(Thanks to: ஸ்ரீ என்,வி,எஸ். ஸ்வாமி and T. Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091 )
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091 )
Saturday, July 28, 2012
சுப மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 10
உபநயனம் ஆனபின்பு அடுத்தது
விவாஹம்தானே!
ஸ்ரீ வேஙடேச சர்மாவின் நூலிலுள்ளதை எல்லாருக்கும் புரியும்படி எளிமைப் படுத்தி ஸ்ரீ என்,வி,எஸ். ஸ்வாமி வழங்குவதைத் தொடர்ந்து படிக்கலாம்.
ஸ்ரீ வேஙடேச சர்மாவின் நூலிலுள்ளதை எல்லாருக்கும் புரியும்படி எளிமைப் படுத்தி ஸ்ரீ என்,வி,எஸ். ஸ்வாமி வழங்குவதைத் தொடர்ந்து படிக்கலாம்.
விவாஹ மந்த்ரங்களை
இந்த்ரன் அநுக்ரஹிக்க ஹேது
விவாஹ
மந்த்ரார்த்தம்
முதல் ப்ரச்நம் - முதல்
கண்டம்
வரப்ரேஷணமாவது விவாஹம்
செய்துகொள்ள விரும்புகிறவன் நல்ல ப்ராஹ்மணர்களை பெண் பார்த்து வரச்சொல்லி, (நல்ல
பெண் கிடைத்ததும்) அவள் பெற்றோரிடம் இது விஷயமாகப் பேசி முடித்து வருவதற்காக
அனுப்புவதே வரப்ரேஷணம் ஆகும்.
ப்ரஸுக்மந்தா :- துரிதமாகச்
செல்லக் கூடியவர்களும் எடுத்த காரியத்தை நிறைவேற்றுவதில் வல்லவர்களும் ஆன ப்ராஹ்மண
உத்தமர்களே! நீங்கள் உடனே புறப்பட்டுச் சென்று கன்யையின் பிதாவைச் சந்தியுங்கள்.
அந்த கன்யையை நான் மணப்பதை இந்த்ர தேவனும் விரும்பி அநுக்ரஹிக்கிறான். ஏனெனில்,
கல்யாணமாகி தம்பதிகளாக நாங்கள் நடத்தப் போகும் ஸோம யாகத்தில் இந்த்ரனின்
ப்ரீதிக்கான ஆகாரங்களை அளிப்போம் என்பதை அவன் அறிந்துள்ளான்.
தனக்காகப் பெண் தேடப்போகும்
ப்ராஹ்மணர்களுக்கு வழியில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் இருக்க தேவதைகள்
ப்ரார்த்திக்கப்படுகிறார்கள்.
அந்ருக்ஷரா: :- ஓ தேவதைகளே!
எனக்காகப் பெண் தேடச் செல்லும் ப்ராஹ்மணர்கள் செல்லும் வழியில் கல், முள் போன்ற
தொந்திரவுகள் ஏதுமின்றி நல்ல பாதையாக இருக்கச் செய்யுங்கள். அர்யமா, பகன் போன்ற
தேவதைகள் எங்கள் தாம்பத்திய கோரிக்கையை நிறைவேற்றி வைக்கட்டும்.
கல்யாணம் நிச்சயமானபின்
வரன் கன்னிகையைப் பார்;துச் சொல்லும் மந்திரம்:
அப்ராத்ருக்நீம் :-
அப்ராத்ரு, அபதி, அபுத்ர என ஸஹோதரர்களின் நலனுக்காகவும், கணவனாகிய தன்னுடைய
நலனுக்காவும், பெறப்போகும் புத்ரர்களின் நலனுக்காகவும் முறையே வருணன், ப்ருஹஸ்பதி,
இந்ரனாகிய தேவர்களிடம் ப்ரார்த்தித்து இந்தக் கன்னிகையிடம் ஏதேனும் தோஷமிருந்து
மேற்சொன்னவர்களை பாதிக்கக்கூடுமானால் அவற்றை நீக்கி நல்ல சுபலக்ஷணங்களை அளித்து
அனைவருக்கும் க்ஷேமத்தை ப்ரார்த்திக்கிறான்.
