Thursday, October 30, 2014

எம்பெருமானார் பெருமை


எம்பெருமானார் பெருமை !!!


Ramanuja
ஆச்சார்யன் அருளிச்செய்தது
———————————————————————-
எம்பெருமானார் பெருமை !!!
மதுரகவி கையிலன்று மாறனவன் தருவித்த
மாமணியே !! மாணிக்கமே !! வாழி வாழி !!

சித்திரையின் சீர்மல்கு மாதிரையிற் சிங்கநிகர்
சீலத்தோ டவதரித்தாய் !! வாழி வாழி !!

ஆளவந்தா ரகங்குளிர்ந் தாசீர்வ தித்திட்ட
அனந்தனின் அம்சமே !! வாழி வாழி !!

ஆச்சார்ய ரத்தினங்க ளைவர் தம்மிடத்தே
அளவற்ற பக்திசெய்தாய் !! வாழி வாழி !!

அறுபத மருளிச் செய்தத்திகிரி யரசனவன்
அரும்பத மணைத்திருந்தாய் !! வாழி வாழி !!

பெரும்பூதூரிற் பிறந்துமத் திகிரியில் லலர்ந்தும் பின்
பெரியனுக்கே யென்றானாய் !! வாழி வாழி !!

தான்நரகம் புகுந்திடினும் தாரகமந் திரத்தினை
தரணிக்குத் தரவிழைந்தாய் !! வாழி வாழி !!

கோட்டியூர் நம்பியும் கொண்டாடும் படிநின்ற
கோதையவள் சோதரனே !! வாழி வாழி !!

பஞ்சமரோ பாமரரோ பாகுபா டேதுமின்றி
பரமனடி சேர்க்கவந்தாய் !! வாழி வாழி !!

பழிசேர் பன்னீரா யிரத்தோ ரையுமுந்தன்
வழிசேர்த் துய்வித்தாய் !! வாழி வாழி !!

செல்லப் பிள்ளையையோர் சீரிய தகப்பனாய்ச்
செவ்வனே காத்திட்டாய் !! வாழி வாழி !!

விசிஷ்டாத் வைதமென்னும் வேதசா ரந்தன்னை
வாழ்விக்க வந்திட்டாய்!! வாழி வாழி !!

ஏற்றமிகு தொண்டுக்கென் றெழுபத்து நால்வரை
ஏற்படுத்தி வைத்திட்டாய் !! வாழி வாழி !!

திருமலைவாழ் நாதனுக்கே யவந்திருவாழி தனை
திருத்திக் கொடுத்திட்டாய் !! வாழி வாழி !!

ஈசனெதி ராசனெம் பெருமானா ரேயென்று
ஏறுபுக ழீட்டிநின்றாய் !! வாழி வாழி !!

தமருகந்த தானுகந்த தானான மேனியென
தருமத்தின் வடிவானாய் !! வாழி வாழி !!

ஊனுடம்பா யுயரரங்கன் கோவிலிலே குடிகொண்ட
உடையவரும் முறுபுகழே !! வாழி வாழி !!

குருகூர்சட கோபனொடு கூரத்துக் கூர்மதியான்
கூடியேத்தும் கோமகனே !! வாழி வாழி !!

தேசிகனும் மாமுனியும் தீர்க்கமாயுன் னடிபணிந்
துய்தவெம் மிராமானுச ! வாழி வாழி !!


———————————————————————————
தேசிகன் திருவடிகளே சரணம் !!
----------
Adiyen,
Raghavan Ramanuja Dasan
Singapore

No comments: