(Thanks to Sriman T. Raguveeradayal
C/O SRIRANGAM SRIMAD
ANDAVAN ASHRAMAM,
THIRUPPULLANI 623532
04567-254242//919443301091)
ஆழ்வார்களும் வேதங்களும் 15
Monday, July 30th, 2012
இதுவரை இங்கு எத்தனையோ பழைய நூல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். அப்போதெல்லாம் அந்நூலில் உள்ளதை உள்ளவாறு தட்டச்சிடுவதோடு நிறுத்திக் கொள்வது என்னுடையவழக்கமாக இருந்து வந்திருக்கிறது. நூலில் சொன்னவற்றை ஏற்றுக் கொள்வதையும் மறுப்பதையும் படிப்பவர்களின் மனோதர்மத்திற்கு விட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்வேன். ஆனால் பகிர்ந்து கொண்டிருக்கும் இந்நூலில் அடியேனால் ஏற்றுக் கொள்ளவேமுடியாத ஒருகருத்தை நூலாசிரியர் எழுதியிருக்கிறார். பிராமணர்களை மரியாதைப் படுத்துவதாக நினைத்து ஒரு அபத்தத்தை எழுதியிருக்கிறார். பேரறிஞர்தான் ஆனால் அவருக்கும் அடி சறுக்கியுள்ளது. நூலை அப்படியே வெளியிடும் வழக்கத்தைப் பின்பற்றி – ஆனால் மிகுந்த மன வருத்தத்துடன் – நூலின் இந்தப் பகுதியை இங்கு இட்டிருக்கிறேன். ஆசிரியர் எழுதியது நியாயமா என்று நீங்களே சொல்லுங்கள்.
எம்பெருமான் பிராம்மணர்கள் ஆச்ரயிக்கத் தகுந்தவன்
பிராம்மணர்கள் ஆச்ரயிப்பதால் எம்பெருமானுக்கு ஏற்றம் ஏற்படுவதை திருவெழுகூற்றிருக்கையில் திருமங்கை மன்னன் பின்வருமாறு அநுஸந்திக்கிறார்.
உன்னுடைய திருவடிகளில் சரணம் புகுந்தேன், அனுபவிக்கைக்கு விரோதியை போக்கி அருள வேண்டும் என்று பிரார்த்திக்கையில் எம்பெருமானைப் பலவிதமாக அனுபவித்துப் பேசுகிறார்.
அங்கு நான்கு வேதங்களையும் அத்யயனம் செய்து அக்னிஹோத்ராதி ஸகல கர்மாக்களுக்கும் அபேக்ஷிதங்களான ஆஹவனீயம், கார்ஹபத்தியம், தக்ஷிணாக்னி என்ற மூன்று அக்னிகளையும் ஆதானமூலம் பெற்று பஞ்சமஹா யக்ஞங்களையும் அனுஷ்டித்து யஜனம் முதலிய ஆறு கர்மாக்களில் எப்பொழுதுமே ஈடுபட்டுள்ள பிராம்மணர்களுக்கு ஆச்ரயிக்கத் தகுந்தவனாக எம்பெருமான் இருப்பதை (முத்தி நான்மறை ஐவகைவேள்வி அறுதொழிலந்தணர் வணங்கும் தன்மையை) அனுபவிக்கிறார். இதனால் நான்கு வர்ணங்களிலும் உத்கிருஷ்ட வர்ணமாய் நல்ல வழியே போகக் கடவதாயுமிருக்கும் பிராம்மண ஜாதிகளுடைய ஆச்ரயணீயினாயிருப்பது எம்பெருமானுக்கு மிகுந்த ஏற்றத்தை கொடுக்கிறதென்பது வெளியாகுகிறது.
Posted in ஆழ்வார்களும் வேதமும் | Leave a comment
ஆழ்வார்களும் வேதங்களும் 14
Friday, July 27th, 2012
அந்தணர் மந்திரமொழியுடன் வணங்க
பரமன் துயிலமருகிறான்
வேதத்தினிடத்திலும், வேதங்காரணமாக பிராம்மணர்களிடத்திலும் உள்ள பிரதிபத்தி காரணமாக ஸ்ரீ திருமங்கை மன்னன் திருவெழுகூற்றிருக்கையில் எம்பெருமான் பிராம்மணர்களுடைய வேத கானத்தைக் கேட்டு கண் வளர்ந்து அருளுகிறான் என்று கூறுகிறார். நிரவதிக ஸம்பத்தையும் யோக்யதையையுமுடைய திருக்குடந்தையில் பிராம்மணர்கள் மந்திர மொழியுடன் வணங்க விகஸிதமான பணாமண்டலங்களையுடைய திருவனந்தாழ்வான் படுக்கையில் ஜகத்ரக்ஷணத்தில் ஈடுபட்டவனாய்க் கொண்டு எம்பெருமான் கண் வளர்ந்து அருளுகிறான்.
செல்வம் மல்கு தென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க, ஆடரவமளியில் அரிதுயில் அமர்ந்த பரம திருவெழுகூற்றிருக்கை இங்கு திருக்குடந்தை எம்பெருமான் ஜகத் ரக்ஷணத்தில் அவஹிதனாய்க் கொண்டு திருக்கண் வளருவதற்கு அங்குள்ள பிராம்மணர்கள் வேத மந்திர மொழிகளால் அவனை வணங்குவதே காரணம் என்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுகிறார். பிராம்மணர்கள் மந்திர மொழியால் வணங்குவதால் எம்பெருமானுக்கு மிகவும் உயர்ந்த ஏற்றம் ஏற்பட்டிருப்பதை பரம என்ற விசேஷணத்தால் குறிப்பிடுகிறார்
மஹா பிராம்மணர்களுக்கு மணிவண்ணன் அருளாலே மோக்ஷத்தைக் கொடுக்கிறான். பிராம்மணர்களுக்கு அருளால் எம்பெருமான் மோக்ஷம் கொடுப்பதை கீழ்க்கண்ட இடத்தில் பூதத்தாழ்வார் குறிப்பிடுகிறார்.
புருஷார்த்தமென்ற புத்தியால் தேவலோகம் ப்ரவேஸிப்பதற்கு யத்தனிக்கக் கூடாது. எம்பெருமான் அருளாலே மோக்ஷத்தைக் கொடுப்பான். மஹா ப்ராம்மணர்களுக்கு அருளாலே மோக்ஷத்தைக் கொடுத்தவனும் மணிவண்ணனுமான எம்பெருமான் திருவடிகளை நெஞ்சே நீ மறவேல். அவற்றையே நினைப்பாயாக. (பொருளால் அமருலகம் புக்கியலாகாது, அருளாலரமருளுமன்றோ நீ மறவேல் நெஞ்சே நினை — இரண்டாம் திருவந்தாதி 4) இங்கு எம்பெருமான் திருவடிகளை மறக்காமல் தியானம் பண்ணு என்று நெஞ்சைப் பார்த்து ஆழ்வார் சொல்லுகிறார்.
எம்பெருமான் அருளாலே மோக்ஷத்தைக் கொடுப்பான் என்று அறுதியிட்டுப் பேசி பிராம்மணர்களுக்கு அவன் அருளாலேயே மோக்ஷம் கொடுத்ததையும் குறிப்பிடுகிறார்.

ஆழ்வார்களும் வேதங்களும் 13
Thursday, July 26th, 2012
பிராம்மணர்களின் ஆனுகூல்ய விருத்தியைப் பெற திருக்குடந்தையில் எம்பெருமான் கண் வளருகின்றான்
மேலும் பிராம்மணர்களிடம் உள்ள பக்தி காரணமாக (திருமங்கையாழ்வார் திருவெழுகூற்றிருக்கையில்)
பிராம்மணர்கள் வணங்கும் பகவானைக் கண்டு களிப்பது
பிராம்மணோத்தமர்கள் வணங்கும் எம்பெருமானையே தான் கண்டு களித்ததாக கீழ்க்கண்ட பாட்டில் திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறார்.
ஸர்வாதிகனாயும், இந்திரன், பிரமன், ருத்திரன் இவர்கள் அறிவதற்குக்கூட துர்லபனாயும் திருவழுந்தூர் பிராம்மணர்களால் ஸேவிக்கப் பட்டவனாயும் நீல வர்ணத்தை உடையவனுமான எம்பெருமானை அடியேன் கண்டு களித்தேன். (பெரியானை யமரர் தலைவர்க்கும், பிரமனுக்கும், உரியானை உகந்தானவனுக்கும் உணர்வதனுக் கரியானை அழுத்தூர் மறையோர்களடி பணியும் கரியானை அடியேன் கண்டு கொண்டு களித்தேனே திருமொழி 7-6-6) இங்கு தான் கண்டு களித்த எம்பெருமானுடைய ஏற்றத்தைப் பலவாறாகப் பேசும் பொழுது அழுந்தூர் மறையோர்கள் அடிபணிவதையும் குறிப்பிடுவதால் இதனாலும் எம்பெருமானுக்கு ஏற்றம் ஏற்படுவதைக் குறிப்பிடுகிறார்.
வேத நாவர் வணங்கும் பத்மநாபன்
அவ்விதமே திருமழிசைப்பிரான் வேதோச்சாரணத்தினால் பரிசுத்தர்களான பிராம்மணர்கள் எம்பெருமானை ஆச்ரயிக்கிறார்கள் என்று பிராம்மணர்கள் வணங்குவதால் எம்பெருமானுக்கு ஓர் ஏற்றத்தை திருச்சந்தவிருத்தத்தில் வெளியிடுகிறார்.
வெளுத்த நிறத்தை உடைய ஓர் ஸிம்ஹமாய், வளர நின்றுள்ள ஒளியை உடைய பற்களை உடையவனாய் ஹிரண்யனுடைய சரீரத்தின் மர்மத்தில் நகங்களுடைய பிரதேசத்தை அழுத்தினவனே! ஸர்வலோக பிரஸித்தமான பிராம்மண்யத்தை உடைத்தாய், உதாத்தானுதாத்தஸ்வரித ப்ரசய ரூபமான நாலு வகைப்பட்ட ஸ்வரத்தை உடைய வேதத்தை நாவிலே உடையவர்கள் நல்ல உபாயத்தினால் ஆச்ரயியாநிற்கிற பால்நிறக் கடலில் கிடந்த பத்மநாபனல்லயோ
வானி றத்தோர் சீயமாய் வளர்ந்த வாளை யிற்றவன்
ஊனிறந்து உகிர்த்தல மழுத்தினாயுலாய சீர்
நால் நிறத்த வேதநாவர் நல்ல யோகினால் வணங்கு
பால் நிறக்கடல் கிடந்த பத்மநாபனல்லயோ –23
என்றருளிச் செய்கிறார்.
இங்கு பிராம்மணர்கள் எம்பெருமானை வணங்குவதைக் குறிப்பிடுவதால் அதனால் எம்பெருமானுக்கு ஒரு ஏற்றம் உண்டாகிறதென்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றியது வெளியாகுகிறது. தத்துவ ஹித புருஷார்த்தங்களை அனுமானாதிகளால் நிர்ணயிக்காமல் வேதங்களைக் கொண்டே பிராம்மணர்கள் நிர்ணயிக்கிறார்கள். வேதங்கள் பகவானுக்கு பரமாந்தரங்கமானவை. இதனால் பிராம்மணர்களுக்கு ஏற்றம் ஏற்படுகிறது.

ஆழ்வார்களும் வேதங்களும் 12
Wednesday, July 25th, 2012
பிராம்மணர்களை உபாஸிப்பவனையே உபாஸிக்கிறார்
ஸ்ரீ திருமங்கை மன்னன்
நால்வகை வேதங்களை அத்யயனம் பண்ணி ஐந்து வேள்விகளையும் அனுஷ்டித்து ஆறு அங்கங்களையும் அதிகரித்து மேலுலகத்தின் தேவதைகளைக் காட்டிலும் அதிசயித்தவர்களாய் ஸ்ருஷ்டி காலம் துடங்கி கழனிகளையுடைய திருப்பேர் செங்கண் மாலோடு வாழ்பவர்களாயும் ஸௌசீல்யம் முதலிய ஆத்ம குணங்களோடு சிலாக்யமான தவத்தையுமுடைய பிராம்மணர்களுடைய ஹிருதயத்தை வாஸஸ்தானமாக கொண்டு ஆளுபவன் என் ஹிருதயத்தில் நித்ய வாஸம் பண்ணுகிறான்.
“நால்வகை வேதம் ஐந்து வேள்வி ஆறு அங்கம் வல்லார்
மேலை வானவர் மிக்க வேதியராதிகாலம்
சேலுகள் வயல் திருப்பேர் செங்கண் மாலோடும் வாழ்வார்
சீல மாதவத்தர் சிந்தையாளி என் சிந்தையானே!
திருமொழி 5-9-9
என்றருளிச் செய்கிறார். அவ்விதமே கானங்களில் சிராவ்யமான சொல்லை உடைத்தான வீணைகளின் தந்திகளில் உண்டான “பாலை” என்னும் ராகம் போல் மிக இனியனாய்க்கொண்டு என் நெஞ்சில் வந்து புகுந்து என் மனஸ்ஸையும் வாக்கையும் இருப்பிடமாக அங்கீகரித்தான். இப்படி அங்கீகரித்த பிறகு பிராம்மணர்களுடைய மனஸ்ஸை வாஸஸ்தானமாக உடையவனாய் நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியாய், எனக்கு நிர்வாஹகனாய், விருத்தி அடைந்துள்ள ஜலத்தை உடைய மீன்கள் விளையாடும் ஸமுத்ரம் போல் வர்ணத்தை உடையவனாய் நீலமணியின் ஸ்வபாவத்தை உடையவனாய் எனக்கு ஸ்வாமியாயுமுள்ள எம்பெருமானுடைய வர்ணத்தை ஒழிய வேறு ஒன்றையும் என் வாக்குச் சொல்லாது. (பண்ணி நின் மொழியாய் நரம்பில் பெற்ற பாலையாகி இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயுமிடங் கொண்டான் கொண்டபின் மறையோர் மனந் தன்னுள் விண்ணுளார் பெருமானை எம்மானை வீங்கு நீர் மகரம் திளைக்கும் கடல் வண்ணன் மாமணி வண்ணன் எம் அண்ணல் வண்ணமே அன்றி வாயுரையாதே) திருமொழி 7-3-7 என்றுமருளிச் செய்கிறார்.
இங்கு எம்பெருமானுடைய ஏற்றத்தை பல வழிகளில் பேசும் ஆழ்வார் பிராம்மணர்களுடைய ஹிருதயத்தில் வஸிப்பதையும் குறிப்பிடுகிறார். இதனால் எம்பெருமானுக்கு ஓர் ஏற்றமேற்படுவதை ஆழ்வார் அனுபவித்துப் பேசுவதாகவே ஆகிறது.

ஆழ்வார்களும் வேதங்களும் 11
Saturday, July 14th, 2012
வைதிகர் போன வழியே ஆழ்வாரும் போகிறார்.
இப்படி ப்ராஹ்மணன் எம்பெருமானின் ரூபமாகவே இருப்பது போல் வேதரக்ஷணம் காரணமாக அவனுக்கு அஸாதாரணமான ஏற்றமுமிருந்து வருகிறது. தத்வ ஹித புருஷார்த்தங்களுக்கு மூலப் பிரமாணமான வேதம் அவனிடமிருப்பதால் வைதிக ஸமூஹத்திற்கு வழிகாட்டியாகவும் அவன் விளங்கி வருகிறான். தத்வ ஹித புருஷார்த்த நிர்ணய விஷயத்திலோ பகவதநுபவ விஷயத்திலோ அவன் காட்டிய வழியிலேயே மற்றவர்கள் செல்ல வேணும். இதை ஸ்ரீ ஆழ்வார் திருவிருத்தத்தில் கீழ்கண்டவாறு தெரிவிக்கிறார். “வைதிகரே அஞ்சனத்தின் ஸ்வபாவமுடைய உன் திருமேனியையும், உன் செந்தாமரைக் கண்களையும் ஸேவித்து உன் திருவடியை உள்ளபடியே சூடும் ஸ்வபாவமுள்ளவர்கள். ஊருக்கு வெளியில் மேய்ந்து திரும்பும் காலத்தில் மாட்டு மந்தையிலுள்ள கண்ணுள்ள பசுக்கள் ஊரைக் கண்டதும் கனைக்க அதைக் கேட்டு குருட்டுப் பசுவும் எப்படி கனைக்குமோ, அப்படியே யானும் சொன்னேன். அடியேன் மற்று எதைச் சொல்லுவேன்” (“ மைப்படி மேனியும் செந்தாமரைக் கண்ணும் மைப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார் எப்படி யூராமிலைக்கக் குருட்டா மிலைக்கு மென்றும் அப்படி யானும் சொன்னேன், அடியேன் மற்று யாதென்பனே 94 “) வைதிக ஸமூக அமைப்பில் பிராம்மணன் தலைமை ஸ்தானத்திலிருப்பதையே வேதங்களும் ஸ்ம்ருதிகளும் அறுதியிட்டுச் சொல்லுகின்றன. தலைமையான ஸ்தானத்தை பிராம்மணன் வஹிப்பதற்கு வேதம் அவனிடமிருப்பதே காரணம். வேதாத்யயனத்தால் நிர்மலமாயுள்ள அவனுடைய அந்தக்கரணத்தில் தோன்றுபவை அடங்கலும் வைதிகமென்று வேதமே கூறுகிறது. இதனால் வைதிக ஸமூஹம் அவர்கள் காட்டிய வழியிலேயே செல்லுகிறது. இந்த உண்மையைப் பின்பற்றி ஆழ்வாரும் இங்கு பிராம்மணர்களான வைதிகர்கள் போகும் வழியிலேயே தானும் போவதாகத் தெரிவிக்கிறார். தன்னைக் குருட்டுப் பசுவாகப் பேசும் ஆழ்வாருக்கு வைதிகர்களிடத்திலுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆழ்ந்த பக்தியும் நன்கு வெளியாகுகிறது.
எம்பெருமானுக்கு மிகவும் அந்தரங்கமான வேதம் பிராம்மணனிடம் இருப்பதால், பிராம்மணர்களும் அவனுக்கு அந்தரங்கமானவர்களே. அதனாலே ஆழ்வார் அவர்கள் போன வழியிலேயே போவதை பெருமையாக நினைத்துப் பேசுகிறார். அவர்களுடைய தலைமையை தான் அங்கீகரிப்பதற்கான காரணத்தையும் இங்கு குறிப்பிட்டு இருக்கிறார். இது மிகவும் கவனிக்கத் தக்கது. வைதிகர்களே உண்மையான பிரகாரங்களால் உன் திருவடியை சூடும் ஸ்வபாவமுள்ளவர்களென்று அங்கு அருளிச் செய்கிறார். இங்கு தெரிவிக்கப் படும் அபிப்ராயம் ஆழ்வாரின் திருவுள்ளத்தில் ஆழ்ந்து கிடப்பது. எம்பெருமானின் ஸ்வரூபாதிகளை வேதமே உள்ளபடி வெளியிட முடியுமாதலால் வேதாத்யயனமுள்ளவர்கள்தான் எம்பெருமானை உள்ளபடி அனுபவிக்க முடியுமென்று ஆழ்வார் அறுதியிட்டுப் பேசுகிறார்.
இப்படி வேதாத்யயனம் காரணமாக பிராம்மணர்களிடத்தில் ஆழ்வார்களுக்கு மிகுந்த ஈடுபாடு ஏற்படுவதால் பிராம்மணர்கள் உபாஸிப்பவனையே தாங்களும் உபாஸிப்பதாகவும் பிராம்மணர்கள் ஹிருதயத்தில் வஸிப்பவனையே தாங்கள் உபாஸிப்பதாகவும் சில இடங்களில் தெரிவிக்கிறார்கள். மற்றும் சில இடங்களில் பிராம்மணர்களுடைய கைங்கர்யங்களை ஏற்றுக் கொள்ளவே எம்பெருமான் எழுந்தருளி இருப்பதாகவும், பிராம்மணாளுடைய வேத காநத்தைக் கேட்டு துயில் அமருவதாகவும் பிராம்மணர்களுடைய மந்திரபூதமான அக்நி மூலமே உலகத்தை உட்கொள்ளுவதாகவும் ஆழ்வார்கள் குறிப்பிடுகிறார்கள். “பிராம்மணர்களால் ஆச்ரயிக்கப் படுகிறவன்” என்றும் பிராம்மணர்களால் வணங்கப் படுகிறவன் என்றும் எம்பெருமானை புகழ்ந்து பேசி அனுபவிக்கிறார்கள்.
இவையெல்லாம் ஆழ்வார்களுக்கு பிராம்மணர்களிடமுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டையே தெரிவிக்கின்றன. இவைகளில் சிலவற்றை ஆழ்வார்களின் ஸ்ரீஸூக்திகளைக் கொண்டே காட்டுவோம்.

ஆழ்வார்களும் வேதங்களும் 10
Thursday, July 12th, 2012
“வேதங்களைக் கொண்டு பகவானை ஆச்ரயிக்கும்
பெரியோர்களைக் கிட்டித் தொழுது
உஜ்ஜீவிக்க வேண்டும்”
வேதாத்யயன ஸம்பன்னர்களான பெரியோர்கள் தாங்கள் செய்யும் பகவதாராதனத்தை வேத மந்திரங்களைக் கொண்டே செய்வார்கள். பரம பாவனமான வேதம் அவர்களிடமிருப்பதால் அவர்கள் மிகவும் பரிசுத்தர்கள். எம்பெருமானுடைய வடிவழகையும் ஸ்வரூபாதிகளையும் வெளியிடும் வேதங்களைக் கொண்டு பகவதாராதனம் செய்வதால் அவ்விதப் பெரியோர்களுக்கு எம்பெருமானிடத்தில் எப்பொழுதுமே ஈடுபாடு மிகவும் ஆழ்ந்ததாக நிற்கும். அப்படி உள்ள பெரியோர்களையே நாம் ஆச்ரயிக்கவேண்டும்.
