திருவரங்கத்தமுதனார் திருமாளிகை
அப்பா ரிடையர் ஆன பிறகு தினமும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவித்து(படித்து) வந்தார். நான் சென்னையிலிரருந்து திருச்சிக்கு வாரயிறுதியில் போகும் போது, வீட்டுக்குள் நுழைந்தவுடன், ராமானுஜ நூற்றந்தாதி புத்தகத்தை என் கையில் கொடுத்து “முழுவதும் கடம்(மனப்பாடம்) செய்துட்டேன், சேவிக்கிறேன், சரியா இருக்கா பார்” என்று வாரம் தவறாது சின்ன குழந்தை போல கேட்பார்.
ஆச்சாரியன் திருவடியை அடைவதற்கு சில மணி நேரம் முன்பு என் அம்மாவிடம் “அடுத்த பத்து நாளைக்கு சேர்த்து இன்றே சேவித்துவிட்டேன்” என்று சொன்னதை பற்றி யோசிப்பதுண்டு.
“திருவரங்கத்தமுதனார் சன்னதி சக்கரத்தாழ்வார் சன்னதியில் எங்கோ ஒரு மூலையில் யாரும் கவனிக்கப்படாமல் இருக்கு, அதை ராமானுஜர் சன்னதியில வைப்பது தான் சரியாக இருக்கும்” என்று என்னிடம் அடிக்கடி சொல்லியிருக்கிறார். ஒரு முறை “எப்பவாவது உனக்கு டைம் கிடைச்சா அவரை பற்றி எழுது” என்றார். அவர் இறந்து போய் பத்து வருஷம் கழித்து இப்போது தான் அவர் ஆசையை என்னால் நிறைவேற்ற முடிந்தது.
திருவரங்கத்தமுதனார் பற்றி குறிப்புகள் அதிகம் கிடையாது.அனேகமாக எல்லா ராமானுஜர் வாழ்க்கை வரலாற்று புத்தகங்களிலும் இவரை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. இத்தனைக்கும் இவர் ராமானுஜருடன் 30-40 ஆண்டு காலம் இருந்திருக்கிறார்.
ஸ்ரீரங்கம் கோயில் வரலாற்றை பழைய காலத்திலிருந்து பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிவரை கூறுகிற கோயில்லொழுகில் அமுதனார் பற்றி சில குறிப்புகள் இருக்கிறது. (கோயிலொழுகு என்பது ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரிகளால் செவிவழிச் செய்திகளையும், கல்வெட்டுகளையும் கொண்டு அவ்வப்போது தொகுக்கப்பட்ட நூல் என்று சொல்லலாம்)
ஸ்ரீரங்கத்தில் ஒரு பங்குனி ஹஸ்தத்தில் பிறந்தவர் அமுதனார். இவர் இயற்பெயர் என்ன என்று தெரியவில்லை. “முன்னை வினையகல மூங்கில் குடியமுதன்’ என்கிறது வேதப்பிரான் பட்டர் தனியன். ‘மூங்கில் குடி என்பது இவரது கிராமமாக இருக்கலாம், அல்லது அவரது வம்சத்தின் பெயராக இருக்கலாம்.
ஸ்ரீரங்கம் கோயிலை நிர்வகித்து மிகுந்த செல்வாக்குடன் இருந்த்தால், இவரைக் ‘கோயில் நம்பி’ என்றும் ‘பிள்ளை’ என்றும் கௌரவமாக எல்லோரும் அழைத்தனர். பிற்பாடு இவருக்கு ராமானுஜர் சூட்டிய பெயர் ‘அமுதனார்’.
ஸ்ரீரங்கம் கோயில், ராமானுஜர் காலத்துக்கு முன்பு பலருடைய கட்டுப்பாட்டில் இருந்துவந்திருக்கிறது என்பதற்குப் பல குறிப்புகள் கோயிலொழுகில் இருக்கிறது. ஆளவந்தாருக்கு பிறகு ராமானுஜர் காஞ்சிபுரத்திலிருந்து ஸ்ரீரங்கம் வந்த பிறகு கோயில் நியமனங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று விரும்பி பல ஆலோசனைகளை வழங்கினார். உதாரணத்துக்கு ஸ்ரீரங்கம் கோயில் வைகானச ஆகமத்திலிருந்து பாஞ்சராத்திர ஆகமத்துக்கு மாற்ற விரும்பினார். அதே போல் பல்வேறு பிரிவுகளைச் செய்து ஒவ்வொருவருக்கும் சில பொறுப்புக்களை கொடுத்து, கோயில் நிர்வாக மாற்றங்களை கொண்டு வந்தார்.
[ஆகமம் என்றால் கோயிலில் பெருமாளை ஆராதிக்கும் முறை என்று பொருள் கொள்ளலாம். ஆகமம் பற்றி ஆழ்வார் பாடல்களில் குறிப்பு இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சிலப்பதிகாரத்தில் இருக்கிறது. ராமானுஜர் காலத்துக்கு 200 ஆண்டுகள் முன்பு ஆகமம் முறை வந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆகமம் பெருமாளை ஆராதிக்கும் முறை தவிர ஆலயக்கட்டுமானப் பணியினையும், மூர்த்திகளை வடிவமைப்பது, பிரதிஷ்டை செய்யும் முறையை பற்றியும் சொல்லுகிறது. சைவ ஆகமங்கள், வைஷ்ணவ ஆகமங்கள் என்று இரண்டு வகைப்படும் ( சாக்த ஆகமங்கள் கூட இருக்கிறது ). சைவாகமம் மொத்தம் 28 வகைகளை கொண்டது அதை ஸம்ஹிதைகள் என்று கூறுவர். வைணவத்தில் வைகானசம், பாஞ்சராத்ரம் என்று இருவகை உள்ளது. இது எல்லாம் புரியவில்லை என்றால் ஆகமம் என்பது அந்த காலத்து ISO-9001 என்று வைத்துக்கொள்ளுங்கள். ]
அந்த காலத்தில் கோயிலின் நிர்வாகம் மற்றும், புராணம் வாசித்தல் போன்ற கைங்கர்யங்களை கோயில் நம்பி செய்து வந்தார். ராமானுஜர் கொண்டு வந்த திட்டங்கள், நிர்வாகத்தில் அவர் குறுக்கிடுவதாக தோன்றியிருக்க வேண்டும். அதனால் ராமானுஜருக்கு பல இடையூறு செய்ததாகத் தெரிகிறது.
பெரிய கோயில் நம்பியை ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வெளியேற்றாவிட்டால், தான் நினைத்தபடி கோயிலை நிர்வகிக்க முடியாது என்று எண்ணினார் ராமானுஜர். ஒரு நாள் பெருமாள் புறப்பாட்டிற்காக காத்திருக்கும் போது, சற்றே கண்ணயர்ந்து விட்டார். அப்போது, பெருமாள் ஸ்ரீராமானுஜர் கனவில் வயதான ஸ்ரீவைஷ்ணவராய் தோன்றி “‘கோயில் நம்பி நீண்ட காலமாக என்னையே நம்பி இருக்கிறார். அதனால் அவரை நீக்கவேண்டாம்” என்று சொல்ல, ராமானுஜர் கூரத்தாழ்வானிடம் “நமக்கு பல இன்னல்களை தரும் கோயில் நம்பியை நாம் வெளியேற்றுவது பெருமாளுக்கு பிடிக்கவில்லை என்று தெரிகிறது, அதனால் நாம் திரும்பவும் காஞ்சிபுரத்துக்கே சென்றுவிடலாம்” என்றார். “பெருமாள் இப்படி சொல்லுகிறார் என்றால் நிச்சயம் பெரிய கோயில் நம்பியை மனம் மாறச் செய்துவிடுவார்” என்று கூரத்தாழ்வான் சொல்ல “அப்படியானால் நம்பியை திருத்தும் பணியை நீங்களே மேற்கொள்ளும்” என்று உடையவர் கூரத்தாவாழ்வானைப் பணித்தார். [கூரத்தாழ்வார் ராமானுஜரின் பிரதம சீடர், காரியதரிசி. காஞ்சீபுரம் அருகே 'கூரம்' என்னும் கிராமத்தில் பிறந்தவர் ]
அதற்கு பின் கூரத்தாழ்வான், பெரிய கோயில் நம்பியிடம் நட்புக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக உடையவரின் அருமை பெருமைகளை சொல்லி அவர் மனத்தை மாற்றினார். அதன் பிறகு பெரிய கோயில் நம்பி உடையவர் மீது மிகுந்த பக்தி கொண்டவாராக மாறினார்.