பெண்ணின் ஒவ்வோர்
அங்கத்தையும் வரன் பார்ப்பதற்கான மந்த்ரம்:
அகோர சக்ஷூ :- ஏ பெண்ணே!
உன் கண்களால் பார்க்கப்படும் பார்வை தோஷங்களற்றவையாகவும் மங்களகரமாகவும்
இருக்கட்டும். உன் கணவனை துன்புறுத்தாதவளாய் இரு. கணவனுக்கும், கணவனின்
ஸஹோதரர்களுக்கும் இசைவான கருத்துடையவளாக விளங்குவாயாக. தூய நல்லெண்ணங்கள்
கொண்டவளாயிரு. க்ரூரமான பார்வையின்றி சாந்தமான குளிர்ந்த நோக்குடையவளாய், கணவனின்
இல்லத்தைச் சேர்ந்தோர்க்கு மங்களங்களைச் சேர்ப்பவளாய், நல்ல மனதும், மஹாலக்ஷ;மி
போன்ற வதனமும், நீண்ட ஆயுளுடன் சிறந்த மக்களை பெறும் பாக்யவதியாகவும்,
தன்புக்ககத்திலுள்ள பசு, பக்ஷி உள்ளிட்ட அனைவரிடத்தும் பற்றும் பாசமும் உள்ளவளாய்
இந்த கன்னிகை திகழவேண்டும் என்று மேலும் ப்ரார்த்திக்கிறான்.
பெண்ணிடம் உள்ள
அவலக்ஷணங்களைத் தர்பத்தால் துடைத்து நீக்குவதற்கான மந்த்ரம்:
இதமஹம் :- ஏ பெண்ணே!
உன்னிடம் என்னைக் கொல்லக்கூடிய அலக்ஷ்மீ எனப்படும் அமங்கலத்தன்மை இருந்தால் அதை
இந்த மந்திரத்தை ப்ரயோகித்து இந்த தர்பத்தால் துடைத்து அதை உன்னைவிட்டு
அகலும்படியாகச் செய்கிறேன் (என்று பெண்ணின் இரு புருவங்களுக்கு மத்தியில்
தர்ப்பையின் நுனியால் துடைத்து மேற்குப்புறம் எறிகிறான்).
தங்களைப் பிரிந்து புக்ககம்
செல்லும் பெண்ணின் பிரிவால் கண்ணீர்விடும் தாய் மற்ற பந்துக்களைப் பார்த்து
ஆறுதலாகச் சொல்லப்படும் மந்த்ரம் :-
ஜீவாம்ருதந்தி :- இந்த
திருமணம் என்னும் சுபகாரியத்தினால் பித்ருக்களும், தேவர்களும் த்ருப்தியடைந்து
அநுக்ரஹமும், ஆசீர்வாதமும் செய்கிறார்கள். தம்பதிகளுக்கும் ஒருவரை ஒருவர் தழுவி
மகிழும் ஆனந்தத்தையும், ஒருவருக்கொருவர் ஆதரவையும் அடைகிறார்கள். எனவே ஆனந்தமான
இந்நேரத்தில் அபசகுனமாக அழுதல் கூடாது. கன்னிகையின் தாய் மற்றும் பந்துக்களே!
‘இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம் வந்திருந்து எங்களை ஆசீர்வதிக்கின்றனர் என
ஆண்டாள் அருளிச்செய்துள்ளதை எண்ணிப்பாருங்கள். இவளை நான் மணந்து கொள்வதால்
இந்த்ராதி தேவர்கள் மற்றும் இரு குடும்பத்தின் பித்ருக்களுக்கும் ஆனந்தம்
அடைந்துள்ளனர், எனவே இந்த சுபமான வேளையில் இவளின் பிரிவுக்காக வருந்துவதை விடுத்து
எங்கள் க்ஷேமத்துக்காக அனைவரும் ப்ரார்த்தனை செய்யுங்கள்.