இதை ஸ்ரீநம்மாழ்வார் “மேவித்தொழுது” (திருவாய்மொழி 5-2-9) என்ற பாசுரத்தில் வெளியிடுகிறார்.
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி பிரதிபாதகமாய் எம்பெருமானுடைய வடிவழகையும் வெளியிடக் கூடியது மாயுள்ள பரம பாவனமான வேத ருக்குகளைக் கொண்டு ஞானவிதி தப்பாதபடி புஷ்பத்தோடு கூடின தூபதீபம் சந்தனம் நீர் இவைகளை பூர்ணமாக உடையதாய்க் கொண்டு அச்சுதனை அநந்யப் ப்ரயோஜனனாய் ஆச்ரயிக்கும் அடியாரும் அவனுடைய ஞான சக்த்யாதி குணானு ஸந்தானத்தால் வித்தரான முனிகளும் உலகில் நிறைந்துள்ளார்கள்.
அவர்களைக் கிட்டித் தொழுது நீங்கள் உஜ்ஜீவியுங்கள். (“மேவித் தொழுதுய்ம்மினீர்கள் வேதப் புனித விருக்கை நாவில் கொண்டச்சுதன் தன்னை ஞானவிதி பிழையாமே பூவில் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து மேவித் தொழு மடியாரும் பகவரும் மிக்கதுலகே” திருவாய்மொழி 5-2-9)
இங்கு ஆழ்வார் நாம் உஜ்ஜீவிப்பதற்கு ஆச்ரயிக்க வேண்டிய பெரியோர்களைக் குறிப்பிடுகின்றார். அங்கு பகவதாராதனம் செய்யும் அடியார் என்று பொதுவாகக் குறிப்பிடாமல் வேத மந்திரங்களால் பகவதாராதனம் செய்யும் அடியார் என்று குறிப்பிடுகிறார். இதனால் நாம் ஆச்ரயிக்க வேண்டிய பெரியோர்கள் வேதங்களைக் கொண்டு பகவதாராதனம் செய்பவர்களாக இருக்க வேண்டுமென்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுவது வெளியாகுகிறது. அவ்விதப் பெரியார்கள் கிடைப்பார்களோ கிடைக்க மாட்டார்களோ என்ற ஸந்தேஹம் வேண்டாம். அவர்கள் உலகில் மிக்க இருக்கிறார்கள் என்றும் ஆழ்வார் கூறுகிறார்

ஆழ்வார்களும் வேதங்களும் 9
Monday, July 9th, 2012
வேதமில்லாமல் திருநாமம் கற்பது பழங்கிடைக்காதவர்கள்
பசுங்காயைக் கடிப்பது போன்றது
நாராயணா என்னும் பகவந்நாமமும் நான்கு வேதங்களும் பகவதநுபவத்திற்கு பொதுவாக ஸாதகமாக அமையுமானாலும் வேதங்கள் அனுபவ காலத்திலேயே ஸாக்ஷாத்தாக பகவதனுபவத்தை உண்டுபண்ணி அனுபவரஸம் உடனே ஏற்படச் செய்யும். வேதம் முதிர்ந்து பழுத்து ரஸபூர்ணமாக நிற்கும் பழத்தைப் போன்றது. திருநாமம் அவ்வளவு பூர்ணமான ரஸத்தை உடனே கொடுக்க முடியாததால் அது பசுங்காயைப் போலுள்ளது. இவ்வித பரிச்ரமத்திற்கு எம்பெருமானுடைய ஸ்வரூபமும் குணம் விபூதிப் பிரதிபாதக பதங்களும் வாக்கியங்களுமாயிருப்பதால் இதர பிரமாணங்களின் அபேக்ஷை இல்லாமலே விளம்பமில்லாமல் பகவதனுபவம் பண்ணுபவர்களுக்கு இது மிகவும் லகுவான மார்கம்.
இதனால் திருநாமங்களைக் காட்டிலும் வேத மந்திரங்களுக்குள்ள ஏற்றம் தெளிவாக வெளியாகிறது. ஸ்ரீ நம்மாழ்வார் “இருக்கார் மொழியால்” திருவிருத்தப் பாசுரத்தில் இந்த அபிப்பிராயத்தை நன்கு வெளியிட்டுள்ளார்.
“பூஸுரர்களான ப்ராம்ஹணர்கள் ரிக்குகளால் பூர்ணமான மந்திரங்களால் பகவதாராதன ரூபமான பரம தர்மத்தைச் செய்து உலகளந்த எம்பெருமானின் திருவடிகளை வணங்குகின்றனர். அவ்வித வேத மந்திரங்களாகிற ஸாதனம் இல்லாமலிருக்கும் நானும் பகவானும் சேரவொட்டாமல் செய்கிற பாபத்தோடும், அதை அனுஷ்டித்த என்னோடும் நொந்து பழமில்லாமையாலே பசுங்காயைக் கடிப்பாரைப் போல் திருநாமச் சொல் கற்றனம்.” ( இருக்கார் மொழியால் நெறி இழக்காமை உலகளந்த திருத்தாளிணை நிலத்தேவர் வணங்குவர். யாமும் அவா உருக்கா வினையோடும் எம்மோடும் நொந்து கனியின்மையில் கருக்காய் கடிப்பார் போல் திருநாமச் சொல் கற்றனமே” (திருவிருத்தம் 64) என்றருளிச் செய்கிறார். மிகச் சிறியதாக அமைந்துள்ள திருநாமத்தில் உள்ள எழுத்துக்களுக்கு அர்த்தம் கூறுவது கஷ்டமானது. பல ப்ரமாணங்களுடைய ஸாஹஸ்யம் இங்கு அபேக்ஷிதமாக உள்ளது. தாமதித்து ரஸானுபவத்தை உண்டுபண்ணுவது வேதங்களைக் கொண்டு அநுபவிக்கும் காலத்தில் இவ்வித பரிச்ரமத்திற்கு ஆவச்யகதை கிடையாது.
எம்பெருமானுடைய ஸ்வரூபம் குணம் விபூதிப்ரதிபாதக பதங்களும் வாக்கியங்களுமிருப்பதால் இதர ப்ரமாணங்களின் அபேக்ஷை இல்லாமலே விளம்பமில்லாமல் பகவதனுபவ முண்டாகிறது. வேதத்தைக் கொண்டு பகவதனுபவம் பண்ணுபவர்களுக்கு இது மிகவும் லகுவான மார்கம்.
இங்கு ஆழ்வார் ரிகாதி வேதமந்திரங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ணுவதை பழத்தை புஜிப்பதோடும் திருநாமம் கற்று பகவதனுபவம் பண்ணுவதை கருக்காய் கடிப்பதோடும் ஒப்பிட்டுப் பேசுகிறார்.ஸ்வத:ப்ரமாணமாயும், எம்பெருமானின் ஸ்வரூபாதிகளை நேரிலேயே காட்டித் தரவல்ல விலக்ஷண ப்ரமாணமாயும் வேதம் இருப்பதால் வேத மந்திரங்களைக் கொண்டு பகவதநுபவம் பண்ணுவது பழத்தைப் புஜிப்பது போலாகிறது. திருநாமம் பகவத் வாசகமானாலும் ஸர்வவர்ண ஸாதாரணமான அது வேத வாக்யமாக ஆக முடியாததால் வேதம்போல் திருநாமம் நேருக்கு நேராக பகவதநுபவத்தை உண்டு பண்ண முடியாது. அதனால் அது காலக்ரமத்தில் பழுத்து ரஸானுபவத்தை உண்டு பண்ண வேண்டிய கருக்காய் ஸ்தானத்தில் இருந்து வருகிறது. மேலும் இங்கு ஆழ்வார் பூஸுரர்களான ப்ராமணர்கள் வேதங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ணும் பாக்கியம் பெற்றுள்ளார்கள் என்றும் தன்னுடைய பாபம் காரணமாக தனக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிடுகிறார். தனக்குக் கிடைத்துள்ள திருநாமமும் வேதம்போல் பூர்ணமாக உடனே ரஸானுபவத்தை உண்டு பண்ணவில்லை என்றும் திருவுள்ளம் பற்றுகிறார். இதனால் வேதங்களைக் கொண்டு பகவதநுபவம் பண்ணுவதற்கு விரோதியான பாபமில்லாதவர்கள் பழம் போலுள்ள வேதங்களைக் கொண்டே பகவதநுபவம் செய்ய வேண்டுமென்றும் வேதங்களைக் கொண்டு பகவதநுபவம் பண்ணமுடியாத பாபமுள்ளவர்கள் திருநாமத்தைக் கொண்டு பகவதநுபவம் பண்ண வேண்டுமென்றும் ஏற்படுகிறது.
எல்லாவற்றுக்கும் மூலப் பிரமாணமாயுள்ள வேதத்தை அத்யயனம் செய்துள்ள பெரியோர்கள் வேதத்தாலே அறியப்பட வேண்டிய எம்பெருமானை சுலபமாக அறியலாம், எம்பெருமானுடைய ஸ்வரூபாதிகளுக்கு பிரமாணமான வேதம் அவர்களிடம் இருக்கின்றதன்றோ! அவர்களுள் வேதங்களைக் கொண்டு நாள்தோறும் பகவதநுபவம் செய்ய இடமுண்டு. இதை ஸ்ரீ பேயாழ்வார் “அறிவொன்றும்தாள்” என்ற பாசுரத்தில் நன்கு விளக்குகிறார்.
எப்பொழுதும் வேதத்தை செவ்வையாய் அத்யயனம் செய்து ஞானமாகிற பூட்டை தொடுத்து ஐவகையான இந்திரியங்களைத் தொடுத்து தமக்குள் அடக்குகையாகிற வலிய கதவை அடைத்து நன்றாய் பகவானை அறிய வல்லவர்கள் அழகிய கடல் நிறத்தனான ஸர்வேச்வரன் வகையை பிரதி தினமும் அறிவார்கள்”
“அறிவென்றும் தாள் கொளுவியைம்புலனும் தம்மில் செறிவென்னும் திண்கதவம் செம்மி மறை என்றும் நன்கோதி நன்குணர்வார்கள் காண்பரே நாடோறும் பைங்கோதவண்ணன்படி” (மூன்றாம் திருவந்தாதி 12)
இங்கு க்ஞானிகளாக உள்ள பெரியோர்களுக்கு வேதமாகிற ஸாமக்ரியும் கூட இருந்தால் அவர்கள் எப்பொழுதுமே பகவதநுபவம் பண்ணலாமென்று ஆழ்வார் திருவுள்ளம் பற்றுவது நன்கு வெளியாகுகிறது.

