posted by:      "Padmanabhan Ns"            aazhwar@gmail.com                                       aazhwar        
      Thu Apr 12, 2012 7:02 pm        (PDT)   

      SrI:
Dera Swamy,
Thanks to Sri Kaliyan Ponnadi for the contribution - This is written very
nicely. Has it appeared in Vanamamalai and Ramanuja lists?
dasan
(05-04-2012 பங்குனி உத்திரத்திருநாளன்று ஏலகிரி சன்னிதியில் நடந்தேறிய
கலகத்தால் ஊரே ஸ்தம்பித்துப் போனது. கலகத்தின் காரணத்தையும், பிண்ணனித்
தகவல்களையும் ஏலகிரியப்பன் மற்றும் ஏலகிரித் தாயாருக்கிடையே அன்று நடைபெற்ற
உரையாடலைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.)
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் திருவாய் மலர்ந்தருளிய விஷயம்
ஏலகிரி நாச்சியாராகிய உன்னை நாடி, வந்திருக்கின்றேன். நான் கொண்டு வந்த
மாலையை ஏற்றுக் கொண்டு, என்னையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஸ்ரீ ஏலகிரித்தாயார் திருவாய் மலர்ந்தருளிய விஷயம்
முந்தாநாள் இந்நேரத்தில் தேவரீர் ஏலசரோவரப்பொய்கைக்கு எழுந்தருளி,
வேட்டையாடி விட்டு, வேர்த்துப் பசித்து வயிரசைத்து வந்தீர்!... உத்தம
நாயகியானவள் கணவனின் வியர்வை மணத்தையே விரும்பியிருப்பாள். ஆதலால்
அடியேனும் அதீதப் ப்ரீதியுடன் தங்களை எதிர்கொண்டழைத்து, திருக்கை
பிடித்து, உள்ளே எழுந்தருளப் பண்ணிக் கொண்டு போய், மங்கள ஆரத்தி
கண்டருளப் பண்ணி, சீரிய சிங்காதனத்தே உம்மை எழுந்தருளப் பண்ணி, திருவடி
விளக்கி, திருவொத்தாடை சாத்தி, கண்ணும் கருத்துமாய் திருவாலவட்டம்
பரிமாறி, பின்பு மஞ்சளும் செங்கழுநீரின் வாசிகையும், நாறுசாந்தும்,
அஞ்சனமும் கொண்டு தங்களை நீராட்டத்துக்கு அழைக்க - தேவரீரோ!...
நீராட்டத்துக்கு எழுந்தருளினாலும், பிற்பாடு பாதி திருமஞ்சனத்தில் எழுந்து
விட்டீர். சரி பரவாயில்லையென்று - திருவரைக்கு பீதாம்பரம் எடுத்துக்
கொடுத்தாலோ! அதையும் தாறுமாறாய்ச் சாத்திக் கொண்டீர்...
எப்போதும் மிகுந்த சிரத்தையுடன் திருமண் காப்பிட்டுக் கொள்ளும் தேவரீர்,
அன்று மட்டும் வேறு மாதிரி, கோணல் மாணலுடன் நெற்றியில் திருமண்
காப்பிட்டுக் கொண்டீர்.... சரி போகட்டும் என்று, அப்பம் கலந்த
சிற்றுண்டி, அக்காரம் பாலில் கலந்து சமர்ப்பிக்க அதனை ஒரு சிறிதளவே அமுது
செய்திட்டீர்!....
வஞ்சகக் கள்வரே!.... தாங்கள் திருவனந்தாழ்வானாகிய படுக்கையில்
சயனித்திருக்கையில், அடியேன் தங்கள் திருவடி நிலைகளை வருடியபடி தங்களை
திருக்கண் வளரச் செய்து வருகையில், நீர் ஒரு மாயம் செய்து, அடியேனுக்கு
நித்திரை உண்டாக்கி, திருக்கருவூலத்தைத் திறந்து. எம்முடைய ஸ்த்ரீதனம்,
திரு அம்மானை, பந்து, கழஞ்சு, பீதாம்பரம் எல்லாம் திருடிக் கொண்டு எங்கோ
போய் விட்டீர்... இரண்டு நாட்களுக்குப் பின் இப்போது தான் இங்கு
எழுந்தருள்கிறீர்..... ஏரார்ந்த ஏலகிரிமலையில் எம் பந்துக்களாகிய
இம்மலைமக்கள் புடை சூழ இங்கிருக்கும் போதே எனக்கு இந்தக் கதி என்றால்
உம்மோடு வைகுந்தத்துக்குத் தனிக்குடித்தனம் வந்தால் என் கதி
என்னாகும்?..... நீங்கள் வந்த வழியே திரும்பிப் போகலாம்.