மணப்பெண்ணை நன்னீராட்ட
நால்திசைத் தீர்த்தங்களைக் கொண்டுவரும்படி பார்பனச் சிட்டர்களை ப்ரார்த்தித்தல்:
வ்யக்ஷத் க்ரூரம் :- இந்த
ஜலத்தினால் இவளிடம் உள்ள கெடுதல் ஏற்படுத்தக்கூடிய தோஷங்கள் விலகட்டும்.
அப்படிப்பட்ட பரிசுத்தமான ஜலங்களை ப்ராஹ்மணர்கள் கொண்டு வரட்டும். இந்த
ஸ்நாநத்தினால் இவள் ஸந்ததிகளை பாதிக்கக்கூடிய எந்த தோஷங்கள் இருந்தால் அனைத்தும்
விலகட்டும். ஹே ப்ராம்மணோத்தமர்களே நீங்கள் நான்கு திசைகளிலும் சென்று கன்னிகையின்
தோஷங்களை முற்றிலுமாக நீக்க வல்ல புனித தீர்த்தங்களை சேகரித்து வாருங்கள்.
பெண்ணின் தலையில்
தர்பத்தால் செய்யப்பட்ட வளையத்தையும், அதன்மீது நுகத்தடியை வைத்து, அதன்மீது
தங்கத்தை (திருமங்கல்யத்தை) வைத்து அதன்வழியாக தீர்த்தவிடும்போது சொல்லப்படும்
மந்த்ரம்.
அர்யம்ண: :- இந்த தர்ப
வளையம் சுற்றியிருப்பதுபோல், விவாஹ அக்னியைச்சுற்றி ஆதித்யன் முதலான தேவர்களும்
அனைத்து பந்துக்களும் இவளைச் சுற்றியிருந்து இந்த விவாஹ பந்தத்தை கண்டு
ஆசீர்வதிக்கட்டும். சூர்யனை க்ரணங்கள் சூழ்ந்திருப்பதுபோல் பந்துக்களும்
நண்பர்களுமாகிய இந்த ஸபையில் உள்ளோர் அனைவரும் எங்களைச் சூழ்ந்திருந்து சூர்யாதி
தேவர்களின் அநுக்ரஹத்திற்காக ப்ரார்த்திக்கும் இந்த வேளையில் என் கோரிக்கைகளை
முழுமையாக அருளவேண்டும்படி தேவதைகளை நீங்களும் ப்ரார்த்தனை செய்யுங்கள்.
நுகத்தடி வைக்க
மந்த்ரம்:
கேநஸ: கேரத: :- சசீ
தேவியின் கணவனான இந்த்ர தேவனே! ‘அபாலா" என்ற பெண்ணின் சரும நோயை, உம் தேரின்
சக்கரம் - தேர் தட்டு - நுகத்தடி இவற்றிலுள்ள துவாரங்களின் வழியாக ஜலம் விட்டு அவளை
நோயிலிருந்து விடுவித்து அழகுள்ள சரீரத்தை அடையும்படிச் செய்தாய். (அதுபோல் இந்தக்
கன்னிகையின் சிரசில் வைக்கப்பட்டுள்ள நுகத்தடி துவாரத்தின் வழியாக சேர்க்கப்படும்
புனித நீரால் இவளது தோஷங்களையும் போக்கியருளவேண்டும்.