ராமானுஜரின் பெருமைகளை அறிந்துகொண்ட நம்பி தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளும்படி ராமானுஜரை வேண்டினார். “உங்கள் மனம் மாறச் செய்த கூரத்தாழ்வானே உங்களுக்கு உகந்த ஆச்சாரியன்” என்றார் ராமானுஜர். நம்பியின் இலக்கிய அறிவையும், வாக்குவன்மையையும் போற்றி, அவருக்கு ‘அமுதன்’ என்ற திருநாமத்தை(பெயரை) சூட்டினார் ராமானுஜர். “திருவரங்கத்தமுதனார்” என்றும் ‘பிள்ளை அமுதனார்’ என்றும் இவரை அழைப்பர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு ஓர் ஐப்பசி மாதம் அமுதனாருடைய தாயார் பரமபதித்திட, பத்து நாட்கள் காரியம் நடந்து முடிந்து, ஏகாஹம் எனப்படும் 11ஆம் நாள் காரியத்துக்கு தம் உறவினர்கள் அல்லாது வேறு ஒரு நல்ல ஸ்ரீவைஷ்ணவரை அமர்த்த விரும்பினார் அமுதனார்.
[இறந்தவருக்கான 11ஆம் நாள் செய்யப்படும் ஈமக்கடன்களுக்கு ஏகாஹம் என்று பெயர். அன்று சாப்பிடுபவருக்கு இடப்படும் உணவு இறந்த போனவருக்கு படைப்பதாக கொள்ளப்படுகிறது. அன்று சாப்பிடுபவர் பண்புள்ளவராய், புலனடக்கம் உடையவராக இருத்தல் வேண்டும். ஏகாஹம் சாப்பிட்டு முடித்த பின் த்ருப்தி யோஸ்மி( திருப்தியாக உண்டேன்) என்று சொல்லி எழுந்திருக்க வேண்டும். அப்படி திருப்தி சொல்லிவிட்டு எழுந்தால், இறந்துபோனவருடைய ஆத்மா திருப்தி அடைந்து மோட்சம் போகும் என்பது ஐதீகம். 11ஆம் நாள் காரியத்தில் சாப்பிட்டவர், 27 நாட்கள் ஊரை விட்டு தள்ளி இருக்க வேண்டும். அப்படி தள்ளி இருக்கும் காலத்தில் அவர் எதிலும் கலந்துக்கொள்ள கூடாது. தினமும் எவ்வளவு காயத்ரி சொல்லுவாரோ அத்துடன் 3000 காயத்திரி கூடுதலாக சொல்ல வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருந்ததால் இதற்கு அவ்வளவு எளிதில் யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ]
இந்த பணியை யாரும் ஏற்க முன்வரவில்லை. அதனால் ராமானுஜரிடம் தனக்கு ஒருவரை நியமிக்க வேண்டினார். ராமானுஜரும் சிலரை நியமிக்க அவர்களும் தயக்கம் காட்டினார்கள். ராமானுஜர் கூரத்தாழ்வானை அழைத்து, அமுதனார் வீட்டுக்கு ஏகாஹத்துக்கு போகப் பணித்தார். தனது ஆசாரியரான கூரத்தாழ்வானே ஏகாஹத்துக் வந்ததால் அமுதனாருக்கு மிக்க மகிழ்ச்சி ஏற்பட்டது . அன்று கூரத்தாழ்வான் உணவு உட்கொண்ட பின் ‘திருப்தி’ என்று கூறாமல் இருக்க, அமுதனார் வேறு என்ன வேண்டும் என்று கேட்க, அமுதனாருடைய கோயில் புராணம் வாசிக்கும் கைங்கர்யத்தையும், கோயில் கொத்தையும்(நிர்வாகம்) காணிக்கையாக கேட்டுப் பெற்றார். அவற்றை உடைவரிடம் சமர்ப்பித்தார். ராமானுஜரும் மிக்க மகிழ்ச்சி அடைந்து கோயில் நடைமுறைகளில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அந்த மாற்றங்கள் கோயிலொழிகில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அமுதனாரிடமிருந்து நிர்வாகம் கைமாறிய பின், அவர் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டது. இவர் செய்து வந்த புராண வாசித்தல் மற்றும் வேறு பணிகளை கூரத்தாழ்வான் செய்து வந்தார். அதனால் அமுதனார் கோயில் பணிகளில் அதிக ஈடுபாடுகொள்ளாமல் இருந்ததை பார்த்த ராமானுஜர் வருத்தப்பட்டு, இவருக்கு ஏதாவது பொறுப்பு தர வேண்டும் என்று எண்ணினார்.
நாதமுனிகள் காலம் தொடங்கி நாலாயிர திவ்வியப் பிரபந்தம் ஸ்ரீரங்கத்தில் அரையர்கள் இசையோடு சேவித்து வந்தார்கள். சேவித்த பின், அரையர்களுக்கு பெருமாள் பிரசாதங்கள் மற்றும் மரியாதையையும் அவர்களுக்குக் கொடுத்து, பிறகு அவர்களைப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு வீதி உலா வந்து. அவர்கள் வீட்டில் விட்டு விட்டு வருவதற்குப் பெயர் பிரம்மரத மரியாதை.
‘பிள்ளை திருவரங்கப்பெருமாள் அரையரிடம்’ ராமானுஜர் இயற்பா சேவிப்பதை மட்டும் பிக்ஷையாகப் பெற்று அமுதனாரை பெரிய பெருமாள் சன்னதியில் இயற்பாவைச் சேவிக்க நியமித்தார். அப்படி சேவிக்கும் நாட்களில் அமுதனாருக்கும் அதே போன்ற பிரம்மரத மரியாதையை ஏற்படுத்தி வைக்கப்பட்டது. அமுதனார் தனக்கு ஸ்ரீகோசத்தை( புத்தகம்) பார்க்காமல் சேவிக்க வராது என்று ராமானுஜரிடம் சொல்ல, அமுதனாருக்கு புத்தகத்தைப் பார்த்துச் சேவிப்பதற்கு விசேஷமாக அனுமதி வழங்கினார். இன்றும் புத்தகத்தை பார்த்து இயற்பா சேவிக்கும் முறை இருப்பதற்கு இதுதான் காரணம்.
அமுதனார் ராமானுஜர் மீது கொண்ட பற்றின் காரணமாக ராமானுஜரை போற்றும் விதமாக சில பிரபந்தங்களை செய்து அவற்றை எம்பெருமானார் முன் வைக்க, அதை படித்துப் பார்த்த ராமானுஜர் தன்னைப் பற்றி அதிகமாக புகழ்ந்து இருப்பது தனக்கு உவப்பானதாக இல்லை என்று கிழித்துப் போட்டுவிட்டார். பிறகு கூரத்தாழ்வான் அறிவுரைப்படி ஆழ்வார்களிடத்திலும் திவ்யதேசங்களிடத்திலும் ராமானுஜர் கொண்ட பற்றைத் தெளிவுபடுத்தி, ராமானுஜ நூற்றந்தாதியை அமுதனார்பாடி, அதை ராமானுஜர் முன் வைத்தார். இதை பிரபன்ன காயத்திரி என்றும் சொல்லுவர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, சித்திரை மாதம் 11ம் திருநாளில் ராமானுஜர் கனவில் பெருமாள் தோன்றி ”இன்று என்னுடன் கூட வர வேண்டாம்” என்று சொல்லிவிட்டு, அன்று பெருமாள் வீதி புறப்பாட்டின் போது வாத்தியங்களை நிறுத்தச் சொல்லிவிட்டு, வெறும் தீப்பந்தங்கள் மட்டும் இருக்க, இயற்பாவுடன் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க, அதை பெருமாள் கேட்டுக்கொண்டு சென்றார். இந்த காரணத்தினால் இன்றும் இந்த வழக்கம் அங்கு இருக்கிறது. அதே போல் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்கும் போது கோஷ்டிக்கு வெகு அருகில் பெருமாள் எழுந்தருள்வார். அதற்குக் காரணம், இயல் கோஷ்டியில் தன்னையும் ஒரு அங்கத்தினராக ஆக்கிக்கொள்கிறார் என்பது. அதே போல் வாத்தியங்கள் இசைக்கப்படாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ராமானுஜ நூற்றந்தாதியை இயலாகச் சேவிக்க அதை நம்பெருமாள் செவிசாய்க்கும் வைபவத்திற்காக.
இன்றும் பெரிய சன்னதியில்(ரங்கநாதர் சன்னதியில்) இயற்பா சேவித்த பின், அதனுடன் நூற்றந்தாதியும் சேவிக்கப்படுகிறது. அதே வழக்கம் நாச்சியார் கோயிலிலும், ஆண்டாள், ஆழ்வார் சன்னதிகளில் பின்பற்றப்படுகிறது.
திருவரங்கத்தமுதனார் எவ்வளவு காலம் வாழ்ந்தார் என்ற குறிப்பு இல்லை. ஆனால் அவர் ராமானுஜரைக் காட்டிலும் அதிக வயதானவர் என்பதும், அவர் 105(108 என்றும் சொல்லுகிறார்கள்) ஆண்டு காலம் வாழ்ந்தார் என்பதும் தெரிகிறது.. முதலாயிரத்தில் ’கண்ணிநுண் சிறுத்தாம்பை’ப் போல,இயற்பாவோடு ராமானுஜ நூற்றந்தாதியை நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் சேர்த்துள்ளார்கள். ராமானுஜ நூற்றந்தாதியின் 108 பாட்டுக்களைச் சேர்த்தால் தான் நாலாயிர திவ்வியப் பிரபந்ததின் பாட்டுகள் எண்ணிக்கை மொத்தம் 4000 வரும் என்பது இன்னொரு ஆச்சரியம்.
கிபி 1965க்குப் பிறகு அமுதனார் வம்சத்தவர்கள் கோயில் கைங்கர்யங்களில் ஈடுபடுவதில்லை. திருவரங்கத்தமுதனார் வம்சத்தவர்கள் இன்று அமெரிக்காவிற்கும் வேறு இடங்களுக்கும் குடிபெயர்ந்து போய் விட்டதால், இயற்பா சேவிப்பதை அரையர்களே மீண்டும் செய்து வருகிறார்கள். ஆனால் திருவரங்கத்தமுதனாருக்கு ஏற்படுத்தப்பட்ட பிரம்மரத மரியாதையை அரையர்கள் பெற்றுக் கொள்வதில்லை.