(பேச்சோடு பேச்சாக வெண்ணெய், புஷ்பம், தயிர், பழம் இவற்றை ஏலசரோவரப்
பெருமாள் மேல் எறிந்து தாயார் கோஷ்டியினர் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த
வண்ணம் இருந்தார்கள். அவ்வப்போது தாயார் சன்னிதியின் திருக்கதவங்களை ஒங்கி
அறிந்து சாத்தி மேலும் ஏலகிரியப்பனை சோதனைக்கு ஆளாக்கினார்கள்)
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
ஏலகிரி நாயகியே! நான் மண்ணாசை கொண்டு மண்ணை அளந்தது அப்போது.......
ஆனால் "அல்லிமாதர் புல்க நின்ற ஆயிரந் தோளனிடம்" என்றபடி, உன்னை ஆலிங்கனம்
செய்து கொள்ளும் பொருட்டு ஆயிரம் தோள்களை எடுத்துக் கொண்டு
பெண்ணாசையோடு வந்திருக்கின்றேன் இப்போது..... எனவே நான் கொண்டு வந்த
மாலையை ஏற்றுக் கொண்டு, என்னையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
இந்தப் பெண்ணாசையால் தான் பிரச்சினை இப்போது முளைத்திருக்கிறது
ஸ்வாமி...... ராணித்தேனீயைப் பிற தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருப்பதைப்
போல், வைகுந்தத்தில் புருஷோத்தமனாகிய உம்மை நித்யர்களும், முத்தர்களும்
மொய்த்துக் கொண்டிருந்து கெடுத்தே விட்டிருக்கின்றார்கள்... ஆகவே
பெண்ணாசை மிகுதியால் தான் திருக்கச்சணிப் பொன்முலையாள் அவளைக் காணச்
சென்றீரோ!.... உம் திருக்கனிவாயமுதத்தை அவளுக்குக் கொடுத்தும், அவளது
நகக்குறிகள் உம்மீது அழுந்திப் பதியும் வண்ணம் விளையாடி மகிழ்ந்தீரோ!....
"நின்னைப் பிரியேன்... பிரியிலும் தரியேன்... என்று அவளிடத்தும் ஆசை
வார்த்தைகள் பயின்றீரோ!.... உமது கார்மேனியிலே பசுமஞ்சள் பூக்கக் காரணம்
என்ன?... கரும்புத் தோட்டத்தில் விருப்பம் போல் சஞ்சரித்து விட்டு வந்த
மாமத யானையே.....நீர் வந்த வழியே திரும்பிப் போகலாம்.
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.. சந்தேகம் பெண்களுக்குக் கூடப் பிறந்த வியாதி....அந்தச் சந்தேக
மிகுதியால் வெண்ணெய், புஷ்பம், தயிர், பழம் இவற்றை எறிந்து, ஒருநாளும்
பண்ணத் துணியா அவமானங்கள் தனை இன்று எனக்கு இழைத்திட்டாய்.... எல்லாம் இந்த
நம்பெருமாளால் வந்த வினை. இரண்டு பக்கமும் அரண்களாய் ஆறுகள்
அமைந்திருந்தும், அதையும் தாண்டி உறையூர் சென்று மச்சினியுடன் உறவாடி
வந்ததால், எல்லோரும் அப்படியே இருந்து விடுவார்கள் என்று தப்புக் கணக்கு
போட்டு விட்டாய் தேவி..... உன்னைக் கைக் கொண்ட நாள் முதலாய் ஏலகிரிமலையை
மறந்தும் நான் தாண்டியதில்லை. மலையடிவாரத்தில் வாணியம்பாடி என்றொரு ஊர்
இருப்பதாக பேசிக் கொள்கிறார்கள்..... எனக்கு ஆனால் வாணியம்பாடி என்றால்
என்னவென்றே தெரியாது... வைகுந்த வான் போகத்தையும் உன் பொருட்டு
விட்டொழித்தேன்... எனவே நான் கொண்டு வந்த மாலையை ஏற்றுக் கொண்டு,
என்னையும் உள்ளே அனுமதிக்க வேண்டும்.
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
மலையைத் தாண்டி அறியாத மகராசனாகிய நீர், இரண்டு நாள் கழித்து இவ்விடம்
திரும்ப வேண்டிய காரணம் என்ன?..
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாச்சியே! அப்படிப் பொறுமையாகக் கேட்டால், நடந்த விஷயங்களை உனக்கு
எடுத்துச் சொல்லி உன் சந்தேகத்தைத் தீர்த்து விடப் போகிறேன்....