ரிக் வேதத்தில்
கூறப்பட்டிருக்கும் அபாலையின் கதை அல்லது வரலாறு:
தொழுநோய், சொரி, சிரங்கு
போன்றவற்றால் பாதிக்கப்பட்ட அபாலை என்ற பெண்ணை எவரும் மணம்புரிய முன்வரவில்லை. அவள்
மணம்புரிந்து கணவனுடன் ஸோமனை வழிபட ஆவலாய் இருந்தாள். இந்நிலையில் ஒரு தினம் அவள்
ஒரு நதியின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாள். அவ்வெள்ள நீரில் ஸோம தேவனுக்கு
மிகவும் ப்ரியமான ஸோமரஸத்தைக் கொண்ட ஸோமலதை எனும் கொடி அவள் கையில் தற்செயலாகக்
கிட்டியது. அவள் அதன் ரஸத்தை பல்லால் கடித்துப் பிழிந்து ஸோமனை த்யானித்து
அவனுக்குச் ஸமர்ப்பித்தாள். இதனால் த்ருப்தியடைந்த இந்த்ரன், அவளை தன் தேர்
சக்கரம், தேர்த்தட்டு, நுகத்தடி இவற்றின் வாயிலாக மந்திரிக்கப்பட்ட தீர்த்தத்தைச்
செலுத்தி அவளை நல்ல அழகுள்ள ரூபவதியாக்கினான்.
நுகத்தடியில் ஸ்வர்ணத்தை
(தற்போது திருமாங்கல்யம்) வைக்கும் மந்த்ரம்:
சந்தே ஹிரண்யம் :- ஏ
பெண்ணே! மந்திர ஜலத்தின் ஸ்பரிசத்திற்காக உன் தலையில் வைக்கப்படும் இந்த ஸ்வர்ண
மயமான தங்கமானது உனக்கு எல்லாவித நலன்களையும் அளிக்கட்டும். அபாலையை
பரிசுத்தப்படுத்திய அதே மந்திரத்தால் நுகத்தடி வழியாக செலுத்தப்பட்டு, தங்கத்தில்
தோய்ந்து உன் அங்கங்களை வந்தடையும் இந்த ப்ராஹ்மணர்களால் கொண்டுவரப்பட்ட
பரிசுத்தமான புண்ணிய ஜலம் உன்னை ஸகலவிதமான தோஷங்களிலிருந்தும் விடுவித்து
பரிசுத்மாக்கி என்னுடன் இரண்டறக் கலந்து எல்லா மங்கலங்களையும்
அநுபவிப்போமாக.
பெண்ணை ப்ரோக்ஷிக்க ஐந்து
மந்திரங்கள் :
1. ஹிரண்ய வர்ணா: :-
ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று பெரிய பிராட்டியாரை வேதம் வர்ணிப்பதுபோல்,
திருமகளைப்போன்ற ஒளிபொருந்திய, தான் எப்போதும் சுத்தமானதும், அனைவரையும்
சுத்தப்படுத்தி அனைத்துவித பாபங்கள் தோஷங்களிலிருந்தும் விடுவிக்க வல்லதுமான இந்த
புண்ணிய தீர்த்தங்களால் ஸவிதா தேவன் உன்னை பரிசுத்தமாக்கட்டும்.
2. ஹிரண்யவர்ணா: :-
இப்படிப்பட்ட தீர்த்தங்களால்தான் கச்யபன் எனும் சூரியன் உண்டானான். அக்நியும்
இதிலிருந்துதான் தோன்றினார். எந்த தீர்த்தங்கள் தன்னுள் அக்னியை வைத்துள்ளதோ அந்த
சுபமான தீர்த்தங்கள் உனக்கு இம்மையிலும், மறுமையிலும் அனைத்து நலன்களையும்
வழங்கட்டும். (அக்நின் கர்பம் ததிரே - என்று ஜலம் அக்னியைத் தன் கர்பத்தில்
வைத்துள்ளது என வேதம் உத்கோஷிக்கிறது. இதன் பொருள் : ஜலம் என்பது இரண்டு ஹைட்ரஜன்,
மற்றும் ஒரு ஆக்ஸிஜன் ஆகிய வேதிப்பொருட்காளல் ஆனது என விஜ்ஞானிகள்
நிரூபித்துள்ளனர். ஆக்ஸிஜன் இல்லாமல் அக்னி இல்லை).