ஆழ்வார்களும் வேதமும் 8
Thursday, July 5th, 2012
வேதங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ணுவதே பூர்ணமானது.
திருநாமம் சிறிய திருப்பாவாடை, வேதம் பெரிய பாவாடை பகவதனுபவத்தில் திளைத்தவர்களுக்கு எப்பொழுதுமே பகவதனுபவம் பண்ண வேண்டுமென்ற அவா உண்டாகிறது. ஆனால் சரீர சம்பந்தத்தைப் பெற்று லோக யாத்திரை நடத்தும் காலத்தில் முழுவதும் பகவதனுபவத்தையே பண்ணிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் தேஹ யாத்திரைக்கிடையில் பகவதனுபவம் பண்ண சில சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. இவைகள் வேள்விகளென்று சொல்லப் படுகின்றன. இவைகளுள் ஸர்வஜந ஸாதாரணமாக விளங்குவது, புஷ்பங்களைக் கொண்டு அர்ச்சாமூர்த்தியில் பகவானை ஆராதனம் செய்வதே. ஆராத்தியனான பகவான் அர்ச்சையில் ஸந்நிஹிதனாய் கொண்டு நேருக்கு நேராக நிற்கிறான். பத்திர புஷ்பாதிகள் சுலபமாகக் கிடைக்கின்றன. இவைகளைக் கொண்டு அவனை ஆராதிப்பது மிகவும் எளிதானது. இங்கு அனுசந்தான அளவில் மட்டும் நிற்காமல் செயலளவிலும் ஆராதனம் வளருகிறது. மற்ற கிரியை போல் அர்ச்சையில் புஷ்பங்களை சமர்ப்பிப்பதும் ஒரு கிரியைதான். புஷ்பங்களை சமர்ப்பித்து ஆராதனம் பண்ண மந்திரங்களைச் சொல்லியே ஆராதனம் பண்ண வேண்டும். இவ்வித ஆராதனங்களைச் செய்த பிறகுதான் ஆஹாரத்தை உட்கொள்ளும் பழக்கம் இன்றும் இருந்து வருகிறது. பிரதி தினமும் பகவதாராதனம் செய்து ஆஹாரத்தை ஸ்வீகரித்தால்தான் பசி தீரும். பகவதாராதனம் செய்யாது ஆஹாரம் உட்கொண்டால், அன்று பட்டினி நாள்தான். சரீரத்தை ரக்ஷிக்க ஆஹாரம் கிடைத்ததே தவிர, ஆத்மாவுக்கு ஆஹாரம் கிடைக்கவில்லை. சரீரத்தை தரிக்கும் ஆத்மாவுக்கு பகவதாராதனம் மூலம் ஆஹாரம் கிடைக்காததால், அந்த தினத்தை பட்டினி தினமாக பெரியோர்கள் கொள்கிறார்கள். பகவதாராதன காலத்தில் புஷ்பங்களை சமர்ப்பிக்கும்போது வேத மந்திரங்களையும் உபயோகப் படுத்தலாம். அல்லது பகவன் நாமகடிதமான அஷ்டாக்ஷரத்தை உபயோகப் படுத்தலாம். வேதம் முதல் மூன்று வர்ணங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் ஏற்பட்டது. ஆனாலும் வேத மந்திரங்கள் பல சந்தஸ்ஸுகள் ரூபமாக இருப்பதால் விஸ்தாரமாக பகவானின் சொரூப, ரூப குணாதிகளை அனுபவிக்க உதவுகின்றன. அஷ்டாக்ஷரம் அவ்வாறு அமையவில்லை. தந்திர மந்திரம் என்ற முறையில் சர்வருக்கும் இங்கு அதிகாரம் உண்டு. ஆனால் இங்கு எட்டே எழுத்துக்கள் இருந்து வருகின்றன. இவை மூலம்தான் எம்பெருமானின் சொரூப, ரூப குணாதிகளை நாம் அனுபவிக்கமுடியும். இதற்கு பல நூல்களின் உதவி வேணும். நிகண்டு நிர்வசன சாஸ்திரங்களின் உதவியும் வேண்டும். அவைகளால் கிடைக்கும் உதவியும் சிறிய அளவில்தான் நிற்கிறது. அதனால் வேதமந்திரங்கள் பெரிய உருவில் அமைந்து எம்பெருமானின் சொரூபங்களை இதர நிரபேக்ஷமாக பெரிய அளவில் பிரதிபாதனம் பண்ணுவதால் பெரிய அளவில் சுலபமாக வேதங்களைக் கொண்டு பகவதனுபவம் பண்ண முடிகிறது. இந்தக் கருத்தைத் திருவுள்ளத்தில் கொண்டு பெரியாழ்வார் “கண்ணா நான்முகனைப் படைத்தானே” (5-1-6) என்ற பாசுரத்தில் “ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும்” “ருக், யஜுர்,சாம வேத நான்மலர் கொண்டு உன்பாதம் நண்ணா நாளும்” என்று தனித்தனியாகப் பிரித்துப் பேசுகிறார். இந்தப் பாசுரத்தில் கண்ணா நான்முகனைப் படைத்தவனே, கரியாய் அடியேனுக்கு உண்ணா நாளில் பசியொன்று என்பதும் இல்லை மாறாதே நமோ நாராயணா என்று எண்ணா நாளுமே ருக்,யஜுர், சாம வேத நான்மலர் கொண்டு உன்னை நண்ணா நாளும் கூடுமாகில் அதுதான் எனக்கு உபவாச தினம் என்று அருளிச் செய்கிறார்.
கண்ணா! நான்முகனைப் படைத்தானே!
காரணா! கரியாய்! அடியேன் நான்
உண்ணா நாள் பசியாவதொன்றில்லை
ஓவாதே ‘நமோநாரணா!’ என்று
எண்ணாநாளும் இருக்கெசுச்சாம
வேத நான்மலர் கொண்டுன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறு மாகில்
அன்றெ னக்கவை பட்டினி நாளே. (5-1-6)
இங்கு திருவஷ்டாக்ஷரத்தையும் வேத மந்திரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பேசுவது அவைகள் மூலம் ஏற்படக்கூடிய அனுபவ பிரகாரத்தை பற்றியது. திருவஷ்டாக்ஷரத்தால் சிறிய அளவில் பகவதனுபவம் ஏற்படுகிறது என்று திருவுள்ளம் பற்றுவது கவனிக்கத் தக்கது. இங்கு பெரிய ஜீயர் செய்யும் விவரணம் மிகவும் அழகாக அமைந்துள்ளது. “திருமந்திரம் சங்க்ரஹமும் வேதம் விவரணமாயிறே இருப்பது” என்று அருளிச் செய்கிறார். அதுமட்டுமல்ல, “நமோ நாரண என்றது போராமே பெரும் திருப்பாவாடையிலே மண்டுகிறார்” என்று அருளிச் செய்வதும் கவனிக்கத் தக்கது. அரும்பதக்காரர் திருநாமம் சிறிய திருப்பாவாடை வேதம் பெரிய திருப்பாவாடை என்று வர்ணிக்கிறார். உலகத்தில் பசிக்குத் தகுந்தாற்போல் உணவை உட்கொள்வதைப் பார்க்கிறோம். சிறிய அளவில் பசி உள்ளவன் சிறிய திருப்பாவாடையில் உள்ள உணவை உட்கொண்டு திருப்தியடைகிறான். பெரிய பசி உள்ளவன் பெரிய திருப்பாவாடையில் உள்ள உணவை உட்கொண்டு திருப்தியடைகிறான். பெரிய ஆசை உள்ளவன் பெரிய திருப்பாவாடையில் உள்ளதை அனுபவித்து உத்ஸாஹத்துடன் ஈடுபடுகிறான் என்பதைக் கண்டார்கள் மண்டுகிறார் என்று கூறப் படுகிறது. இதனால் சிறிய அளவில் பகவதனுபவம் பண்ண நினைப்பவர்களுக்கு திருநாமம் போதுமானதென்றும் பெரிய அளவில் பகவதனுபவம் பண்ண வேதங்களையே நாட வேண்டும் என்றும் ஆழ்வார்கள் திருவுள்ளம் பற்றுவது வெளியாகிறது.

ஆழ்வார்களும் வேதமும் 7
Tuesday, July 3rd, 2012
எம்பெருமான் வேதியன்
பிராஹ்மண்யம் என்ற கருத்து தனிச்சிறப்பு வாய்ந்தது. எம்பெருமான் செய்யும் லோகோபகாரத்தை செய்ய அது ஏற்பட்டுள்ளது. பிராஹ்மண்யத்தை உடையவர்களின் உலக வாழ்க்கையில் காணப்படும் குறைகளோடு பிராமண்யத்தை ஒன்று படுத்தி பேசக்கூடாது. தனக்கென்று தனியாக ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல் உலகத்தோடு ஒன்றாகி உலகத்தினுடைய யோக க்ஷேமத்தை கவனிக்க பிராஹ்மணம் ஏற்பட்டது. பிராமணன் என்ற சொல் வேதத்தோடு பிரிக்க முடியாதபடி இணைந்து நிற்பது. பிரஹ்ம என்ற சொல்லால் வேதம் சொல்லப்படுகிறது. அன என்ற சொல் மூச்சு விடுவதைக் குறிப்பிடுகிறது. வேதத்தை ஜீவக்களையாக உடையவன் பிராமணன். வேதத்தை அத்யயநம் பண்ணி, பிறருக்கு உபதேசம் செய்யும் அதிகாரத்தையும் பிராமணனிடத்தில் வேதம் கொடுத்து விட்டதால் பிராமணனை நம்பியே வேதம் நிற்கிறது என்று ஓதப்படுகிறது. வேதத்தைப் பாதுகாப்பவன் என்ற முறையிலும் வேத வேள்விகளை செய்பவன் என்ற முறையிலும் அவன் தனி இடத்தில் இருந்து வருகிறான். பகவான் பிரம்மண்யதேவன். “பிராம்மணர்களுக்கு ஹிதம் செய்வதற்காக ஏற்பட்டுள்ளான்” என்று குறிப்பிடப் படுகிறது. அதுமட்டுமல்ல, பிராஹ்மணனே பகவான்தான் என்றும், இதுவும் ஒரு அவதார விசேஷம் என்றும் வேதம் கூறுகிறது. இதைப் பின்பற்றியே ஆழ்வார்களும் வேதியன் பகவானுடைய அவதாரமே என்று பல இடங்களில் பேசுகின்றனர். வேதம் பூமியிலுள்ள பிரத்யக்ஷமான பிருஹ்மமானது ஒன்றும், பிரத்யக்ஷமான தேவர்கள் என்றும் கூறுகிறது. [பிரும்ம பிராஹ்மண ஆத்மநா ஏதேவை தேவா: ப்ரத்யக்ஷம்” ஆழ்வார்களும் “நிலத்தேவர்” என்று குறிப்பிடுவார்கள்.
சிறுமறையோன் (குலசேகரர் 1-10-9), வேங்கட வேதியனை (திருமங்கை மன்னன் 1-9-10), புலம்புரி நூலவனைப் பொழில் வேங்கடவேதியனை (9-9-9), வெண்புரி நூலனை (திருவிருத்தம் 79), தாமரைக்கண்ணும் வைதிகரே (திருவிருத்தம் 94), வெறிகொண்ட தண்டுழாய்வேதியனை (திருவிருத்தம் 95), மெய்ஞான வேதியனை (திருவாய்மொழி 3-1-11), மறைவாணனை (திருவாய்மொழி 4-6-10), வினயேனுடை வேதியனே (திருவாய்மொழி 7-1-2) என்பது போன்ற இடங்களில் ஆழ்வார்கள் பகவானைவேதியனாகவே அனுபவிக்கிறார்கள். வேதியர்கள் பகவானிடம் பக்தியுள்ளவர்களே . தொண்டரடிப்பொடி ஆழ்வார் தனக்கு பக்தி இல்லை அருள் வேண்டும் என்று யாசிக்கும் காலத்தில் நைச்யாநு ஸந்தானம் பண்ணுகிறார். அப்பொழுது “குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொளந்தணமை தன்னை ஒளித்திட்டேன் “ (திருமாலை 25) என்று அருளிச் செய்வது மறைமுகமாக ப்ராஹ்மண்யத்தின் பெருமையை விளக்குகிறது.

ஆழ்வார்களும் வேதமும் 6
Sunday, July 1st, 2012
வேதம் எம்பெருமானே!
(வேதமாகி, வேள்வியாகி, [திருச்சந்தவிருத்தம்] வேதம் ஆழ்வார்களுடைய அருளிச் செயல்களில் தனி இடத்தைப் பெற்று விட்டது. வேதம் போன வழியே ஆழ்வார்களுடைய அனுபவம் இருந்து வருகிறது. அவர்கள் அனுபவிக்கும் எம்பெருமான் வேதப் பிரதிபாத்தியன். அதுமட்டுமல்லாமல், வேதமே எம்பெருமானின் அவதார விசேஷம் என்று ஆங்காங்கு ஆழ்வார்கள் அருளிச் செய்கிறார்கள். துஷ்ட நிக்ரஹம் சிஷ்ட பரிபாலனம் இவைகளை அவதாரங்களால் பகவான் செய்கிறார். தர்மத்திற்கு வாட்டமும் அதர்மத்திற்கு எழுச்சியுமேற்படும் காலத்தில் அவதாரம் செய்வதாக பகவான் கீதையில் கூறுகிறார். ஆனால் இந்த அவதாரங்கள் அந்தந்த காலத்தில் தோன்றி மறைந்து விடுவதால் அவை தற்காலிகமானவை. அதுமட்டுமல்ல, அந்தந்த அவதாரங்களுக்கு குறிப்பிட்ட நோக்கங்களும் இருந்து வருகின்றன. எவ்வளவு அவதாரங்கள் ஏற்பட்டாலும் அதில் குறைகளை நாம் காண்கிறோம். எல்லா காலத்திலும் எல்லாருக்கும் எல்லா விதமான கஷ்டங்களையும் நிவர்த்தி பண்ணி ஜகத்தை ரக்ஷிக்க விலக்ஷணமான ஒரு அவதாரம் செய்ய திருவுள்ளம் பற்றி எம்பெருமான் வேதரூபமான அவதாரத்தை செய்தருளுகிறான். லோக ரக்ஷண வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள பகவானுக்கு பலவிதமான அவதாரங்கள் செய்வது அவசியமாகிறது. வேதமாக அவதாரம் பண்ணுவதும் இவைகளுள் ஒன்று. உலகத்திலுள்ள பதார்த்தங்களில் அனுப்பிரவேசம் பண்ணி அந்தந்த பதார்த்த ரூபமாக பகவான் ஆகிறான். வேதமாகிற அவதாரம் அவ்விதமே இல்லை. தனி நோக்கம் கொண்டது. ஜீவாம்சத்தை அதிஷ்டிக்காது. நேரில் செய்யப்பட்ட அவதாரம். விஷ்ணு புராணத்தில் பகவான் வேதமாகவும் வேள்வியாகவும் அவதாரம் செய்கிறான் என்று பராசர பகவான் ஸ்பஷ்டமாக கூறுகிறார். [வேத யஜ்ஞமயம், ரூபம் அசேஷ ஸ்திதௌ ஜகத:] இதைப் பின்பற்றித்தான் ஆழ்வார்களும் பகவானை வேதமாகி நிற்கிறான் என்று அருளிச் செய்கிறார்கள். “நான்மறையாய் வேள்வியாய்” (பெரியாழ்வார் திருமொழி 4-9-5) “மறையானான்” (பெருமாள் திருமொழி 1-4-8), “ வேத நான்குமாகி” (திருமழிசைப்பிரான் 15), “ வேதமாகி வேள்வியாகி (34), “இருக்கலந்த வேத நீதியாகி நின்ற நிர்மலா” (103), “வேதத்தை” ( திருமங்கை மன்னன் 2-3-2) “ அருமறையும் அவையுமானாய் (4-6-9), நான்மறையானவனே (6-1-6), “ ஓதல் செய் நான்மறை ஆகியும்” (6-1-9), “ வேதமும் வேள்வியும் ஆனான் “ (9-4-9), “வேத நான்காய்” (திருநெடுந்தாண்டகம்) மன்னு மறையும் நான்குமானானை
Posted in ஆழ்வார்களும் வேதமும்
ஆழ்வார்களும் வேதமும் 5
Monday, June 25th, 2012
எம்பெருமான் முழு வேதத்தின் அமுதம்
பலவிதமாக எம்பெருமானை நிரூபணம் செய்த உபநிஷத்து பகவான் ரஸஸ்வரூபம் என்றும் நிரூபிக்கிறது. (ரஸோ வை ஸ:) இந்தக் கருத்தை விளக்கும் காலத்தில் ரஸத்தை அடைந்து அநுபவித்தால் தான் ஆனந்தம் உண்டாகிறது என்றும் உபநிஷத்து கூறுகின்றது. (ரஸம் ஹி ஏவ அயம் லப்த்வா ஆனந்தீ பவதி) ரஸஸ்வரூபமாக எம்பெருமானைச் சொல்வது எம்பெருமானுடைய போக்யத்வத்தை வெளியிடுகிறது. ஞான நிஷ்டையில் நின்று எம்பெருமானை சிலர் அறிந்து கொண்டால் போதுமென்று நினைக்கிறார்கள். எம்பெருமானை அனுபவிக்க சிலர் விரும்புகிறார்கள். ஆழ்வார்கள் எம்பெருமானை அனுபவிக்க முற்பட்டு நிற்கின்றனர். பலவழிகளில் எம்பெருமானுடைய போக்யத்வத்தை வெளியிடுகிறார்கள். எம்பெருமான் சத்திய, ஞான, அனந்த, ஆனந்த, அமல, ஸ்வரூபனாக இருப்பது போல் ரஸஸ்வரூபமாக இருப்பது அவனுடைய அனுபவத்தில் ஈடுபடச் செய்கிறது. இந்த வழியில் இறங்கிய பக்தர்கள் எந்தெந்த வஸ்துக்கள் போக்கியமாக உலகத்தில் காணப்படுகின்றனவோ அந்தந்த வஸ்துக்களாக எம்பெருமானை அனுபவித்துப் பேசுகிறார்கள். உலக வஸ்துக்களை அனுபவித்தால் ஏற்படும் ஆனந்தம் அநித்தியமானது, குறைவுள்ளது. ஆனால் எம்பெருமானை அனுபவிப்பதால் ஏற்படும் ஆனந்தம் நித்தியமானது நிரதிசயமானது. அருங்கரும்பினை கனியை, அமுதப் பொதியின் சுவையும் (பெரிய திருமொழி 7-10-1), பாலும் தேனும் கன்னலும் அமுதுமாகி (திருவாய்மொழி 4-3-10) என்றும் எம்பெருமானை அனுபவிக்கிறார்கள். அம்ருதமாக எம்பெருமானை அனுபவிக்கும் ஆழ்வார்கள் வேத சம்பந்தத்தோடு அந்த அமிருதத்தை அனுபவிக்கிறார்கள். வேதியர் முழுவேதத் தமிர்தத்தை (நம்மாழ்வார் 2-5-4), அந்தணர்தம் அமிர்தத்தினை (பெரியாழ்வார் 5-4-11), நால்வேதக் கடல் அமுதத்தை (பெரியாழ்வார் 4-3-11) என்று வேத சம்பந்தத்தோடு எம்பெருமானை அமிருதமாக அனுபவிக்கின்றனர். அமிருதம் கடலைக் கடைந்து எடுக்கப் பட்டது. அவ்விதமே வேதமாகிற கடலிலிருந்து எம்பெருமானாகிய அமிருதம் கடைந்து எடுக்கப் பட்டது என்று கூறுகிறார். பகவான் பரம போக்கியன் என்பதை அமிருதம் என்ற சொல்லால் வெளியிட வேதப் பிரதிபாத்யத்துவத்தால் வந்த பெருமையை விளக்க வேதத்திலிருந்து கிடைத்த அமிருதம் என்று பேசுகிறார்கள். அந்தணர்களின் அமிருதம் என்று குறிப்பிடுவதும் அந்தணர்களுக்கு அடிப்படையான வேதத்தை முன்னிட்டுக்கொண்டு பேசும் பேச்சே. இங்கும் வேதப்ராமாண்யம் மறைமுகமாகப் பேசப் படுகின்றது. எம்பெருமான் தங்களுடைய சிந்தையின் கற்பனையிலிருந்து தோன்றிய அமுதமில்லை. வேதத்தின் கருத்துக்களிலிருந்து கிடைத்த அமுதம் என்று கூறுகின்றார். வேதம் ரிக், யஜுர், ஸாம, அதர்வண ரூபமாக நான்கு வகையாக நிற்கின்றது. அவ்விதமே மந்திரம் பிராம்மணம், கர்ம பாகம், ஞான பாகம் என்று பலவிதமாகப் பிரிந்து நிற்கிறது. மந்திர பாகம் பகவானுடைய ஸ்வரூபாதிகளை வெளியிட்டுப் புகழ்ந்து பேசி பிரார்த்தனையை வெளியிடும் இடம். பிராஹ்மண பாகம் பகவதாராதனாத்மகமான கர்ம ஸ்வரூபத்தை வெளியிடுவது. இவைகளில் ஞான பாகம் சித், அசித், ஈச்வரன் என்ற தத்துவத்திரயங்களைக் நிரூபித்து பகவானை அடையும் உபாயங்களைக் கூறுவது. இவ்விதம் ஒரே வேதம் பல நோக்கத்தோடு பல வழிகளில் பிரிந்திருப்பதால் சில பாகங்களுக்கு எம்பெருமானோடு சம்பந்தம் இருக்குமோ இல்லையோ என்ற சந்தேகம் வர அதற்கு இடமில்லாமல் செய்ய எல்லா வேத பாகமும் ஏதாவதொரு வழியில் எம்பெருமானைத்தான் பிரதிபாதனம் பண்ணுகிறது. வேதம் முழுவதும் எம்பெருமானைச் சொல்லுவதுதான் என்பதைக் காண்பிக்க முழு வேதத் தமுதத்தை என்று பேசுகின்றனர். வேதங்களின் மந்திரங்கள் ரிக், யஜுர், ஸாம, அதர்வணாத்மகமாக இருந்தாலும் எல்லா வேதங்களும் முடிவில் எம்பெருமானைத்தான் கூறுகின்றன என்பதைக் காண்பிக்க நால்வேதக் கடல் அமுதத்தை என்று கூறப்படுகின்றது.