திருவரங்கத்து அமுதனார் வாழ்ந்த திருமாளிகை (வீடு ) எங்கே என்று கண்டுபிடிக்க போன மாதம் ஸ்ரீரங்கம் சென்றிருந்தேன். சக்கரத்தாழ்வார் சன்னதியில் ஒருவரை விசாரித்ததில் ஸ்ரீரங்கத்தில் கிடையாது என்று அடித்து சொன்னார். பிறகு கோயிலுக்கு வெளியே வந்து சிலரிடம் விசாரித்ததில் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. இத்தனைக்கும் நான் விசாரித்தவர்கள் தினமும் கோயிலிலும் வீட்டிலும் ராமானுஜ நூற்றந்தாதியை சேவிப்பவர்கள். தொடந்து விசாரித்ததில் வடக்கு உத்திரவீதியில் இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே சென்றேன். அங்கு ஒரு வீட்டு வாசலில் தென்கலை நாமம் போட்டுக்கொண்டு பூட்டிய வீட்டு திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு இருந்த ஒருவரிடம் “திருவரங்கத்தமுதனார் வீடு இங்கே எங்கே இருக்கு?” என்றுகேட்டேன்.
அவர் காதில் என்ன விழுந்ததோ
“திருவரங்கத்துக் கொத்தனாரா ? ” என்றார்.
“இல்ல மாமா, திருவரங்கத்தமுதனார்…ராமானுஜ நூற்றந்தாதி எழுதியவர். அவர் வீடு இங்கே தான் எங்கோ இருக்குன்னு..சொல்றா.” என்றேன் தயங்கியபடி.
“தெரியலை, அவ வீட்டைப் பூட்டிண்டு எங்கோயோ போய்ட்டா, அவ வர்ற்த்துக்கு நான் காத்துண்டு இருக்கேன்…” என்று செல்போனை பார்த்துக்கொண்டு தன் கதையை சொல்ல ஆரம்பித்தார்.
நான் இவரிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த எதிர்த்த வீட்டு பெண்மணி என்னிடம் தயங்கியபடி வந்தார்.
“என்ன சாமி, யாரை தேடறீங்க?” என்றாள்.
“நாமம் போட்டவருக்கே தெரியலை, இந்த அம்மாவிற்கு.. ஹும்..நோ சான்ஸ்” என்று மனதில் நினைத்துக்கொண்டு “அமுதனார் வீடு” என்று சொல்லிக் கொண்டே, பைக்கை ஸ்டார்ட் செய்த போது “அமுதனார் வீடுங்களா ? அதோ அந்த வீடு தான்” என்றாள்.
“நீங்க எந்த அமுதனாரை சொல்றீங்க .. இவர்.. ” என்று ஏதோ சொல்ல ஆரம்பிக்க “சக்கரத்தாழ்வார் சன்னதியில் இருக்கும் அமுதனாரை தானே சொல்றீங்க, அதோ உட்கார்ந்துக்கொண்டு இருக்கிறாரே பெரியவர். அந்த வீடு தான் அமுதனார் வீடு” என்றார் அந்தப் பெண்மணி.
“அப்ப அந்த பெரியவர் யார் ?”
“அவர் அந்த வீட்டில் வாடகைக்கு இருக்கார். அமுதனார் வாழ்ந்த வீடு ரொம்ப வருஷம் முன்பே கைமாறிவிட்டது..”
எனக்கு நிறைய விஷயம் புரிந்தது. மானசீகமாக அந்த பெண்மணியை சேவித்துவிட்டு கிளம்பினேன்.
அமுதனாரை பற்றி எழுதும்படி அப்பா சொன்னதற்கு காரணம் இது தானோ என்று யோசித்தவாறு கிளம்பினேன். கொஞ்சம் தூரம் சென்று, அமுதனார் வீட்டை திரும்பிப் பார்த்தேன். மனைவி வந்து பூட்டைத் திறப்பதற்காக, அமுதனார் வீட்டு திண்ணையில் கையில் செல்போனுடன் காத்துக்கொண்டிருந்தார் அவர்.
கட்டுரையாசிரியர் தேசிகன் இணைய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமானவர். எழுத்தாளர் சுஜாதாவின் நெருங்கிய நண்பராக இருந்த இவர் ‘ஸ்ரீரங்கத்து தேவதைகள்’ என்ற சுஜாதாவின் சிறுகதைத் தொகுப்புக்கு வரைந்த கோட்டோவியங்கள் சிறப்பான கவனத்தைப் பெற்றவை
No comments:
Post a Comment