முந்தாநாள் இரவு திருமங்கை என்றொரு கள்வன் இம்மலைக்கு வரப் போவதாகக்
கேள்விப் பட்டேன்....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
அது எப்படி உமக்குத் தெரியும்?.. யார் இந்த விஷயத்தை உம்மிடம்
சொன்னார்கள்?...
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி.....பாம்பின் கால் பாம்பறியும்..... எனவே அந்தக் கள்வனிடமிருந்து
நமது கருவூலத்தைக் காத்துக் கொள்ள, திருவாபரணங்களை எடுத்துக் கொண்டு
இரவோடு இரவாகப் புறப்பட்டேன். ஆனால் அந்தப் பாவியோ! அதனை எப்படியோ
மோப்பம் பிடித்து வழியிலேயே என்னை மடக்கி விட்டான். என்னை மிரட்டித்
திருவாபரணங்களை என்னிடமிருந்து பறித்துக் கொண்டான். பிற்பாடு திருமந்திர
உபதேசம் பண்ணி, அந்தப் பாவியைத் திருத்திப் பணிகொண்டு, மீண்டும்
திருவாபரணங்களை அவனிடமிருந்து மீட்டுக் கொண்டு புறப்பட்டேன். உன்னுடனான
சகவாச தோஷத்தால் சந்தேகம் என்னைச் சூழ்ந்து கொள்ள, வழியிலேயே
அத்திருவாபரணங்களைக் கணக்கிட்டுப் பார்த்தேன். நான் நினைத்தது போலவே
கணையாழி ஒன்று காணாமல் போயிருந்தது.... "கணையாழியை யாரோ ஒருத்திக்குப்
பரிசளித்து விட்டதாக நீ நினைத்து விட்டால் என்ன செய்வது...?" என்ற பயம்
ஒருபுறம்...அதே நேரத்தில் திருமந்திரத்தால் திருந்திய திருமங்கையை இது
குறித்து அடியேன் கேட்கப் போக, அவன் குற்றமிழைக்காத பட்சத்தில் இந்த
சந்தேகக் கேள்வி அவன் மனத்தை என்ன பாடு படுத்தும்? - என்ற சங்கடம்
ஒருபுறம்.. எனவே ஏலகிரிமலையின் திருவீதிகளெங்கும் கணையாழியைத் தேடித்
திரிந்தேன்.... ஒரு வழியாய் அதனைக் கண்டெடுப்பதற்குள் ஒரு நாள் பொழுது
கழிந்து விட்டது.
ஒருவழியாய் கணையாழியைக் கொண்டு திரும்புகையில், பாரிஜாத மலர்களையெல்லாம்
கொண்டு வந்து திருத்தேவதைகள் என்னைச் சேவிக்க வந்தனர். அவர்களின் தலையில்
நான் அந்த மலர்களைச் சூட்ட வேண்டுமென்று நிர்ப்பந்தித்தனர். நானும்
ஒருநாளும் பெண்டுகள் தலையில் மலர்களைச் சூட்டியதில்லை என்ற உண்மையை
எடுத்துக் கூறி, ஒரு வழியாக அவர்களிடமிருந்து மீண்டு வருவதற்குள் இன்னொரு
நாள் கடந்து விட்டது.
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் உமது திருக்கண்மலர்கள் இரண்டு சிவந்தே இருப்பானேன்?
முதலில் அதற்கு நீர் பதில் சொல்லும்....?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
செங்கோலுடைய திருவரங்கச் செல்வனார் நாம் ஆனபடியால், இரவெல்லாம்
நித்திரையின்றிக் கண் விழித்து, திருக்குதிரைத் தம்பிரான் மேல்
ஆரோகணித்து, உலகைப் பரிபாலனம் செய்கின்றேன்.... பாகவதர் பக்கம் எமது
கண்கள் தண்ணளியோடு காருண்யத்தால் சிவக்கும்... பாகவத விரோதிகள் பக்கம்
சீற்றத்த்தால் எம் கண்கள் சிவக்கும் தேவி.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் உமது திருக்குழற் கற்றைகள் எல்லாம் இப்படிக் கலைந்தே
இருப்பானேன்?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி.... ஏலகிரி சிகரத்தில் வீசிய பெருங்காற்றே இதற்குக் காரணம்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருக்கஸ்தூரித் திருமண் காப்புக் கரைந்தே
இருப்பானேன்....
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி..... நீ என் மேல் இருக்கும் பரிவினால், கஸ்தூரி திலகத்தின் மீது லலாட
பதக்கத்தையும் அணிவித்து விடுகின்றாய்... பின்பு திருக்கஸ்தூரித் திருமண்
காப்புக் கரையாமல் என்ன செய்யும்?