ஆழ்வார்களும் வேதமும் 4
Friday, June 22nd, 2012
ஹம்சமாயும் ஹயக்ரீவனாயும் அவதாரம் பண்ணி
வேதத்தை உபதேசம் பண்ணுகிறான்
வேதம் நித்யமானது என்பது வைதிகர்களின் அடிப்படையான கொள்கை. சுருதி ஸ்ம்ருதி இதிஹாஸ புராணங்கள் இந்தக் கொள்கையை பல வழிகளில் விளக்குகின்றன. பிரளய காலத்தில் வேதம் மறைந்து விடுகிறது. மறுபடியும் ஸ்ருஷ்டியை ஆரம்பிக்கும் காலத்தில் வேதங்களை பகவான் பிருஹ்மாவிற்கு உபதேசிக்கிறான். வேதங்களில் அந்தந்த காலத்தோடு சம்பந்தமுள்ள பல கதைகள் இருப்பதுபோல் தோன்றினாலும் அந்த அந்தக் காலத்தில் வேதமுண்டானதாக நினைக்கக்கூடாது. வேதம் பிறப்பும் இறப்பும் இல்லாத ஒரு கிரந்தம் என்ற அடிப்படையிலேயே கதைகளுக்கு விளக்கம் கூற வேண்டுமென்று பிரும்ஹ ஸூத்திரகாரர் கூறுகிறார். பகவான்போல் அநாதியானது வேதம். பிரளய காலத்தில் வேதம் மறைந்து விடுகிறது. மறுபடியும் ஸ்ருஷ்டிக்கும் காலத்தில் பகவான் ப்ருஹ்மாவிற்கு அதை உபதேசம் பண்ணுகிறான் என்று இதிஹாஸ புராணங்கள் கூறுகின்றன. அன்னப்பக்ஷி உருவத்திலும் ஹயக்ரீவ உருவத்திலும் பகவான் உபதேசம் பண்ணுகிறான் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆழ்வார்களும் அதைப் பின்பற்றியே பேசுகிறார்கள்.
(அன்னமாய் அங்கு அன்று அருமறை பயந்தான் [பெரியதிருமொழி 5-7-3] அன்னமாய் நிகழ்ந்த அமரர் பெருமானை [112-1-107])
அவ்விதமே ஹயக்ரீவ அவதாரம் பண்ணி உபதேசம் செய்ததையும் ஆழ்வார்கள் குறிப்பிடுகின்றார்கள். பரம்பின கலைகளை உடைத்தான நால்வகைப் பட்டுள்ள வேதங்களுடைய அர்த்தத்தையெல்லாம் ஹயக்ரீவ மூர்த்தியாய் அருளிச் செய்தான் என்று திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறார். (“பன்னு கலை நால்வேதப் பொருளையெல்லாம் பரிமுகமாய் அருளிய எம்பெருமான் காண்மின்” 7-8-2.)
மறையில் கூறப்படும் பொருள்களாக பகவான் ஆகிறான்.
அநாதியான வேதமே ஸ்ருஷ்டிக்கும் மூலப் பிரமாணமாக இருந்து வருகிறதென்பதும் வைதிக மதத்தின் அடிப்படையான கொள்கை. பகவான் வேதத்தைப் பார்த்துத்தான் அந்தந்த பதார்த்தங்களைப் படைக்கிறான். ஸத்ரூபமாயும் அஸத்ரூபமாயும் உள்ள பதார்த்தங்கள் நிறைந்த உலகத்தை வேதத்தைக் கொண்டுதான் படைத்தான் என்று வேதமே கூறுகிறது. மனுவும் இந்த வழியிலேயே நின்று பேசுகிறார்.
வேதசப்தேப்ய ஏவாதௌ ப்ருதக்
ஸம்ஸ்தாஞ்ச நிர்மமே
ஆக உலகப் பொருள்களெல்லாம் வேதத்தில் சொல்லப் பட்டவைகள்தான். பகவான் உலகத்திலுள்ள பொருள்களாக ஆனான் என்றால் வேதப்பொருள்களாக ஆனான் என்றுதான் கொள்ள வேண்டி வருகிறது. பொதுவாக உலகத்திலுள்ள பொருள்களாக பகவான் ஆகியுள்ளான் என்று பல இடங்களில் குறிப்பிடப் படுவது போல் வேதப் பொருள்களாக பகவான் ஆகியுள்ளான் என்று வேத சம்பந்தத்தை முன்னிட்டுக் கொண்டு ஸ்ருஷ்டியை அநுபவிப்பதையும் பார்க்கிறோம். (பன்னு நான்மறை பலப் பொருளாகிய 3-1-2, எழில் வேதப் பொருள்களுமாய் 4-1-2) என்று திருமங்கை மன்னன் அருளிச் செய்கிறார். ஒவ்வொரு பொருளிலும் அந்தர்யாமியாக பகவான் இருந்து வருவதால் எல்லாப் பொருள்களும் பகவானாகவே ஆகின்றன. இதையும் வேத சம்பந்தத்தோடு ஆழ்வார்கள் அநுபவிக்கிறார்கள்.
மறைப்பெரும்பொருள்
வேதப் பிரதிபாத்யத்துவம் எம்பெருமானுக்கு தனியேற்றத்தைக் கொடுக்கிறது. நித்யமாயும் நிர்தோஷமாயும் உள்ள வேதத்தின் பெருமையை உணர்ந்த ஆழ்வார்கள் எம்பெருமானுக்குள்ள வேத பிரதிபாத்யத்துவத்தைப் பெருமையுடன் பேசுகிறார்கள். எம்பெருமான் மறையின் பெரும் பொருள் என்று பேசுகிறார்கள். ஏலுமறைப் பொருளே (பெரியாழ்வார் 1-9 வேதப் பொருளே 2-9) நான் மறையின் பொருளாய் (நாச்சியார் திருமொழி 1-4-10), சாம வேத கீதன் சக்கரபாணி (14) வேதகீதன் (117) (திருமழிசைப்பிரான்), நங்கோது நால்வேதத்திலுள்ளான் (மூன்றாம் திருவந்தாதி11) நால்வேதத்திலுள்ளான்(31) மறைப் பெரும் பொருளை (திருமங்கை ஆழ்வார் 4-3-2) அங்கமாறு வேத நான்குமாகி நின்று அவற்றுளே தங்குகின்ற தன்மையாக (15 திருச்சந்த விருத்தம்) மறையாய நால் வேதத்திலுள்ள மலர் சுடரே (திருவாய்மொழி 3-1-10). இவ்விதம் எம்பெருமானை வேதப் பிரதிபாத்யனாகச் சொல்லி ஆழ்வார்கள் அநுபவிப்பதைப் பார்க்கிறோம்.
வேத முதல்வன்:– வேதங்களில் பல பொருள்கள் சொல்லப் படுகின்றன. இவையெல்லாம் உருவமுள்ளவை. ஸ்ருஷ்டி காலத்திலேயே இவை உருவைப் பெறுகின்றன. எம்பெருமான் ஒரு உருவத்தை எடுத்துக்கொண்டு முதலில் ஸ்ருஷ்டிப்பதால் அவன் படைப்பின் ஆரம்ப காலத்தில் முதல்வனாக நிற்கிறான் என்று வேதமே கூறுகிறது. (ப்ரதமஜா ருதஸ்ய) இதையும் ஆழ்வார்கள் மனதிற்கொண்டு வேத முதல்வன் என்று எம்பெருமானை அநுபவிக்கிறார்கள். வேத முதல்வனை (திருவாய்மொழி 3-5-5) வேத முதல்வர் (நாச்சியார் திருமொழி 1-10-2). வேத சம்பந்தத்தோடு எம்பெருமானை அநுபவிப்பதில் இதுவும் ஒரு வழி.

ஆழ்வார்களும் வேதங்களும் 3
Monday, June 18th, 2012
சுடர்மிகு சுருதி
வேதத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்டுள்ள மதத்திற்கு வைதிக மதம் என்று பெயர். அதைப் பின்பற்றுபவர்கள் வைதிகர்கள் ஆவார்கள். ஆழ்வார்கள் வைதிகாக்ரேஸர்கள். வைதிகர்களின் சிந்தனை எல்லாம் வேதத்தை யொற்றியதாகவே இருக்கும். எந்த அம்சத்திலும் வேதத்தை விட்டு ஒதுங்கி நிற்காது. பௌத்தர்களும் ஜைனர்களும் வேதத்தை பிரமாணமாக ஒப்புவதில்லை. புத்தரையோ மகாவீரரையோதான் தங்கள் மதத்திற்கு மூல புருஷர்களாக ஒப்புக் கொள்கிறார்கள். புத்தர் மகாவீரர் இவர்களுடைய மனதில் தோன்றிய கருத்துக்களையே அவர்கள் பின்பற்றுகிறார்கள், இவர்கள் வேதத்தை ஒப்பாததால் வேத பாஹ்யர்கள் என்றும் அவைதிகர்கள் என்றும் சொல்லப்படுகிறார்கள். வைதிகர்களாக உள்ளவர்கள் தனிப்பட்ட மனிதனுக்கு பெருமையைக் கொடுப்பதில்லை. அவன் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் அவனுடைய வார்த்தைகளை பிரமாணமாக அங்கீகரிப்பதில்லை. மனிதனாகப் பிறந்தவனுக்கு பிரமம், பிரமாதம், விப்ரலிப்ஸை முதலிய தோஷங்கள் இயற்கையிலேயே அமைந்திருப்பதால் தனி மனிதனுடைய கருத்தை முடிவான பிரமாணமாக வைதிகர்கள் அங்கீகரிப்பதில்லை. வேதம் சப்தரூப நிலை. இருந்தாலும் அது ஒருவராலும் இயற்றப் பட்டதில்லை. “அநாதியானது” “அபௌருஷேயமானது” என்ற அடிப்படையான கொள்கைகள்மீது வைதிக மதம் வாழுகிறது. வேதம் அநாதியானதாக ஒப்புக்கொள்ளப் பட்டுவிட்டதால் பகவானாலும் வேதம் உண்டு பண்ணப்படவில்லை என்று ஏற்படுகிறது. அந்தந்த சிருஷ்டி காலங்களில் ஏற்கனவே உள்ள வேதங்களையும் பகவான் பிரும்மாவுக்கு உபதேசித்து வெளியிடுகிறார். பகவான் பலவிதமான அவதாரங்களைச் செய்வதும் வேதத்தையும் வேத தருமங்களையும் ரக்ஷிக்கவே. அவதாரங்கள் பகவானுடையதாகவே இருந்தாலும் அந்தந்த அவதாரங்களில் இயற்கையாக உள்ள குறைகளை பகவான் மாற்றிக் கொள்வதில்லை. அதனால் அவதார காலங்களில் பகவான் சொல்லும் வாக்கியங்கள் வேதமாக அமைவதில்லை. அவதார காலங்களில் சொல்லும் கருத்துக்கள் வேதத்தோடு இணங்கி இருந்தால் அவைகளை வைதிகர்கள் எடுத்துக் கொள்வார்கள். வேதவிருத்தமாக இருந்தால் வைதிகர்கள் அவைகளை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பகவான் கீதையில் செய்த உபதேசம் வேதக் கருத்துக்களைப் பின்பற்றி ஏற்பட்டிருப்பதால் அவைகளை ஒப்புக் கொள்கிறோம். பகவானின் மற்றொரு அவதாரமான கபிலாவதாரத்தில் செய்யப்படும் உபதேசங்கள் வேதவிருத்தமாக இருப்பதால் அதை அங்கீகரிப்பதில்லை. அவதார உபதேசங்களுக்கு வேத மூலமாகவே பிரமாண்யம் ஏற்படுவதால் அவைகளை ஸ்ம்ருதிகள் என்று கொண்டாடுகிறோம், வேதம் ஸ்வத: பிரமாணம், ஸ்ம்ருதிகள் வேத மூலகமாக இருப்பதால் பிரமாணமாகின்றன. இதிஹாஸபுராணங்களும் ஸ்ம்ருதிகளே. மகரிஷிகளின் வாக்கியங்களும் பகவானின் வாக்கியங்களும் ஸ்ம்ருதிகள்தான், வேதத்தின் பிரமாண்யம் தானாக நிற்பதுபோல், பிரத்யக்ஷம், அநுமானம் இவைகளின் பிராமாண்யம் தானாக நிற்பதில்லை. வேறு காரணங்களைக் கொண்டு பிரத்யக்ஷம், அநுமானம் இவைகளால் ஏற்படும் அனுபவத்தை பரீக்ஷை பண்ணி அவை நல்லவை என்று ஏற்பட்டால் எடுத்துக் கொள்வோம், தோஷமுள்ளவை என்று முடிந்தால் கைவிட்டுவிடுவோம். வேதத்தின் உபதேசங்களுக்குப் பிரமாணாந்தரங்களால் சோதனமே கிடையாது. வேதத்தில் சொல்லப்படுவதை அப்படியே எடுத்துக் கொள்கிறோம். வேதம் தானாக விளங்குவது அதற்குள்ள தனிச் சிறப்பு. இந்தப் பெருமையை அனுபவிக்கும் நம்மாழ்வார் “சுடர்மிகு சுருதி” என்று குறிப்பிடுகிறார், பிரத்யக்ஷாதிப் பிரமாணங்கள்போல ஹேத்துவந்தரத்தால் கழிக்கவொண்ணாத ஒளியை உடையது என்பதைக் காண்பிக்க சுடரால் மிகுந்துள்ள சுருதி என்று சொல்லுகிறார். இங்கு வேதம் சுருதி என்ற சப்தத்தால் சொல்லப் படுகின்றது. சுருதி என்ற சொல் கேள்வி மூலமே வேதம் வந்துள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. ஆசாரியன் உபதேசிக்கிறான். அதை சிஷ்யன் கேட்டுத் திருப்பிச் சொல்லுகிறான். இந்த வழியிலேயே வேதம் வந்து கொண்டிருப்பதால் சுருதி என்று சொல்லப் படுகிறது. பூர்வ பூர்வ உச்சாரண கிரமத்தைப் பற்றி உத்தரோத்தர உச்சார்யமாணத்வத்தை அடிப்படையாகக் கொண்டு சுருதி என்று சொல்லப் படுகிறது. சுடர் என்ற சொல் பிரகாசம் என்ற பொருளைக் கொண்டிருப்பதால் ஸம்சய விபரியயங்களறக் கருத்துக்களை வேதங்கள் வெளியிடுவது குறிப்பிடப் படுகிறது. சுருதியின் ஒளி மங்கா ஒளி.
எம்பெருமான் வேத விளக்கு
வேதம் ஸ்வத: ப்ரமாணமானது. தனக்குத்தானே ப்ரமாணம். மற்ற வேதார்த்தங்களுக்கும் வேதமே ப்ரதானம். இதைக் கருத்தில் கொண்ட ஆழ்வார்கள் வேதத்தை விளக்காகக் குறிப்பிடுகிறார்கள். விளக்கு இருட்டைப் போக்கி அந்தந்த வஸ்துக்களை இருக்கிறபடியே காட்டுகிறது. தன்னைத்தானே காட்டுகிறது. விளக்கு இல்லாமல் போனால் எங்கும் இருள் சூழ்ந்துவிடும். அவ்விதமே வேதமாகிற பிரமாணம் இல்லாது போனால் உலகத்திலுள்ள வஸ்துக்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவே முடியாது. இருளைப் போக்குவது விளக்கின் வெளிச்சம். மருளைப் போக்குவது வேதம். அதனால் பல இடங்களில் ஆழ்வார்கள் வேதத்தையும் விளக்காகக் கூறுகிறார்கள். மறையாய் விரிந்த விளக்கை (8-9-4) வேத நல்விளக்கை (4-3-8) (திருமங்கை மன்னன் )– வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை (பெரியாழ்வார் 4-3-11) நந்தா விளக்கு என்ற சொற்றொடர் வேதத்தைக் குறிப்பிடுவதாக பெரிய ஜீயர் உள்ளிட ஆசார்யர்கள் திருவுள்ளம் பற்றுவதற்கு எம்பெருமான் வேதவிளக்காக விளங்குவதே காரணம்.
ஹம்ஸமாயும் ஹயக்ரீவனாயும் பகவான் வேதம் உபதேசம் பண்ணியதை ந1ளை படிக்கலாம்

ஆழ்வார்களும் வேதமும் 2
Sunday, June 17th, 2012
ஆழ்வார்கள் வேதங்களை செஞ்சொல்லாகக் குறிப்பிடுகிறார்கள்.
நான்கு வேதங்களும் அவைகளின் பல சாகைகளும் அவைகளின் எல்லா பாகங்களும் வேதத்தின் ஆறு அங்கங்களும் வேத வேள்விகளும் ஆழ்வார்களின் அனுபவத்திற்கு விசேஷமாகுவது அவர்களுடைய அனுபவத்தின் ஆழத்தைக் காண்பிக்கிறது. வேத சம்பந்தமிருப்பதால் வேதியர்களையும் பெருமைப் படுத்திப் பேசுவது மிகவும் நோக்கத் தக்கது. பகவான் வேதப் பிரதிபாத்தியன் என்பதோடு மட்டும் நிற்காமல் வேதம் “வேத வேள்விகள்” “வேதியர்கள்” எல்லாமே எம்பிரானின் அவதாரங்கள்தான் என்ற அளவுக்கு ஆழ்வார்களின் கருத்து வளர்ந்து நிற்பதைப் பார்க்கிறோம். வேதப் பொருள்களும் எம்பெருமான்தான் என்று பேசுகின்றார்கள். வேத ஒலியில் தாங்கள் ஈடுபடுவதோடு எம்பெருமானுக்கே வேதங்களைக் கேட்பதில் தனி அவா இருப்பதாகவும் வெளியிடுகிறார்கள்.
எம்பெருமானுடைய ஸ்வரூபம் “அபரிச்சேத்தியம்” இவ்வளவுதான் என்று யாராலும் அளவிட்டுச் சொல்ல முடியாதது. சப்தப் பிரமாணத்திற்கு பிரத்யக்ஷாதி ப்ரமாணங்களைக் காட்டிலும் வைலக்ஷண்யம் இருந்தாலும் அதற்கும் ஸ்வபாவ ஸித்தமான குறைகள் இருப்பதால் எந்த சப்தமும் எம்பெருமானை பூர்ணமாக அறிவிக்க முடியாது. வேதம் எம்பெருமானை அபரிச்சேத்தியன் என்று கூறுகிறது. மனதோ வாக்கோ பகவானை நெருங்கி நிற்கா என்பதை வேதமே கூறிவிட்டது. ஸ்வரூபத்தினாலும், குணத்தினாலும் அளவிடமுடியாத படியை எப்படி? யார்? சப்த பிரமாணத்தால் அளவிட்டுச் சொல்ல முடியும்? (யதோ வாசோ நிவர்தந்தே) ஆழ்வார்களும் இந்த வழியில் நின்றே இறைநிலை உணர்வரிது என்று கூறுகிறார்கள். வேதங்களும் எம்பெருமானைப் பூரணமாகச் சொல்ல முடியாது என்ற கருத்தை மனதில் கொண்டு திருமங்கை ஆழ்வாரும் நான்மறையும் தொடராத பாலகனாய் என்றும் (4-1-8) நான்மறைகளும் தேடிக் காணமாட்டாச் செல்வன் (4-8-7) என்று குறிப்பிடுகிறார். ஆனால் மற்ற இடங்களில் இவரே வேத பிரதிபாத்யத்வத்தை பல விதமாக நிரூபிப்பதால் வேதம் சொல்லும் அபரிச்சேத்யனான எம்பெருமானையே தங்களுக்கு எட்டியவரை அனுபவிக்கிறார்கள் என்று ஏற்படுகிறது. எம்பெருமான் அபரிச்சேத்தியன் என்று வேதங்கள் சொல்வதையே அவர்களும் பின்பற்றிப் பேசுவது சிந்தனையின் வைதிகத்வத்தை வெளியிடுகிறது. “வேதங்கள் கூட தேடி காண மாட்டாத” பகவான் என்று சொல்வதால் வேதத்தின் பெருமை வெளியாவதோடு எம்பெருமானின் பெருமையும் வெளியாகிறது. வேதம் தேடிக் காண முடியாதவனை நான் காண்கின்றேன் என்று ஒரு ஆழ்வாரும் சொல்லாதது கவனிக்கத் தக்கது.வேதம் எப்படிக் கண்டதோ அப்படியே தாங்களும் காண்பதாகத் தான் தெரிவிக்கிறார்கள்.
ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் “தமிழ் மொழியிலுள்ள வேதம்” என்று உபய ஸம்பிரதாயத்திலுள்ள ஆசார்யர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் “வடமொழி வேதத்தின் கருத்துக்களை வேறு மொழியில் வெளியிடும் வேதம்” என்றோ “ வேதத்தின் கருத்துக்களை தெளிவு படுத்தி விளக்க வந்த தமிழ் மொழியிலுள்ள வேதம்” என்றோ ஒப்புக் கொள்கிறார்கள். எந்த வழியிலும் வடமொழிவேதத்தோடு தொடர்புள்ள வேதம் என்று ஒப்புக்கொள்வது மறுக்க முடியாதது. வடமொழி வேதத்தின் கருத்துக்களை திராவிட மொழி நடமாடும் தேசத்தில் பரப்ப ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் மிகவும் பயன்படுகின்றன. அருளிச் செயல்கள் திராவிட தேசத்தில் உள்ள மக்களுடைய பாஷையில் அமைந்து வேதத்திற்கு புத்துயிர் அளித்தது என்பது வரலாறு மூலம் கிடைத்த உண்மை. வேத சம்பந்தமான பலவிதக் கருத்துக்களை ஆங்காங்கு ஆழ்வார்கள் வெளியிட்டுள்ளார்கள். அவைகளை வெளியிடும் பாசுரங்களை ஒன்றுசேர்த்து அடிப்படையான அவர்களின் கருத்துக்களை வெளியிடுவது இந்த கிரந்தத்தின் நோக்கம். ஆழ்வார்கள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் அவதரித்து பகவதனுபவம் பண்ணினாலும் வேத சம்பந்தப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதில் அவர்களுக்குள் ஒற்றுமையைப் பார்க்கிறோம். இதனாலேயே நாலாயிரம் பாசுரங்களும் ஒரே கிரந்தமாக விளங்குகின்றன என்று தெரிவதோடு வேதக் கருத்துக்களைப் பரப்பும் நோக்கத்தோடு ஏற்பட்டிருப்பதும் வெளியாகிறது.
வேத சம்பந்தமுள்ள ஆழ்வார்களுடைய பாசுரங்களை மூன்று விதமாகப் பிரித்துக் கொண்டு இந்த நூலில் பிரதிபாதநம் பண்ணுகிறோம். முதல் பாகத்தில் அடிப்படையாக அமைந்துள்ள சில கருத்துக்களை விளக்குகிறோம். இரண்டாம் பாகத்தில் “வேதம்” “வேள்விகள்” இவைகளை சம்பந்தப் படுத்தி திவ்விய தேசங்களை குறிப்பிடுமிடங்களை திவ்விய தேசவாரியாக பாசுரங்களைக் கொண்டு விளக்குகிறோம். மூன்றாம் பாகத்தில் பிராட்டி (நாயகி) தசையையோ அல்லது வேறு தசையையோ அடைந்து பேசும் காலத்தில் காண்பிக்கும் வேத ஈடுபாட்டை வெளியிடுகிறோம். கடைசியில் வேத சம்பந்தமுள்ள கருத்துக்களை வெளியிடும் பாசுரங்களையும் பாசுரங்களின் பகுதிகளையும் தொகுத்து வெளியிடுகிறோம். பாசுரங்களின் கருத்துக்களை விளக்கும் காலத்தில் பல இடங்களில் வியாக்யாதாக்களின் வாக்கியங்களையே கையாளுகிறோம்.
தொடர்வது “சுடர்மிகு சுருதி”

ஆழ்வார்களும் வேதங்களும்
Saturday, June 16th, 2012
அடியேனுடைய வழக்கம்போல இந்த நூலும்
தற்செயலாகக் கையில் கிடைத்த ஒன்றுதான்.
இந்நூலை எழுதியவர் மிகச் சமீப காலம் வரை
நம்மிடையே வாழ்ந்து பரம பதித்த ஒரு பேரறிஞர்
வேதம் வல்லார்கள், யதிகள் என்றுஎல்லாருடைய
மரியாதைக்கும் உரியவராக வாழ்ந்தவர்
என்பதை மட்டும் இப்போது சொல்லி
அவர் யார் என்பதை இந்தத் தொடரை
முடிக்கும்போது தெரிவிப்பேன்.
அதற்குள் நடையைப் பார்த்து, படித்து
யாரும் சொல்லாமலிருந்தால்.
இந்நூல் வெளியான ஆண்டு 1973
இனி நூலைப் படிக்க ஆரம்பிக்கலாம்
ஆழ்வார்களுக்கு
வேதங்களிலுள்ள ஈடுபாடு
அவதாரிகை
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஆழ்வார்கள் எம்பெருமானுடைய அபிநவ தசாவதாரமாகப் போற்றப் படுகிறார்கள். எம்பெருமானிடம் அடங்காக் காதல் கொண்டு, பல படிகளில் அவனை அனுபவித்து தங்கள் பாசுரங்களில் அவர்கள் பேசுகிறார்கள். தன்னையே தான் பாடும் நோக்கத்தோடு எம்பெருமான் ஆழ்வார்களாக அவதாரம் செய்துள்ளான். அவனுடைய பெருமையை அவனால்தான் வெளியிட முடியும். எம்பெருமானின் ஸ்வரூப, ரூப, குண, விபூதி, ஐச்வர்ய லீலைகளை அனுபவிக்கப் புகுந்த ஆழ்வார்கள் இவ்வித அனுபவத்தை தாரக, போஷக, போக்யங்களாக கொண்டுள்ளார்கள். அதனால் அவர்களுடைய ஜன்ம விருத்தாந்தங்கள் தனிச் சிறப்போடு விளங்குகின்றன. அவர்களுடைய பகவதனுபவம் தான் தோன்றியாக அமையவில்லை. வேதம் போன வழியிலேயே அவர்களுடைய அனுபவம் செல்வது அவர்களின் அருளிச் செயல்களுக்கு தனிச்சிறப்பைத் தருகிறது.
நம்மாழ்வாருடைய அருளிச் செயல்களை ஆழ்ந்து அவகாஹித்துப் பேசும் மதுரகவியாழ்வார் அருள் கொண்டாடும் அடியவர் இன்புற அருளினான் அவ்வருமறையின் பொருள், அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ் பாடினான், மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்……என் நெஞ்சுள் நிறுத்தினான் (கண்ணினுண் சிறுத்தாம்பு 8-9) என்றருளிச் செய்கிறார். இங்கு அருமை வாய்ந்த மறையின் பொருளை அருள் கொண்டு இன்தமிழால் பாடினான் என்று அருளிச் செய்வது வேத பிராமாண்யத்தில் ஆழ்வாருக்கு உள்ள பிராவண்யத்தைத் தெரிவிக்கின்றது. வேதத்தின் உட்பொருள்களை “நெஞ்சுள் நிறுத்தினான்” என்பதும் வேதத்தில் உள்ள ஈடுபாட்டைத் தெரிவிக்கின்றது. நம்மாழ்வார் விஷயத்தில் மட்டும் இப்பாசுரம் பிறந்திருந்தாலும் அடிப்படையான கருத்துக்கள் எல்லா ஆழ்வார்களின் அருளிச் செயல்களுக்கும் பொருந்தும்படி அமைந்து நிற்பது கவனிக்கத்தக்கது.
வேதம் பகவதனுபவப் பிரதானமான கிரந்தம். பகவதனுபவ விஷயத்தில் அது தனியான வழியைப் பின்பற்றுகிறது. மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் வேதமார்கத்தின் பெருமையைப் பூர்ணமாக உணர்ந்து அந்த வழியிலேயே தாங்களும் செல்லுகிறார்கள். திராவிட தேசத்தில் பிறந்த ஆழ்வார்கள் தாங்கள் பெற்ற பேற்றை திராவிட மக்கள் எல்லாரும் பெற வேண்டுமென்ற அவாவினால் வடமொழி வேதத்தின் கருத்துக்களை தேசபாஷையான திராவிட மொழியில் வெளியிடுகிறார்கள். வேத சம்பந்தமில்லாத மார்கத்தில் அவர்களுக்கு ஈடுபாடு கிடையாது. அவர்களுடைய காலத்தில் வேதபாஹ்யமான பல கொள்கைகள் இருந்தும் அவைகளைப் புறக்கணித்துவிட்டு சுத்தமான வைதிக மார்கத்தை அவர்கள் பின்பற்றினார்கள். “மிக்க வேதியர்” “நன்மையால் மிக்க நான் மறையாளர்கள்” (மதுரகவியாழ்வார்) “ மிக்கார் வேதிவிமலர்” (திருவாய்மொழி 2-9-8) என்ற சொற்றொடர்கள் அழகானகருத்தைவெளியிடுகின்றன. வேத பாஹ்ய சாஸ்திரங்களை கண்ணாலும் பாராதே, செவியாலும் கேட்காதே நித்திய நிர்தோஷமான வேதப்பிரமாண நிஷ்டர்களாக இருந்தது வேதபாஹ்ய மதத்தில் இவர்களுக்குள்ள வெறுப்பைத் தெரிவிக்கிறது. பௌத்தர்களும் ஜைனர்களும் வேத வேள்விகளை வெறுத்தார்கள் – தூஷித்தார்கள். அதற்கு எதிராக ஆழ்வார்கள் வேதியர்கள் அனுஷ்டிக்கும் வேத வேள்விகளை பலவழிகளில் புகழ்ந்து பேசுகிறார்கள். த்ரேதாக்நி ஸாத்யங்களான ஜ்யோதிஷ்டோமாதி யாகங்கள் நடப்பதால் திவ்யதேசங்களுக்கு பெருமை ஏற்பட்டிருப்பதாகவும் திருவுள்ளம் பற்றுகிறார்கள்.
“வேதநூல் ஓதுகின்றது உண்மை அல்லதில்லை மற்று உரைக்கின்றேன் “ என்று திருமழிசைப்பிரான் (72) ஸ்பஷ்டமாக இதை அருளிச் செய்கிறார். இவ்விதம் வேதப் பிரமாண்யத்திலும், வேத மார்கத்திலும் நிஷ்டர்களாக இருந்து ஆழ்வார்கள் பேசுவது வேதத்தின் பெருமையை பல வழிகளிலும் உணர்ந்து இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. இதைத் திருவுள்ளத்தில் கொண்டு பெரிய ஜீயரும் ஆத்யஸ்யந: குலபதே; என்ற ஸ்ரீஸூக்திக்கு “வைதிக ஸந்தான கூடஸ்தர்” என்று பொருள் சொல்லுகிறார். நம்மாழ்வாரை வைதிக ஸந்தான கூடஸ்தராக அனுபவிப்பதில் தனி ஆனந்தத்தைக் காண்கிறார்.
எம்பெருமானைத் தங்களுடைய சிந்தனையில் கற்பிக்கப்பட்டவனாகக் கொள்ளாமல் வேதியர் முழு வேதத்தின் அமிர்தமாக அநுபவிப்பது வேதியர் வேதம் இவர்கள் இடத்திலுள்ள ஆதராதிசயத்தை தெரிவிக்கிறது. மறையோர் மறையோர் செஞ்சொல் (பெரிய திருமொழி) லின் கருத்து மறைகளுக்குள்ள பெருமையை வெளியாக்குகிறது.
Posted in ஆழ்வார்களும் வேதமும்
|