Thursday, January 19, 2012

ஸ்ரீராம காநாமிருதம்

ஸ்ரீ ராம கானாம்ருதம்:
Thanks to Sri raghuveer Dayal Swami: Posted by:      "T.Raguveeradayal"            rajamragu@gmail.com
____________________
Archive for the ‘ஸ்ரீ இராம காநாம்ருதம்’ Category

ஸ்ரீராம காநாமிருதம்

Monday, May 23rd, 2011
சமீப காலமாக ஏனோ தெரியவில்லை முன்போல் நிறைய நேரம் கணிணி முன் அமரமுடியவில்லை. பல இடையூறுகள். வேறு சில பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டி வருகிறது. தவிர, ஏதோ ஒரு அயர்வு அதனால் அப்புறம் பார்ப்போம் என சோம்பேறித்தனம் என்று ஆகியிருக்கிறேன். அதனாலெல்லாம், ஆரம்பித்த இந்த இழையை எப்போது முழுமை செய்வோம் என்று திகைப்பாகி விட்டது. இதைத் தொடர்பவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களே என்றாலும் அவர்களுக்காவது பயன்பட எனக்குத் தெரிந்த வழி நூலை வருடி வலையேற்றுவதுதான்.
நூலை மின்னாக்கம் செய்து இங்கு அளித்திருக்கிறேன். விருப்பப் படுபவர்கள் தரவிறக்கிக் கொள்ளலாம் சிறு படத்தின் மீது சொடக்கி அதன்பின் தரவிறக்கலாம்.

ஸ்ரீராம காநாமிருதம் 3

Thursday, May 5th, 2011
இன்று இங்கு படிக்கப் போகிற அத்தியாயம் 3 மற்றும் நாளை தொடரப்போகும் அத்தியாயம் 4 இவற்றிற்கான ஸ்வரக் குறிப்புகளை முதலில் பார்த்துக் கொண்டு அதன்பின் பாட்டைப் படிக்க வேண்டுகிறேன். (இது அன்பர் ஒருவரின் விருப்பம்)

IMG
அத்தியாயம் 3
[இந்த அத்தியாயத்தில் அங்காரதாரை அனுமனுக்கு இடையூறு செய்தலும், அவளை வதைத்து அனுமன் இலங்கை சேர்தலும், இலங்காதேவி வீடுபெறலும் கூறப் படுகின்றன.]
(ராகம் — மோஹநம்)
மங்காதவேக மொடுவானில் செல்லும் மறையோன் விடுத்த நிழலும்
தங்காது செல்லல் தான்கண் டயர்ந்து தருமத்தைக் கொல்லும் நினைவால்
அங்கார தாரை யெனுமோ ரரக்கி அவன்வேகம் குன்ற நின்றாள்
எங்கேனும் நன்மை யிடையூ றிலாமல் இனிதேமுடித்தல் உளதோ?
— முனிவுட னரக்கியையே – விவரம்
— வினவிட முன்னின்றான். .35.
‘நீயா ருரையிந் நீள்வானையெலாம் வாயால் மறைத் திட்டாய்’ – என
’வீவாய் பல்லிடை’ யென்றாள் அனுமனும் வீரம் விளக்க லானான்
பேழ்வாய் புகுந்தே மறுகண மவள்குடல் பீறி வெளியில் வந்தான்
ஆழ்வான் கீழ்வந் தரவு கொள்வதுபோல் அவள்குடல் கொண்டு சென்றான். .36.
பின்னிடை யூறுகள் பிறவா வண்ணம் உன்னி ராமநாமம்
சொன்ன வாறுவான் சென்றனன் கடலும் சேர்ந்துமுடிந் ததுவே
பொன்னி லாயபல கோபுரம் வானெழப் பொலியு மிலங்கை கண்டான்
அன்னை காணுமோர் ஆசை கொண்டவன் ஆங்குள மலைகுதித்தான்
— நகரமே – குலுங்கிட – அதை மிதித்தான்
— வியந்து நின்று கண்டான் – விண்ணவரும் பயந்துலாவும் நகரை.
— ஸ்ரீராமஜெயஸ்ரீராம ஜெயஸ்ரீராம ராம் ராம். .37.
தங்க மூடுமணி தந்த வேலையிடை தாங்கிடாது வீணே
செங்க லோடுமண் சேர்ந்தஇல் லெதுவும் அங்குக்காண கில்லான்
மங்கி டாதபுகழ் மன்னு சொர்க்கமதை மாற்ற வெண்ணித் தேவர்
லங்கை தேடிபணி பூண்டு வாழ்வதென சங்கையொடு கண்டான்
—- அனுமனும் —- பொங்கிவியப் புண்டான். .38.
பந்தி பந்தியாய்த் தேர்செலு மாறிடைப் பரந்துநீண்ட பலவீதி – தடை
விந்தையாகப் பரி யானைகூட்டமாய் விளங்கு கோட்டைகளின் ரீதி
அந்தரம் வேள்வியி னரும்புகை செலவாங் கரக்கர்வாழு மறநீதி
எந்தை வினவுகையி லெந்த விதம்நான் எடுத்துச்சொல்வ திவர்சேதி
——- என ஏங்கி யனுமன் கண்டான் – வான் வளர்ந் தோங்கி நின்ற மதிலை. .39.
எண்ணில் வீரர்பலர் எமனென வாயுதம் ஏந்தி வாயில் காப்பார்
கண்ணி லவ்வழியில் நலியும் போர் நமது நாயகன் பணிக்கிடை யூறாம் – என
மண்ணி லோர்புயல் எழுவதுபோ லவன் மதிலைத் தாவியயல் நின்றான்
புண்ணிய மோட்டிடு பூதமென வளர் புல்லியனைத் தான் கண்டான். .40.
தோளோர் எட்டுடையாள் — ஒளிவிடும்
வாளோர் கைக் கொண்டாள் – அனுமனை
’ஆள்யார்’ இங்குற்றாய்? – அறிவிலாய்!
’மாள்வாய்’ என வெகுண்டாள். .41.
‘முக்கண் ணுடையோனும் – இங்குப்புக
முன்பின் யோசிப்பான் – அற்பமோர்
மர்க்கடம் நீவலையோ? — சென்றுபுக
வெட்கமிலை போ போ.’ .42.
அரக்கியின் மொழி கேட்டான் – அனுமனும்
குறுக்குக் கேள்வி போட்டான் – ‘ஓர்
குரக்கின முன்னூர் கண்டா லதனெழில்
குறைந்திடுமோ?’ வென்றான். .43.
‘குறுகிய தாலுன் ஆயுள்நீ யின்று குறுக்குப் பேசுகின்றாய்’ – என
உருவிய வாளொடு வேலை யனுமன்மேல் உலைய வீசலானாள்
பருகிடு மாபோ லனுமனு மவைகளைப் பல்லா லொடித்திட்டுப்
பெருகு கோபமொடு கரத்தால் புடைத்திடப் பொங்கிமே லெழுந்தான். .44.
‘பெண்ணென உனைவிட்டேன் – இன்றேல்
உண்ணுவ னுன்னாவி’ — என்றே
திண்ணென வோர்புடையால் –அவளை
மண்ணுற வீய்த் திட்டான்.
உதிரம் கக்கும் வாயால் – அரக்கியும் – உண்மை விளம்பிடுவாள்.
—- ஸ்ரீராம ராம் ராம். .45.
‘ஐய’கே ளுந்தன் ஆற்றலா லின்று அடிமை நீங்கி நின்றேன்
மெய்யுரை யிதுமலர் மேலவ னேவிட மேவிக் காவல் பூண்டேன்
உய்யு மாறென்னை யுனைப்போ லோர்குரங் குதைத்துக் குத்து மென்றான்
ஐய மில்லையினி அறிந்தே னிலங்கை அழிவது நிச்சயமே.
— இது மொழிவது முன்செயமே.
—- ஸ்ரீராம ராம் ராம். .46.

ஸ்ரீ ராம காநாமிருதம் எழுதிய ராமஸ்வாமியின் தேவாமிருதம்

Monday, May 2nd, 2011
ஸ்ரீ ராம காநாமிருதம் என்று இராமாயண சுந்தர காண்டத்தை இவ்வளவு அனுபவித்து இந்த ஸ்ரீ வி.எஸ்.ராமஸ்வாமி ஸ்வாமி எழுதியிருக்கிறாரே என வியந்து கொண்டே பழைய “ஸ்ரீரங்கநாத பாதுகா” இதழ்களைப் படித்துக் கொண்டிருந்தேன். அங்கு தற்செயலாக இவரே எழுதிய ஒரு கட்டுரை படிக்கக் கிடைத்தது. தேனாய் இனிக்கும் அந்தக் கட்டுரை “எங்கும் ஸ்ரீராகவனே” இங்கு .

ஸ்ரீஇராம காநாமிருதம்

Sunday, May 1st, 2011
பரதனும் தம்பி சத்துருக்கன னும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவுதன் பகலும் துதி செய்ய நின்ற
இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே.

(திருமங்கை மன்னன்)
திருமங்கை ஆழ்வாருக்கு பெருமாள் காட்சி கொடுத்த திருவல்லிக்கேணியில் அடியேனது வாடிக்கையான பழைய புத்தகக் கடையில் கிடைத்த ஒரு நூல் “ஸ்ரீஇராம காநாமிருதம்”. வந்தவாசியில் போஸ்ட் மாஸ்டராகப் பணி ஆற்றிய ஸ்ரீஎஸ்.வி.இராமஸ்வாமி என்பவர் இராமாயணத்தை இசையுடன் கூடிய பாடல்களாக இயற்றி அந்தப் பாடல்களுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக ஸங்கீத பூஷணம் எஸ், இராமநாத அய்யரும் ( டைகர் இராமநாத அய்யரோ?) ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி இராமஸ்வாமியும் இசை அமைக்க, ஸ்ரீ வை.மு.கோபாலகிருஷ்ணமாச்சார்யாரின் மதிப்புரையுடன் அந்நூல் வெளியாகிஇருக்கிறது. இராகங்களுடன் கூடிய அந்தப் பாடல்கள் இசைப் பிரியர்களுக்கு விருந்தாயிருக்கும். இசை கற்கும் இளம் பிராயத்தினருக்கும் இசையுடன் இராமாயணத்தையும் கற்கும் வாய்ப்பாக அமையும் என்பதால் இங்கு அதை தினம் ஒரு பாடலாக இடுவேன். அந்நூலின் முதல் பகுதியாக, வழிபடு கடவுள் வணக்கமாக அமைந்ததே முதலில் வந்த திருமங்கை ஆழ்வாரின் திருவல்லிக்கேணிப் பாசுரம்.
ஸ்ரீ:
ஸ்ரீமதே ஸ்ரீ ஸீதா லக்ஷ்மண பரதசத்ருக்ந ஹநுமத் ஸமேத
ஸ்ரீ ரகுநந்தன பரப்ரஹ்மணே நம:
ஸ்ரீ இராம காநாமிருதம்
வழிபடு கடவுள் வணக்கம்
அத்தியாயம் 1
பரதனும் தம்பி சத்துருக்கன னும்
இலக்குமனோடு மைதிலியும்
இரவுதன் பகலும் துதி செய்ய நின்ற
இராவணாந்தகனை எம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு
குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத்
திருவல்லிக்கேணிக் கண்டேனே.