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருப்பவளம் போல் சிவந்த அதரம் வெளுத்தே இருப்பானேன்?..
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி.... பாஞ்சஜன்யத்தை ஊதி, ஊதி திருப்பவளம் வெளுத்து விட்டதே அன்றி
வேறொன்றும் காரணமில்லை...
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருக்கழுத்தெல்லாம் நகக்குறிகள் அவை நிறைந்தே
இருப்பானேன்...?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி... ஏலகிரிக்காடுகளில் நிறைந்திருக்கும் முள்ளால் வந்த பிரச்சினை
அது....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருமேனியிலே எங்கும் குங்குமப் பொடிகள்
இருப்பானேன்?...
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி... அவை திருத்தேவதைகள் கொண்டு வந்த பாரிஜாத மலர்களில் நிறைந்திருந்த
மரகதப் பொடிகளே அன்றி, குங்குமப் பொடி அன்று....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருப்பரியட்டம் மஞ்சள் நிறம் கொண்டு இருப்பானேன்...?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி... அது திவ்ய பீதாம்பர தேஜஸ்ஸால் விளைந்தது என்பதை மறந்தனையோ.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
போதும் நிறுத்தும் உமது கதையை.... நீர் திருமகளாம் எமது சன்னிதியை நாடி
வந்தது மெய்யானால் திருவடிகள் அவை செம்மஞ்சள் குழம்பாகவே இருப்பானேன்?...
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
தேவி.... அது திருக்குதிரைத் தம்பியாரால் விளைந்ததே அன்றி நான் என்ன
செம்மஞ்சள் குழம்பெடுத்துப் பூசிக் கொண்டேனோ.... நாயகியே.... நான்
சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே திருக்கடல் தனில் மூழ்கி வேண்டுமானாலும்
உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
முன்னம் ஒருநாள் ஊழிக்காலத்தில் இப்பிரபஞ்சமே பிரளய வெள்ளத்தில் மூழ்கித்
தத்தளித்த போது, நீர் ஓர் ஆல இலையை மிதக்க விட்டு அதில் திருக்கண்
வளர்ந்தீர்... அப்படிப்பட்ட உமக்கு கடலில் மூழ்கிடல் அருஞ்செயலோ....?
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.... நான் சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே அக்கினிப் பிரவேசம்
செய்தாகிலும், உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
அக்காலத்திலே நான்முகனுக்காய் உத்தர வேதியிலே அக்கினியில் ஆவிர்பவித்திட்ட
பேர்ருளாளனாய்த் திகழ்ந்திட்டீர்.... உம்மை அக்கினியும் சுடுமோ? யாரை
நம்பச் சொல்கின்றீர் இதனை.....
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.... நான் சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே திருப்பாம்புக்குடம்
அதனில் கைவிட்டு உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
சென்றால் குடையாம்... இருந்தால் சிங்காசனமாம்... என்று எப்போதும்
திருவனந்தாழ்வான் மேல் கண் வளரும் தேவரீர் திருப்பாம்புக் குடத்தில்
கைவிடுவதை அரிதான செயலென்று யாரும் நம்ப மாட்டார்கள்...
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.... நான் சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே மழுவை ஏந்தி
வேண்டுமானாலும் உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
ஒருகோடி சூரியன் உதித்த பிரபை போல் விளங்கும் திருவாழியினைத்
திருக்கரத்திலே தரித்துக் கொண்டுள்ள உமக்கு, இரும்பின் மழுவை ஏந்துதல் ஒரு
பொருட்டோ.....
ஸ்ரீ ஏலசரோவரப் பெருமாள் கூறியது
நாயகியே.... நான் சொல்லுவதெல்லாம் உண்மை... எனவே திருநெய்க்குடத்தில்
கைவிட்டு வேண்டுமானாலும் உனக்கு சத்தியப் பிரமாணம் செய்து தருகிறேன்.....
ஸ்ரீ ஏலகிரித் தாயார் கூறியது
கிருஷ்ணாவதார காலத்தில் ஐந்து லட்சம் பூர்வகுடிகளிடமும் வெண்ணெய் திருடி
உண்டு மகிழ்ந்த உமக்கு, திருநெய்க்குடத்தில் கைவிட்டே திருடுதல் ஒரு
அருஞ்செயலோ!..... மாயனே.. இவ்வுலகத்தார் பரிகசிக்கும் அளவுக்கு பல்வேறு
ப்ரமாணங்களை அருளினீர்... போதும்... இனி உமது மனத்துக்கியைந்த
இடத்துக்குச் சென்றங்கே பெருமகிழ்வோடு எழுந்தருள்வீர்......