3. யாஸாம் ராஜா :-
தீர்த்தத்திற்கு அதிபதியான வருண தேவன் ஜல மத்தியில் இருந்து கொண்டு, ஜனங்களின்
புண்ய பாபங்களை பரிபாலித்து வருகிறாரோ, அந்த வருணனின் அநுக்ரஹத்தால் உனக்கு
நன்மைகள் ஏற்படட்டும்.
4. யாஸாம் தேவா: :- எந்த
தீர்த்தத்தை தேவர்களும் ஆஹாரமாக ஏற்கிறார்களோ, எந்த தீர்த்தங்கள் ஆகாயத்தில் மேக
ரூபமாய்த் தவழ்கின்றனவோ, அந்த புண்ணிய ஜலங்களால் உனக்கு எல்லா சுகங்களும்
கிட்டட்டும்.
5. சிவேநத்வா :- ஏ பெண்ணே
இந்த ஜலங்கள் உன்னை மங்கலகரமான சுபபார்வையை உன்மேல் செலுத்தட்டும். பரிசுத்தமான
புண்ணியகரமான தன் தேஹங்களால் உன் தேஹத்தை நனைக்கட்டும். நெய் தாரையாய் விழுவதுபோல்
உன்மேல் விழும் இந்த தீர்த்தங்கள் உனக்கு எல்லா அநுக்ரஹங்களையும் செய்யட்டும். ஏ
வதுவே மிகவும் மஹிமையுள்ள மங்களகரமான புனிதமான இந்த தீர்த்தங்கள் என்
ப்ரார்த்தனைக்காக இங்கு சூழ்ந்துள்ள தேவதைகள் மற்றும் பெரியோர்களின் அருளாசியுடன்
உன் சாரீரத்தைச் சேர்ந்தவுடன் நீ இனி இம்மியளவும் தோஷங்களற்றவளாய் மிகவும்
புனிதமானவளாய் பரிசுத்தையாய் ஆக்கப்பட்டுவிட்டாய் இனி அனைத்தும் உனக்கு
மங்களங்களேயாகும்.
கூறைப்புடவை
வழங்குதல்
குறிப்பு:- கூறை வஸ்த்ரம்,
கோடி வஸ்த்ரம் என்றால் புதிய துணி என்று பொருள்.
பரித்வா கிர்வணோ கிர: ஏ
தேவேந்த்ர தேவனே! எப்படி அனைவரிலும் உயர்ந்தோரான தேவ தேவர்கள் அனைவரும் உம்மைச்
சூழ்ந்திருந்து துதிக்கின்றனரோ, அதுபோல் இந்த புதிய புடவையானது இவளது மேனியைச்
சூழ்ந்திருந்து இவள் எப்போதும் ஸெளபாக்யம் நிறைந்தவளாக இருக்கவேண்டும் என்று
அநுக்ரஹிக்கவேண்டும். பரிசுத்தமான மரகதம் வைரம் போன்றவற்றையும் சாளக்ராம
பெருமாளையும் நாம் பட்டு வஸ்திரத்தில் வைத்து பாதுகாப்பதுபோல, மிகவும் பரிசுத்தமான
மங்களகரமான இந்த வதுவை வரன் ஒரு புதிய பட்டு வஸ்திரத்தை கொடுத்து வாங்கிக்
கொள்கிறான். அந்த வஸ்திரத்தைக் கொடுக்கும்போது இவளை பரிசுத்தம் செய்ய அநுக்ரஹித்த
தேவதைகளை ‘இந்த வதுவை இந்த பட்டு வஸ்த்ரம் சூழ்ந்திருப்பதுபோல் என்னுடைய
ஸ்தோத்திரங்கள் தேவதைகளான உங்களைச் சூழ்ந்திருக்கட்டும், நாங்கள் எப்போதும்
க்ஷேமமாக இருக்க அநுக்ரஹியுங்கள்" என்று வேண்டிக்கொண்டு புடவையை வதுவுக்கு
ஆசீர்வதித்துக் கொடுக்கிறான்.
திருமாங்கல்ய தாரணம்
பெண் புடவையை
உடுத்திக்கொண்டு வந்ததும்
திருமாங்கல்யம் புஷ்பம்
வகையறாவை தாம்பாளத்தில் வைத்து பெரியவர்களிடம் காட்டி அவர்கள் தொட்டு அநுக்ரஹம்
செய்வது வழக்கம். பின்னர், பெண்ணின் தகப்பனார் மடியில் மணப்பெண்ணைக் கிழக்கு நோக்கி
உட்கார வைத்து, மணமகன் மேற்கு நோக்கி இருந்து,
‘மாங்கல்யம் தந்துநா அநேந
மம ஜீவன ஹேதுநா கண்டே பத்நாமி சுபகே த்வம் ஜீவ சரதஸ்சதம்"
என்ற ச்லோகத்தினால்
மாங்கல்ய சூத்ரம் அணிவிக்கிறான்.
‘நான் ஜீவித்திருப்பதற்கு
ஹேதுவாக கயிற்றினால் ஆன இந்த மங்கள சூத்திரத்தை உனது கழுத்தில் அணிவிக்கிறேன் நீ
நூறாண்டுகள் சுமங்கலியாக வாழ்வாயாக" என்று வாழ்த்தி அணிவிக்கிறான்.
இந்த மங்களத்தை
ரக்ஷித்தருளும்படி பகவான் விஷ்ணு, மதுசூதனன், புண்டரீகாக்ஷன், கருடத்வஜன் என்னும்
திருநாமங்களால் எம்பெருமானை ப்ரார்த்திக்கிறான்.
பெண்ணின் கழுத்தில் தாலி
கட்டும் பொழுது மாப்பிள்ளை ஒரு முடிபோடுவதென்றும், பின்னர் மாப்பிள்ளையின் சகோதரி
அதாவது பெண்ணின் நாத்தனார் மேலும் இரு முடிகள் போடுவதென்றும் ஸம்பிரதாயம்.
குறிப்பு:- இந்த
திருமங்கல்ய தாரணம் செய்வதற்கான மந்த்ரமோ, ப்ரயோகமோ 1950க்கு முன் வெளியான
புத்தகங்கள், க்ரந்தங்கள் எதிலும் காணப்படவில்லை. நாச்சியார் திருமொழி -
வாரணமாயிரத்திலும் ‘மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக்
கண்டேன்" என்றுதான் உள்ளது. ‘மாங்கல்யம்" பற்றி எதுவும் இல்லை. அடுத்ததாக வரும்
தர்பக் கயிறு கட்டும் ப்ரயோகத்தை அநுஸரித்து, நுகத்தடியின்மீது பரிசுத்திக்காக
உபயோகப்படுத்தப்பட்ட தங்க வில்லைகளை கயிற்றில் கோர்த்து கழுத்தில் கட்டும் பழக்கம்
பின்னாளில் மாங்கல்யதாரணம் என்ற ஒரு ஸம்ப்ரதாயமாக ஏற்பட்டிருக்கவேண்டும்.
பெண்ணுக்கு யோக்த்ரம் எனும்
தர்பக் கயிறு கட்டும் மந்த்ரம்:
ஆசாஸாநா :- (முதல் காண்டம்
முதல் ப்ரச்நம்) ஓ அக்னி தேவனே! உம்மை நான் ஆராதிக்கும்போது என்னுடன் இருந்து
ஒத்துழைக்கும் இந்த கந்யைகைக்கு, மனஅமைதி, நல்ல பிள்ளைச் செல்வங்கள், தேவையான
செல்வம், நிறைந்த அழகு, இல்லறம் நடத்த தேவையான அனைத்து வசதிகளையும் இவள் உம்மிடம்
வேண்டுகிறாள். இவைகளை நீர் இவளுக்கு அநுக்ரஹிக்கவேண்டும் என்பதற்கர்கவும், இந்த
இல்லற வேள்வியில் இவளை இணைத்து பந்தப்படுத்திக்கொள்வதற்காகவும், இவளை இந்த தர்பக்
கயிற்றினால் கட்டுகிறேன்.
நல்ல மனது, குழந்தைகள்,
ஐஸ்வர்யம், அழகுள்ள சரீரம் என எண்ணிறந்த ஆசைகளுடன் என்னை அடைந்திருக்கும் இந்த
வதுவை அவற்றை அளிக்கவல்ல தேவதைகளின் ஆராதனமான இந்த விவாஹ ஹோமத்திற்காக இந்த தர்பக்
கயிற்றினால் சுபமாக கட்டுகிறேன்.
(இல்லறத்தான் (க்ருஹஸ்தன்)
மட்டுமே வேள்விகள் செய்ய அதிகாரம் உள்ளவன் என சாஸ்த்ரம் பகர்வதால், இன்று முதல் என்
ஆயுள் உள்ளவரை இவள் என்னுடன் இணைந்து அனைத்து வேள்விகளிலும் பங்கேற்றுப் பெறும்
நன்மைகளை இருவரும் சமமாக அநுபவிப்போமாக.)
பெண்ணை விவாஹ அக்னியின்
ஸமீபத்தில் (அக்னிக்கு மேற்கே கணவனுக்கு வலது பக்கத்தில் முதன் முதலாக உட்கார வைக்க
(பதவி நாற்காலியில் அமர வைத்தல்) மந்த்ரம்:
பூஷாத்வா இதோநயது
....
ஏ பெண்ணே! இன்றைய விவாஹ
கர்மா முடிந்ததும் பூஷா என்னும் தேவனின் அருளாசியுடன் நான் உன்னை என் வீட்டிற்கு
உன் கையைப்பற்றி அழைத்துச் செல்வேன். அப்போது முதல் நீ என் வீட்டிற்கு யஜமானியாக
விளங்குவாயாக. பின்னர் நாம் செய்யவேண்டிய நற்காரியங்கள் அனைத்திலும் எனக்கு நல்
ஆலோசனைகளைக் கூறுவாயாக.
ஏ வதுவே, பூஷா, அச்விநீ
முதலிய தேவர்கள் உனக்குத் தேவையான பாதுகாப்பை அளித்து என் க்ருஹத்திற்கு
கொண்டுவிடுவார்கள் இன்று முதல் அங்கு நீ என் க்ருஹத்திற்கு ஈஸ்வரியாக ஸர்வ
சுதந்திரத்துடன் இருந்துகொண்டு என்னுடன் அனைத்து யாக யஜ்ஞங்களையும் செய்து
அனைவருடைய அன்பையும் பெறுவாயாக.
குறிப்பு:- நிச்சயதார்த்த
மந்திரத்திலேயே ‘மூர்தாநம் பத்யுராரோஹ" என்று என்று வீட்டிற்கு யஜமானியாக
விளங்குவாய் என்று சொல்லப்பட்டது இங்கு விவாஹபந்தம் முடிந்ததும் மீண்டும் உறுதி
செய்யப்படுகிறது. யஜமானி என்றால் தன் அதிகாரத்தால் அனைவரையும் துன்புறுத்தும்
உரிமையைப் பெறுவதல்ல! சொத்தைப் பாதுகாத்து விரிவுபடுத்துபவனே யஜமானன். அதுபோல்
வீட்டிலுள்ள அனைத்துச் சொந்தங்கள், வேலைக்காரர்கள், செல்லப் ப்ராணிகள்
அனைவரிடத்தும் கனிவுடன் நடந்து, அவர்கள் நன்மைக்காகவே எப்போதும் சிந்தித்து அவர்களை
மேன்மையடையச் செய்து, அன்பினால் அரவணைத்துச் செல்பவளே சிறந்த யஜமானியாகும்.
தொடரும்
No comments:
Post a Comment