(திருமங்கை மன்னன்)
(இந்த அத்தியாயத்தில் அங்கதப் படைகள் அனுமனொடு அலைகடலடைதலும், அனுமன் அன்னையைக் காணாது அண்ணலைத் துதித்தலும் கூறப்படுகின்றன.)
[பூர்வ காண்டங்களின் சுருக்கம்]
(ராகம் கரஹரப்ரியா ஸ்வரங்கள்)
ஸ்ரீராம ராமராம — ஜெய ஸீதாபி ராமா
ஸ்ரீராமஜெய ஸ்ரீராமஜெய ஸ்ரீராம ராம் ராம்
அன்னையைத் தேடியே ஆஞ்சநேய ரொடு அங்கதப் படையினரும்
அறிவு கலங்கினர் பெருங்கடல் குறுக்கிட அவர்மன மேங்கினரே. .1.
தேடி யயர்ந்தோம் மேலினித்தேடிட மேதினி யிலையென்றே
வாடியே யுள்ளம் வகையறியாமல் வழியில் சோர்ந்தனரே
—–தேடிவரும் வழியில் சோர்ந்தனரே .2.
தேவியைக் கண்டிலம் தென்திசையெனவே தெரிந்துரைப் பதிலும்நம்
ஆவி யொழித்தல் அறமெனத் தீர்ந்தார் ஐயனைப் பாடலுற்றார்
—— ஸ்ரீராம ஜெயராம ஸ்ரீராமராம் .3.
தேவருக் குதவியவன் தயரதன் — திருமகன் தாடகையின்
ஆவி யொழித்திட்டான் மிதிலையில் — அரன்வி லொடித்திட்டான்
தேவியைக் கைப்பிடித்தான் — பரசுமுனி மாவல மொழித்திட்டான்
ஏவிட வன்னை வனமே வந்தான் ஏந்திழை இளவலொடும். ,4,
குகனொடு நட்புக்கொண்டே கானிடை – புகமுனி பரிவு கண்டான்
தகவொடு மரவடி கதறி வந்ததன் தம்பிக்குப் பணையம்வைத்தான்
தண்டகம் தனைச்சேர்ந்தான் — விராதன் தடந்தோள் விழக் கொன்றான்
அண்டம் காணசர பங்கரின்பநிலை அடைந்திட வருள்செய்தான். .5.
பஞ்சவடியி லன்றே – பாவையெனக் கொஞ்சி யரக்கி வந்தாள்
நஞ்செனத் தாயை நலியநினைத்த வவள் நாசியை நீக்கிட்டார்
வீரம் பேசிவந்தார் — பல்லாயிரம் கோரவரக்கர் களைமுன்
போர்செய் தொழித்தனன் கோதண் டன்புகழ் போற்றினர் தேவர்களும் .6.
வேறு
வானவர் மயங்கிடும் அழகொடு நின்றதோர் மானொரு சானகிமுன்
தேனமர் மொழியினள் வேண்டிட ராகவன் தேடியே சென்றனன்பின். .7.
அரக்கர் சூழ்ச்சியென அறியா அரிவையும் அன்று தனித்து நின்றாள்
இளையவன் —- நொந்து விடுத்துச் சென்றான்
வருக்கமொ டொழியும் வகையென வறியா தரக்கனு மெதிர் வந்தான்
அன்னையைச் சிறைகொண்டான் — அவனழிய
அன்றே விட முண்டான்.
ஸ்ரீராம ஜெய ஸ்ரீராம ஜெய ஸ்ரீராம ராம் ராம். .8.
— அத்தியாயம் 1 தொடர்கிறது.

1 comment:

Unknown said...

Adiyen, We have been singing the songs of SriRama Gnamirutham SundaraKandam written by Ramanyana Kalmani S.V.Ramaswamy, PostMaster, Vandavasi.Thanks for posting the book. This was sung by my grandmother and she is no more and my mom desparately need the book and finally we found the book with your link.

Thanks so much for your support. We also like to get the Bala kandam book, if you have please send it to my email address and that would be of great help to refresh the hertiage of the family.

Kind regards,
Kannan