அருளாழி வரிவண்டும், ஜெகதாசார்யனும் ஆகிய பகவத்ராமாநுஜர் ஏரார்ந்த
ஏலகிரியில் எழுந்தருளி நின்றதால் ஒரு வழியாக இந்தக் கலகம் முடிவுக்கு
வந்தது. ஸ்ரீ ராமாநுஜர் கூறுகிறார்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அப்படியே மானிடராய்ப்
பிறந்தாலும் எல்லாவுலகும் படைத்தளித்துக் காக்கும் ஸ்ரீஏலகிரித்தாயார் ஸமேத
கல்யாண வேங்கட ரமண ஸ்வாமியிடம் பக்தி பூணுதல் அதனிலும் அரிது. அப்படியே
வண்புகழ் நாரணன் திண்புகழ் பாடி வழிபட்டாலும், அவனிடம் தாழ்ந்த பலன்களை
வேண்டிப் பெறாமல், மிக உயர்ந்த பலனாகிய மோக்ஷ சாம்ராஜ்யத்தை வேண்டிப்
பெறுதல் அதனிலும் அரிது... அப்படியே உயர்ந்த பலனாகிய மோக்ஷத்தையே
விரும்பியிருந்தாலும், கர்ம - ஞான - பக்தி மார்க்கங்களாகிய தன்முயற்சியை
அதற்கு உபாயமாகக் கொள்ளுகிறார்களே அன்றி, "நெறிகாட்டி நீக்குதியோ!" என்று
ஆழ்வார் அருளிச் செய்தபடி, ப்ரபத்தி ஆகிய சரணாகதி மார்க்கத்தை உபாயமாகப்
பற்றுதல் அதனிலும் அரிது.
இப்படி அரிதிலும் அரிதான ப்ரபத்தி செய்ய உகந்த முகூர்த்தம் ஸ்ரீஏலசரோவரப்
பெருமாள், ஸ்ரீ ஏலசரோவரமங்கை நாச்சியாருடன் சேர்த்தியுடன் இருக்கும் காலமே
- என்பதை சேதனர்கள் அனைவரும் தத்தமது ஆசார்யன் வாயிலாக அறிந்து கொண்டு,
பங்குனி உத்திரத் திருநாளாகிய இன்று சரணாகதி பண்ணுகைக்காக இங்கே
கூடியிருக்க, திவ்யதம்பதியாகிய தாங்கள் இருவரும் இந்த மலைமீதும் தங்கள்
தங்கள் திவ்ய சேஷ்டிதங்களைத் தொடரவே செய்கிறீர்கள். எனவே ஊடலை விடுத்து,
"திருமறுமார்பன் - திருவுக்கிருப்பிடம் - திருவின் நாயகன் - திருவாளர்
தலைவன் - திருவையளிப்போன் - திருவுக்கும் திரு - திருமகள் கொழுநன் -
திருவின் பெட்டகம் - திருப்புகழாளன் - திருவை தரிப்போன் - திருவுடன்
பிறப்போன் - திருவை உடையோன்" என்றெல்லாம் அடியோங்கள் கொண்டாடும் படி,
தாங்கள் இருவரும் சேர்த்தி மஹோத்ஸவம் கண்டருள வேண்டும் என்று
ப்ரார்த்தித்துக் கொள்கிறேன்.
ஆசார்யனின் வேண்டுகோளை ஏற்று, ஏலகிரித் தாயாரும் "போனால் போகட்டும் -
ஏலகிரியப்பனாகிய நம் ஸ்வாமியை வரச்சொல்லுங்கள்" - என்று ஆணையிட,
ஏலகிரியப்பனும் பெருகுமதவேழம் மாப்பிடிக்கு முன் நிற்பது போலே தாயார்
சன்னிதி முன்பாக எழுந்தருளி நின்றார். ஏலகிரியப்பன், ஏலசரோவரப் பெருமாள்
சேர்த்தி கண்டு பாகவதோத்தமர்கள் பெரும் ஆரவாரமிட்டார்கள். திவ்ய
தம்பதிக்கு சேர்த்தித் திருமஞ்சனம் நடந்தேறியது. அடியார்களும்,
ஏலகிரிமலையின் சிறுமாமனிசர்களும் இணைந்து "கத்யத்ரயம்" சேவித்து
எம்பெருமானைச் சரண் பற்றினார்கள். தொடர்ந்து திவ்யதம்பதிகளின்
திருக்கல்யாண மஹோத்ஸவம் இனிதே நடந்தேறியது

No comments: